Tamilnadu
ரூ.6,876 கோடி.. 238 திட்டங்கள்: வளமிகு சென்னையாக மாறும் வட சென்னை - பணிகளை துரிதப்படுத்திய துணை முதல்வர்!
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து மாவட்டங்களிலும் சமமான வளர்ச்சி என்ற அடிப்படையில் சாலைகள், பாலங்கள், வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகின்றது.
தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை உலக அளவில் முக்கியத்துவம் பெற்ற நகரமாக தொடர்ந்து வேகமாக முன்னேறி வருகின்றது. சென்னையின் அனைத்து பகுதிகளிலும் சீரான வளர்ச்சியடைவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றார்.
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் பல்வேறு அரசு துறைகளின் சார்பில் 238 பணிகள் 6,876.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (20.5.2025) தலைமைச் செயலகத்தில் வடசென்னை வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்து பல்வேறு அரசுத் துறை உயர் அலுவலர்களிடம் ஆய்வு மேற்கொண்டார்.
வட சென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன பல அடுக்கு வாகன நிறுத்துமிடத்துடன் கூடிய பிராட்வே பேருந்துநிலையம் உட்பட பேருந்து நிலையங்களின் மேம்பாட்டு பணிகள், சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், 53.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ நிறுவனத்தில் புதிய சூப்பர் ஸ்பெசாலிட்டி பிரிவு கட்டடம் கட்டும் பணி உட்பட ஆய்வகங்களுடன் கூடிய நகர்ப்புர ஆரம்ப சுகாதார நிலைய கட்டடங்கள், மகப்பேறு மருத்துவமனை கட்டடங்கள், பள்ளிக்கூட கட்டடங்கள், பூங்காக்கள், 7.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கொளத்தூரில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் அமைத்தல் உட்பட உள்ளரங்க விளையாட்டு மைதானங்கள், உடற்பயிற்சி கூடங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மேலும் குடிநீர் விநியோக கட்டமைப்பினை மேம்படுத்தும் பணிகள், கழிவுநீர் அகற்றும் கட்டமைப்புகளை சீரமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகள், நூலக கட்டடங்கள், சமுதாயக்கூடங்கள், கடற்கரைகளை அழகுபடுத்தி மேம்படுத்தும் பணிகள், ஏரிகளை மேம்படுத்துதல், மீன் அங்காடிகள், நவீன காய்கறி விற்பனை கூடங்கள் கட்டுதல், நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகள், புதிய மின்மாற்றிகள் அமைத்தல், துணை மின் நிலையங்கள் அமைத்தல் உட்பட மின் விநியோக சீரமைப்பு பணிகள், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் உள்ளிட்ட 238 பணிகள் 6,876.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறைவேற்ற மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்கள்.
இவற்றில், இதுவரை 8 இடங்களில் LPG மூலம் இயங்கக்கூடிய எரிவாயு மயானங்கள் அமைத்தல், 7 இடங்களில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல், மறுசீரமைக்கப்பட்ட 3 பூங்காக்கள், மழைநீர் உறிஞ்சும் 2 (ஸ்பான்ச்) பூங்காக்கள், ஏரி குளங்கள் சீரமைத்து அழகுபடுத்தும் 6 பணிகள், வெள்ளநீர் தடுப்பு பணிகள் உள்ளிட்ட 774.93 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 47 பணிகள் முடிவுற்று பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர, தொடர் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அரசுத் துறை உயர் அலுவலர்களுக்கு அறிவுருத்தினார்.
மேலும் இதுகுறித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப்பதிவில், “ஒட்டுமொத்த சென்னையின் வளர்ச்சியை சீராக்கிட மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வட சென்னை வளர்ச்சித் திட்டத்தை அறிவித்தார்கள். இந்தத் திட்டத்தின் கீழ், ரூ.6,876 கோடி அளவுக்கு வடசென்னை பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தப் பணிகளின் விவரங்கள் அவற்றின் தற்போதைய நிலை குறித்து ஆலோசனை மேற்கொள்ளும் வகையிலான உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தை தலைமைச் செயலகத்தில் இன்று நடத்தினோம். பிராட்வே பேருந்து நிலையம் உட்பட பல்வேறு பேருந்து நிலையம் மற்றும் சாலை மேம்பாட்டுப் பணிகள், திடக்கழிவு மேலாண்மைப் பணிகள், மருத்துவமனைகள், விளையாட்டு சார்ந்த கட்டமைப்புகள், மின்சாரத்துறை சார்ந்த பணிகள், கடற்கரையை அழகுபடுத்தும் திட்டங்கள் என வட சென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 238 பணிகளையும் விரைந்து முடித்திட அறிவுத்தினோம்.
இந்தக் கூட்டத்தில், வடசென்னை வளர்ந்த சென்னையாகவும், வளமிகு சென்னையாகவும் உருவெடுக்க அயராது உழைக்க வேண்டும் என்று எடுத்துரைத்தோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம் : முன்னாள் தேர்தல் ஆணையர் அசோக் லவாசா கடும் எதிர்ப்பு!
-
'உடன்பிறப்பே வா' - களம் 2026 நம்பிக்கை பன்மடங்கு பெருகுகிறது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
என் பள்ளி! என் பெருமை!! : மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக கலைப்போட்டிகள்!
-
பாஜக வழக்கறிஞருக்கு 4 மாதம் சிறை தண்டனை... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி - காரணம் என்ன ?
-
தொழில் செய்வதற்கு ஏற்ற மாநிலங்கள் பட்டியல்... திராவிட மாடல் ஆட்சியால் முதலிடம் பிடித்த தமிழ்நாடு !