Tamilnadu

தமிழ்நாடு வளர்ந்துள்ளது... உயர்ந்துள்ளது... தமிழ்நாட்டைப் பாராட்டுங்கள் - முரசொலி!

முரசொலி தலையங்கம் (09/05/2025)

தமிழ்நாட்டைப் பாராட்டுங்கள்!

நாளிதழ்களின் ஆசிரியர்கள், ஊடக நிறுவனங்களின் அதிபர்கள் சந்திப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 6 ஆம் தேதியன்று சென்னை கலைவாணர் அரங்கில் நடத்தினார்கள். தமிழ்நாட்டின் அனைத்து முன்னணி ஊடக, பத்திரிக்கையாளர்கள் இதில் கலந்து கொண்டார்கள். கடந்த நான்காண்டு காலத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் நிகழ்த்திக் காட்டப்பட்ட திட்டங்கள், அதன் மூலமாக அடைந்த சாதனைகள் இக்கூட்டத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

கோவிட் பெருந்தொற்று இரண்டாம் அலை இருந்த மிக மிக நெருக்கடியான சூழலில் தி.மு.க. ஆட்சி அமைந்தது. அனைத்து வகையிலும் மிகக் கடுமையான நெருக்கடி நேரத்தில், அனைத்துத் துறைகளும் அந்தப் பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் துறைகளாக முதலமைச்சர் அவர்களால் மாற்றப்பட்டது. இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்தி, மூன்றாம் அலை பரவாமல் தடுத்து, மிகப்பெரிய சாதனையைச் செய்து மக்களைக் காத்தார் முதலமைச்சர் அவர்கள்.

முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாகச் சீர்கேட்டால் தரைமட்டத்துக்குப் போன நிர்வாகம் – எந்த ஒத்துழைப்பும் தராத ஒன்றிய அரசு; இவை இரண்டுக்கும் மத்தியில் ஆட்சியை நடத்தத் தொடங்கினார் முதலமைச்சர் அவர்கள். இத்தகைய சூழலில்தான் தமிழ்நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளது. ஏற்றுமதி வளர்ந்துள்ளது. வேலை வாய்ப்புகள் பெருகியுள்ளன. தொழில்கள் அதிகமாகி வருகிறது. அனைத்து உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது. அனைத்து சமூகக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக ஆகி வருகிறது. சட்டம் ஒழுங்கு மிகச் சீராக இருப்பதும், உள்கட்டமைப்புகள் மிக நன்றாக இருப்பதும்தான் இதற்குக் காரணம்.

2024 – 25 ஆம் ஆண்டில் தமிழ்நாடு 9.69 விழுக்காடு உண்மையான பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. 10 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் உள்ள மாநிலமாக, அதிக தொழிற்சாலைப் பணியாளர்கள் உள்ள மாநிலமாக, அதுவும் பெண் பணியாளர் அதிகம் உள்ள மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அதே நேரத்தில் தொழில் அமைதியும் பேணப்படுகிறது. தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுவதில் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. தொழில் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து வருவதற்கு இதுதான் காரணம்.

நிதிப் பற்றாக்குறை திறம்படக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. வருவாய் பற்றாக்குறை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மாநில உள்நாட்டு உற்பத்தியில் கடனின் விகிதம் குறையும் போக்கில் உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, சிறந்த அரசு என்று நாம் மட்டும் சொல்லிக் கொள்ளவில்லை. ஒன்றிய அரசே சொல்கிறது. இவை அனைத்தையும் ஒன்றிய அரசு கொடுத்துள்ள விருதுகளே அங்கீகரித்துள்ளன.

