Tamilnadu

"போப் பிரான்சிஸின் சமூகநீதிப் பயணங்கள் வரலாற்றில் நிலைத்து நிற்கும்" - அமைச்சர் நாசர் இரங்கல் !

இன்றைய உலகில் பிளவுவாதமும், வெறுப்பும் அதிகரித்திருக்கிற வேளையில் ஒரு சில தலைவர்களே மனிதம் போற்றும் சமநிலைக்காக பாடுபட்டு வெற்றி பெறுவார்கள். அதுபோன்ற ஒரு மாபெரும் தலைவர்தான் போப் பிரான்சிஸ். கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் ஆண்டவரின் மறைவை உலகமே துக்க நாளாக அனுசரிப்பதற்கு காரணம் அவரது மாபெரும் சீர்திருத்த பணிகள் தான். 140 கோடி மக்களைக் கொண்ட கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக வானளாவிய அதிகாரம் இருந்த போதிலும் அதனை எளிய மக்களின் மேம்பாட்டிற்காகவே பயன்படுத்தினார்.

மதத் தலைவராக இருந்த போதிலும், மதங்களைக் கடந்து உலக மக்களை நேசித்ததாலேயே இன்றைய தினம் உலகம் முழுவதும் போற்றப்படுகிறார். எல்லாருக்கும் எல்லாம் என்ற கொள்கையில் உறுதியாக இருந்ததால், திருச்சபையின் கதவுகளை அனைவருக்கும் திறந்தார். திருச்சபையால் பெரும்பாலும் விலக்கி வைக்கப்பட்ட LGBTQ- வினர்களை ஏற்றுக்கொண்டார்.

திருநங்கை விசுவாசிகளின் ஞானஸ்தானத்தை அங்கீகரித்தார். ஏழைகள், சொந்த நாட்டைவிட்டு வெளியேறி வேறு நாட்டில் குடியேறிய புலம்பெயர் மக்கள் என விளிம்புநிலை மக்களை பாதுகாப்பதில் உறுதியாக இருந்தார் போப் ஆண்டவர். தன் பாலினத்தவர்களை புறக்கணிக்கும் பழமைவாத்தை எதிர்த்து குரல் எழுப்பினார். இதுபோன்ற முற்போக்கான செயல்களின் மூலம் திருச்சபைக்குள், பாரம்பரியவாதிகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்புகளை எதிர்கொண்ட போதிலும் மக்கள் பக்கமே நின்றார்.

குரலற்றவர்களின் குரலாக போப் பிரான்சிஸ் இருந்ததால் தான் அவரை மக்களின் போப் என்று கொண்டாடி வருகின்றனர். விவகாரத்து பெற விரும்பும் கத்தோலிக்கர்கள் தேவாலயத்தில் மறுமணம் செய்து கொள்ளும் வகையில் திருமண ரத்து செயல்முறையை எளிமையாக மாற்றும் வகையில் சீர்திருத்தத்தை மேற்கொண்டார். மதநல்லிணக்கத்தை அழுத்தமாக வலியு- றுத்தி வந்த போப் பிரான்சிஸ், கத்தோலிக்கர்களுக்கும் -இஸ்லாமியர்களுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தும் உடன்படிக்கையை முன்னெடுத்தார்.

இதற்காக அல் அசார் இமாமுடன் “மனித சகோதரத்துவ” உடன்படிக்கையிலும் கையெழுத்திட்டார். மதங்களுக்கு இடையேயான உரையாடல்களுக்காக போப் ஆண்டவரின் முன்னெ- டுப்புகள் கத்தோலிக்க உலகத்தைத் தாண்டியும் அவருக்கு பெரும் மரியாதையை பெற்றுத்தந்தன. ஏற்றத்தாழ்வு, வெறுப்பு, சர்வாதிகாரம் ஆகியவற்றின் ஆதிக்கம் சில காலங்கள் தலைதூக்கினாலும், போப் பிரான்ஸிஸ் போன்றவர்கள் அதனை சரி செய்யும் தலைவர்களாக உருவெடுத்து சமூகத்தை சமநிலைப்படுத்துகின்றனர்.

