Tamilnadu

இளைஞர் அஜித்குமாரின் தாயாரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்த அமைச்சர்!

சிவகங்கை மாவட்டத்தில் 28.06.2025 அன்று ஒரு வழக்கு குறித்த விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் என்பவரின் இறப்புத் தொடர்பாக, ஆறு காவல் காவலர்கள் உடனடியாக அன்றே பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு இந்த வழக்கு விசாரணையை CBCID-க்கு மாற்றி காவல்துறை டி.ஜி.பி உத்தரவிட்டுள்ளார். அதேபோல் மாவட்ட எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். மானாமதுரை டி.எஸ்.பி சண்முக சுந்தரம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரை அமைச்சர் பெரியகருப்பன், மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசி மூலமாக அஜித்குமாரின் தாயாரிடம் ஆறுதல் கூறினார்.

மேலும், இந்த விவகாரத்தில் தொடர்புடைய அனைவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு தண்டனை பெற்றுத்தரப்படும் என அஜித்குமாரின் தாயாரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின வாக்குறுதி அளித்தார்.

இதனைத் தொடர்ந்து, "முதலமைச்சர் என்னிடம் ஆறுதல் கூறினார். அப்போது தண்ணீர் கூட கொடுக்காமல் என் மகனை அடித்திருக்கிறார்கள் என்றேன். எனக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது, இந்த சம்பவத்துக்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருகிறேன் என முதலமைச்சர் கூறினார். அவர் பேசியது எங்களுக்கு ஆறுதலாக இருக்கிறது." என அஜித்குமாரின் தாயார் உருக்கமாக பேசியுள்ளார்.

Also Read: இவர் இந்து இல்லையா? : மத பிரச்சாரகர் மீது தாக்குதல் - அமைச்சர் மனோ தங்கராஜ் கண்டனம்!