Tamilnadu

’உங்களுடன் ஸ்டாலின்' முகாம்களை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும்: அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நேற்று சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக கூட்டரங்கில் சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து துறைகளின் சார்பாக செயல்படுத்தப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள், அனைத்து துறைகளின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 36,829 மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 1,14,527 மாணவ, மாணவிகள் பயன்பெற்று உள்ளனர். புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 7,752 கல்லூரி மாணவிகளும், தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் 6,453 கல்லூரி மாணவர்களும் மாதம் ரூ.1,000 பெற்று வருகின்றனர்.

பெண்களுக்கான விடியல் பயணத்திட்டத்தின் கீழ் இதுவரை மகளிர், திருநங்கைகள், மாற்றுதிறனாளிகள் மொத்தம் 9.35 கோடி நடைகள் பயணம் செய்து உள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் கீழ் 2,38,428 மகளிர் மாதம் 1,000 ரூபாய் பெற்று வருகின்றனர். கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 1,741பயனாளிகளுக்கு வீடுகள் கட்ட பணியாணைகள் வழங்கப்பட்டு இதுவரை 593 வீடுகள் கட்டப்பட்டுள்ளன.

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48 திட்டத்தின் கீழ் 11,471 நபர்களுக்கு 9,20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் காக்கப்பட்டுள்ளனர். முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 57,610 நபர்களுக்கு 53.86 கோடி ரூபாய் செலவில் உயிர் காக்கும் உயர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டுள்ளது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 3,60,498 நபர்களுக்கு தொடர் சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்த ஆய்வுக் கூட்டத்தில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஆற்றிய உரை:-

நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான அரசு அமைந்து நான்கு ஆண்டுகளை நிறைவு செய்து ஐந்தாவது ஆண்டு இப்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அரசினுடைய பல்வேறு நலத்திட்டங்கள் புதிய முன்னெடுப்புகளுடைய பலன் மக்களுக்கு சென்று சேர்வதற்கு காரணமாக இருக்கக் கூடிய அரசு அலுவலர்கள் உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும், நன்றியையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.

கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் நம்முடைய சிவகங்கை மாவட்டத்திற்கு வழங்கப்பட்ட அனைத்து (Sports kits) விளையாட்டு உபகரணங்களும் கிராமங்களில் இருக்கக்கூடிய விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு கொடுத்து முறையாக விநியோகம் செய்து, அதை திரும்பப் பெற்று அதை பராமரிக்குமாறு நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அதேபோல நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான நம்முடைய அரசு ஏற்கனவே நடைமுறையிலுள்ள திட்டங்களை மேம்படுத்தியும், முற்போக்கான பல புதிய முன்னெடுப்புகளையும் செயல்படுத்தி வருகின்றது.

மனுக்களை வெறும் தாள்களாக பார்க்கக்கூடாது. மக்களுடைய வாழ்கையாக பார்க்கவேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அடிக்கடி கூறுவார்கள். அதை மனதில் வைத்துக் கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் கேட்டுக் கொள்கின்றேன்.

அதுபோல் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விடுபட்டவர்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்கள். ஜூலை 15ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கலாம் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்கள். உங்களுடன் ஸ்டாலின் என்ற முகாம், கிட்டத்தட்ட ஒரு 10,000 முகாம்களை நடத்த வேண்டும் என்று முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

எனவே அந்த மனுக்களையெல்லாம் பெற்று ஆய்வு செய்து, தகுதியுள்ள ஒவ்வொரும் விடுபடாமல் அதிக அளவிலான மகளிர் பயன்பெறுகின்ற வகையில் நீங்கள் அந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

அரசின் சிறப்பான திட்டங்களை அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையில் அரசுக்கும் மக்களுக்கும் ஒரு நல்ல பாலமாக இருந்து பணியாற்றிட வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கின்றேன்.

இவ்வாறு துணை முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Also Read: "ஒன்றிய அரசால் வேட்டையாடப்படும் கீழடி ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன்"... சு.வெங்கடேசன் எம்.பி. விமர்சனம்!