உயர்ந்த எண்ணம் கொண்ட தலைவர்களின் செயல்பாடுகள் எப்போதும் மக்களுக்காகவே இருக்கும் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் திராவிட மாடல் நாயகர் முதலமைச்சர் தளபதி அவர்களும் தமிழ்நாட்டில் முற்போக்கான ஆட்சி செய்து வருகிறார். எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் முதலமைச்சர் தளபதியின் ஒரே கொள்கை. அதனால்தான், பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் எளிய மக்களுக்கும், சமூகத்தால் புறக்கணிக்கப்படும் விளிம்புநிலை மக்களுக்குமான ஏராளமான நலத்திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறார்.

உடலில் குறைபாடு உடையவர்களை கருணை உள்ளத்தோடு மாற்றுத்திறனாளிகள் என பெயரிட்டு அழைத்தார் முத்தமிழறிஞர் கலைஞர். அவரின் புதல்வரான எங்கள் தலைவர், விளிம்புநிலை சமூகத்தை பிரதான நீரோட்டத்திற்கு கொண்டுவரும் உன்னத சிந்தனையுடன் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி பிரதிநிதித்துவம் அளித்து மானுட சமுதாயத்தில் உயர்ந்து நிற்கிறார்.

அன்றைய துணை முதலமைச்சர், இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தி நிறைவேற்றிய அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு சட்டம், உயர் கல்வி நிறுவனங்களான மருத்துவம், பொறியியல், சட்டம், கலைக் கல்லூரிகளில் அந்தச் சமூகத்தினர் அதிக இடங்கள் பெற்று முன்னேற வழி ஏற்படுத்தியிருப்பது, சமத்துவத்தை நோக்கிய திராவிட மாடல் ஆட்சியின் சான்றுகளுள் ஒன்று,

புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம், விடியல் பயணத் திட்டம், நான் முதல்வன் உள்ளிட்டவை சமூக நீதி பயணங்களை வலுப்படுத்தும் முத்தான திட்டங்கள். தமிழ்நாட்டைப் பின்பற்றி இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தபடுகிறது. இல்லம் தேடி மருத்துவம் திட்டத்திற்கு ஐ.நா அமைப்பு விருது அளித்து கவுரவித்திருக்கிறது.

முதல்வரின் மனதிற்கு நெருக்கமான காலை உணவுத் திட்டம், வெளி மாநிலங்கள் மட்டுமல்லாமல் இங்கிலாந்து, கனடா போன்ற வெளிநாடுகளிலும் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சர் வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கும் அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ், 174 மாணவர்கள் வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் முதல்வர்களை உருவாக்குகிறார் நம்முடைய முதலமைச்சர். “நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக வேண்டும்” என்ற உயர்வான எண்ணத்தின்படி, செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ் தற்போது 50 மாணவர்கள் ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி பெற்று மக்களுக்கு சேவையாற்றவுள்ளனர்.

இதுமட்டுமல்ல, இறையாண்மையை பாதுகாக்கவும் முன்களத்தில் இருந்து தீவிரமாக போராடி வருகிறார் கழகத் தலைவர். மதங்கள் வேறுபட்டிருந்தாலும், மனங்கள் ஒன்றுபட்டு இருக்க வேண்டும்! மனதால் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்! அதுதான் பண்பட்ட - முன்னேறிய சமூகத்துக்கு அடையாளமாக விளங்கிட முடியும்! அப்படிப்பட்ட சமூகமாகத்தான், தமிழ்ச் சமூகம் விளங்குகிறது! இதற்கு அடித்தளம் போட்டது, நம்முடைய திராவிட இயக்கம்! மக்களின் மத உணர்வுகளை மதித்து இறை வழிபாட்டுத்தலங்களை மேலும் வளப்படுத்துவதில் மிகுந்த அக்கறையுடன் செயல்படும் திராவிட மாடல் ஆட்சியில், 2,500க்கும் மேற்பட்ட கோயில்களின் திருப்பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு திருகுடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளன.

