Tamilnadu

கொளத்தூரில் ரூ.7.5 கோடியில் நீச்சல்குளம் & முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கம்! : துணை முதலமைச்சர் ஆய்வு!

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (16.5.2025) நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கில் 50 லட்சம் ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவீன குளிரூட்டப்பட்ட உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு அமைக்கப்பட்டுள்ள நவீன விளையாட்டு பயிற்சி உபகரணங்களையும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் பயிற்சி மேற்கொள்வதையும் பார்வையிட்டார்.

மேலும் நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கில் புதிதாக நிறுவப்பட்டுள்ள தானியங்கி பந்து எறியும் இயந்திரத்தின் மூலம் எறியப்படும் பந்துகளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விடுதி மாணவிகள் திறமையாக எதிர்கொண்டு விளையாட பயிற்சி மேற்கொள்வதையும் பார்வையிட்டார்.

இந்த இயந்திரத்தில் ஒரே நேரத்தில் 100 பந்துகள் வைக்கப்பட்டு, தானியங்கி முறையில் பந்துகள் எறியப்படுவதன் மூலம் பயிற்சி மேற்கொள்வதால் நன்கு பயிற்சி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

தொடர்ந்து, துணை முதலமைச்சர் அவர்கள் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டு அரங்கம் கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உள்ளரங்க நீச்சல் குளம் மற்றும் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வடசென்னை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் உள்ளரங்க இறகு பந்து மைதானம் ஆகியவை கட்டப்பட்டு வருகின்றன.

இந்த பணிகளின் முன்னேற்ற விவரங்கள் குறித்து துணை முதலமைச்சர் அவர்கள் அலுவலர்களிடம் கேட்டறிந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Also Read: “சங்கிகளின் கொச்சைப்படுத்தும் அரசியல்தான் சமூகத்தை நாசப்படுத்தி வருகிறது!” : முரசொலி கண்டனம்!