விளையாட்டுகளை ஊக்குவிக்கும் சிறந்த மாநிலமாகத் தமிழ்நாடு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்குச் சிறப்பாகச் சேவை புரிந்த முதல் மாநிலமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் தமிழ்நாடு விருது பெற்றுள்ளது. சிறந்த நீர் மேலாண்மைக்காக தேசிய அளவில் மூன்றாம் இடம் என்ற விருதைப் பெற்றுள்ளது. மகப்பேறு சிக்கல்கள் உள்ள கர்ப்பிணித் தாய்மார்களைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு முதலிடம் என்ற விருதைப் பெற்றுள்ளது. சுகாதாரத்திற்கான மதிப்பீட்டில் தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்றமைக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது. தூய்மையைப் பராமரிப்பதில் சிறந்து விளங்கியதற்காக தேசிய அளவில் மூன்றாவது பரிசு கிடைத்துள்ளது. காசநோயை ஒழிக்க தமிழ்நாடு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டி – தமிழ்நாட்டின் ஒன்பது மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்தும் குறு, சிறு நிறுவனங்களின் சிறந்த செயல்திறனுக்காகத் தமிழ்நாட்டிற்கு விருது வழங்கப்பட்டது. மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஐ.நா. விருதைப் பெற்றது. மாநில கூட்டுறவு வங்கியின் சிறந்த சேவைக்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே விருது வழங்கி இருக்கிறார்கள்.

ஒரு புதிய நகரம் வரப்போகிறது. உலகளாவிய விளையாட்டு நகரம் உருவாக்கப்பட உள்ளது. இராமேஸ்வரம், ஓசூரில் புதிய விமான நிலையங்கள் வர இருக்கின்றன. கும்பகோணத்தில் கலைஞர் பெயரால் பல்கலைக் கழகம் எழ இருக்கிறது. மதுரை, கோவையில் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தொடங்க இருக்கின்றன. கோவையில் நகைத் தொழில் பூங்காவும், ஓசூரில் அறிவுசார் பெருவழித் தடமும், ஒரகடம் – செய்யார் தொழில் வளர்த்தடமும் வர இருக்கின்றன. இவை அனைத்தும் காட்சிப்படுத்தப்படும் போது நாளிதழ் ஆசிரியர்களும், ஊடகவியலாளர்களும் மலைத்துப் போனார்கள்.

“எங்களுக்கு இது ஐ ஓப்பனாக இருந்தது” என்றும், ‘இத்தனை சாதனைகள் செய்யப்பட்டுள்ளது என்பது எங்களுக்கு இதுவரை தெரியாது’ என்றும், ‘ஒத்துழைக்க மறுக்கும் ஒன்றிய அரசைச் சமாளித்து இவ்வளவு காலம் ஆட்சி நடத்தியதும், இத்தனை சாதனைகளைச் செய்ததும் மாபெரும் சாதனை தான்” என்றும் பத்திரிக்கையாளர்கள் மனமுவந்து அந்த அரங்கில் பாராட்டினார்கள். இவை அனைத்தும் அவர்களது பத்திரிக்கைகளில், ஊடகங்களில் எதிரொலிக்க வேண்டும் என்பதுதான் நமது விருப்பம் ஆகும்.

இந்தப் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள் இதனையே வேண்டுகோளாக வைத்தார்கள். “இந்தியாவுக்கே முன் மாதிரியான திட்டங்களைக் கொடுத்திருக்கிறோம். பல மாநில அரசுகள், இங்கு வந்து நமது திட்டங்களைப் பார்த்துச் சென்றுள்ளார்கள். இவை மிக நல்ல திட்டமாக இருந்தால் அதனை மனப்பூர்வமாக பாராட்டத் தயங்கக் கூடாது. விமர்சிப்பதில் அதிக ஆர்வம் காட்டும் சில ஊடகங்கள், ஒரு நல்ல திட்டத்தைப் பாராட்டி எழுதும் போது மிக மென்மையாகப் பாராட்டுவது ஏன் என்று தெரியவில்லை. பாராட்ட வேண்டியதை பாராட்டினால்தான், விமர்சிக்கும் போது அதற்கு உரிய மரியாதையும், மதிப்பும் கிடைக்கும். எனவே தயங்காமல் விமர்சிப்பதைப் போல தயங்காமல் பாராட்டுங்கள். தனிப்பட்ட என்னைப் பாராட்ட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை. தமிழ்நாட்டைப் பாராட்டுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.

தமிழ்நாடு வளர்ந்துள்ளது, உயர்ந்துள்ளது, மேன்மை அடைந்துள்ளது. எனவே, தயங்காமல் தமிழ்நாட்டைப் பாராட்டுங்கள்! பாராட்டுங்கள்!

Also Read: ”சுயநல ஊழல் கூட்டணிதான் அதிமுக - பாஜக கூட்டணி” : முரசொலி தலையங்கம்!