Tamilnadu
”பள்ளிப் பருவம் முதலே கழகப் பற்றாளர்” : மிசா இராமநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
நீண்டகாலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான மிசா இராமநாதன் மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தலைமைக் கழக தீர்மானக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் மிசா இராமநாதன் அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வேதனையடைந்தேன்.
அறந்தாங்கியைச் சேர்ந்த இராமநாதன் அவர்கள் பள்ளிப் பருவம் முதலே கழகப் பற்றாளராக விளங்கி, காரைக்குடி அழகப்பா கல்லூரியில் படிக்கும்போதே மாணவர்களைத் திரட்டி மாணவர் தி.மு.கழகச் செயலாளராகப் பணியாற்றியவர் ஆவார். சென்னை சட்டக்கல்லூரியில் பயின்ற காலத்தில் அவ்வளாகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலையை நிறுவியதில் முக்கியப் பங்கு வகித்தவர் இராமநாதன் அவர்கள்.
1974-ஆம் ஆண்டு ஆவுடையார்கோயில் ஒன்றியச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தொடர்ந்து 5 முறை பொறுப்பு வகித்த சிறப்புக்குரியவர். பூவலூர் ஊராட்சி மன்ற உறுப்பினராக 13 ஆண்டுகள் இருந்துள்ளார். செயற்குழு உறுப்பினர், ஒன்றியக் குழு உறுப்பினர் எனக் கழகத்திலும் அரசு அமைப்புகளிலும் பல்வேறு பொறுப்புகளில் திறம்படச் செயலாற்றியுள்ளார்.
நெருக்கடி நிலையை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு திருச்சி மத்தியச் சிறையில் ஓராண்டுகாலம் தண்டனை அனுபவித்து 'மிசா இராமநாதன்' எனப் பெயர் பெற்ற தீரர். இவர் சிறைக்கைதியாக இருந்த காலத்தில் இவரது இல்லத்துக்குச் சென்று தலைவர் கலைஞர் அவர்கள் மதிய உணவு உட்கொண்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தது குறிப்பிடத்தக்க நிகழ்வு.
இத்தகைய நீண்டகாலப் பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரரான மிசா இராமநாதன் அவர்களின் பணிகளைப் பாராட்டி கடந்த ஆண்டு சென்னை நந்தனத்தில் நடைபெற்ற கழக பளவ விழா நிறைவு முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருது வழங்கிச் சிறப்பித்திருந்ததை இப்போது நினைவுகூர்கிறேன்.
அன்னாரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும் புதுக்கோட்டை மாவட்டக் கழகத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“அவதூறு பிரச்சாரத்தை கட்டவிழ்த்து நீலிக்கண்ணீர் வடிக்கிறார் பழனிசாமி” : அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி!
-
சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை மெட்ரோவுடன் இணைப்பது எப்போது? - கனிமொழி MP கேள்விக்கு ஒன்றிய அரசு பதில்!
-
"திராவிட மாடல் ஆட்சியில் கோயம்புத்தூர், மதுரை IT நகரங்களாக உருப்பெறுகிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி !
-
இனி பேரிடர் குறித்து கவலையில்லை... நாசாவுடன் சேர்ந்த இஸ்ரோ : விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் !
-
நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் : "நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும்" - உச்சநீதிமன்றம் கருத்து !