Tamilnadu

”நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்" : இளைஞரணியின் 7 ஆம் ஆண்டில் உதயநிதி வேண்டுகோள்!

தி.மு.க-வின் இளைஞரணி இன்று 7 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில், நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம் என இளைஞரணி செயலாளரும், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது குறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,” கழகத் தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் உருவாக்கப்பட்ட

தி.மு.க இளைஞரணியின் செயலாளராக 7-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். திராவிடக் கருத்தியலை மனதில் ஏந்தி தமிழ்ச்சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகவும் - கழகத்தை வலுப்படுத்திடும் வகையிலும், தலைவர் அவர்களின் சொல்லை செயலாக்குகிற பொறுப்பை உணர்ந்தே ஒவ்வொரு பணியையும் இளைஞர் அணி சார்பில் மேற்கொண்டு வருகிறோம்.

கடந்த 6 ஆண்டுகளில் நீர்நிலைகளை தூர் வாரியது முதல் கொரோனா காலத்தில் ஆற்றிய சேவைகள் என தொடரும் மக்கள் பணிகள் ஒரு பக்கம் - தேர்தல் பரப்புரைகள், பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டக் களங்கள் என அடுக்கடுக்கான கழகப் பணிகள் மறுபக்கம்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் அடித்தளத்தில் இருந்து வலிமையான கட்டமைப்போடு இளைஞர் அணி இன்று மிக நேர்த்தியாக உருவெடுத்துள்ளது. இன்றைக்கு 12,000க்கும் மேற்பட்ட பொறுப்பாளர்களோடு கழகத்தின் ராணுவமாய்த் திகழ்கிறது நம் இளைஞர் அணி. ஏதோ உட்கார்ந்த இடத்தில் இருந்து நிரப்பப்பட்ட பொறுப்புகள் அல்ல! இந்தப் பொறுப்பாளர்களை நியமிக்க ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களை நாமே நேர்காணல் செய்திருக்கிறோம்.

களத்தில் மட்டுமின்றி இணையத்திலும் கழகப்பணி ஆற்றிட சமூக வலைதளத்துக்கென கழக மாவட்டத்துக்கு ஒரு துணை அமைப்பாளரை நேர்காணல் மூலம் நியமித்து வருகிறோம். நமது கழகத் தலைவரின் கட்டளையை ஏற்று, 17,000 பேர் பங்கேற்ற “என் உயினும் மேலான” பேச்சுப் போட்டியை நடத்தி - கழகத்துக்கு 242 இளம் பேச்சாளர்களை கண்டறிந்து தந்திருக்கிறது இளைஞர் அணி.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 'கலைஞர் நூலகம்' அமைத்து அறிவொளி வீசியும், நீட் விலக்கு - இந்தி திணிப்பு எதிர்ப்பு - நிதி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்காக பொதுக்கூட்டங்கள் மூலம் பிரசார மழைப் பொழிந்தும் ஓய்வின்றி நாளும் களத்தில் சுழன்று கொண்டிருக்கிறது நம் இளைஞர் அணி!

இளைஞர் அணியின் 2-ஆவது மாநில மாநாடு 2024 மக்களவைத் தேர்தல் வெற்றிக்கு அடித்தளமிட்டது. அதுபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகத்துக்கு மாபெரும் வெற்றியைப் பெற்றுத் தர இளைஞர் அணி இப்போதே தயாராகிவிட்டது.

ஒன்றிய அரசு இழைக்கும் அநீதிகளுக்கு எதிராக தமிழ்நாட்டுக் குடும்பங்களை அணிசேர்க்கும் 'ஓரணியில் தமிழ்நாடு' முன்னெடுப்பை வெற்றியடையச் செய்ய அயராது களப்பணி ஆற்றும் இளைஞர் அணித் தோழர்கள் தான் என்னை ஊக்குவிக்கும் உற்சாகம்.

இந்த நேரத்தில் என் தோளோடு தோள் நிற்கும் இளைஞர் அணி நிர்வாகிகள் - தம்பிமார்கள் அத்தனைப் பேருக்கும் என் நன்றிகள். இளைஞர் அணிச் செயலாளராக 7ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்நாளில், நம் கழகத்தை 7ஆவது முறை அரியணை ஏற்ற உறுதியேற்போம்.” என தெரிவித்துள்ளார்.

Also Read: ”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!