ஜெருசலேம் புனித பயணம் செல்வதற்கான நிதியுதவி வழங்கும் திட்டத்தில், இப்போது ஒரு பயனாளிக்கு நிதி உதவியாக 37 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. ஆண்டொன்றுக்கு இந்தத் திட்டத்தில் 600 பயனாளிகள் பயனடைகிறார்கள். இதில் 50 இடங்கள், கன்னியாஸ்திரிகளுக்கும், அருட்சகோதரிகளுக்கும் ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றன. தொன்மை வாய்ந்த தேவா- லயங்களைப் புனரமைக்கும் திட்டத்தின்கீழ், தேவலாயங்களை புனரமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சிறுபான்மையின மக்கள் பயன்பெற பல்வேறு நலத் திட்டங்களுக்கு கடந்த 4 ஆண்டுகளில் 405 கோடி ரூபாய் அளவில் அரசு நிதி தரப்பட்டிருக்கிறது. சிறுபான்மையின கிராமப்புற பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க 76 ஆயிரத்து 663 மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தியா என்ற பன்முகத்தன்மை கொண்ட நம்முடைய அழகிய நாட்டில், அனைவரும் சமத்துவமாக - ஒற்றுமையாக இருக்க வேண்டும். இதற்கு தடையாக, மதத்தை அரசியலுக்குப் பயன்படுத்தி, மக்களின் உணர்வுகளைத் தூண்டி, பிளவுவாத அரசியல் செய்பவர்களை எதிர்ப்பதற்கு கழகத் தலைவர் எப்போதும் தயங்கியதில்லை.

ஒவ்வொரு குடிமகனும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை பாதுகாப்பது அரசின் கடமை என்பதை அழுத்தமாக வலியுறுத்தும் நம்முடைய தலைவர், நாட்டின் மத நல்லிணக்கத்திற்கு இடையூறாக இருக்கும் வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான சட்டப் போராட்டங்களையும் தீவிரமாக முன்னெடுத்துள்ளார்.

காஷ்மீர் சிறப்புப் பிரிவு ரத்து, குடியுரிமைச் சட்டம் என நாடு முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் தமிழ்நாட்டில் இருந்துதான் முதல் குரல் ஒலிக்கும். அது கழகத்தின் ஜனநாயகக் குரலாக இருக்கும்.

இதுபோன்று சூழலில் தான், சமூநீதிக்காக வாழ்நாள் எல்லாம் பாடுபட்ட போப் ஆண்டவரின் மறைவுச் செய்தியைக் கேட்டு முதலமைச்சர் தளபதி அவர்கள் மிகுந்த வேதனையடைந்தார். சட்டப்பேரவை மூலம் இரங்கல் தெரிவித்ததோடு, அரசு சார்பில் துக்கமும் அனுசரிக்கும்படி கேட்டுக்கொண்டார்.

தமிழ்நாடுஅரசின் பிரதிநிதிகளாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சரான என்னையும், சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் அவர்களையும் ரோம் நகர் வாடிகனில் நடைபெறும் “மக்கள் போப்பின்” இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்க அனுப்பி வைத்தார். மனிதம் போற்றும் கத்தோலிக்க திருச்சபையின் தந்தை போப் பிரான்சிஸுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நேரில் மரியாதை செலுத்துவதற்கான நோக்கமும் இதுதான். இதை நான் மட்டும் சொல்லவில்லை, கத்தோலிக்க திருச்சபையின் கார்டினல்கள் ஓஸ்வால்டு கிரேசியஸ், கிளிமீஸ் உள்ளிட்டோரே வாடிகனிலேயே இதை பதிவு செய்திருக்கின்றனர்.

அதாவது,“கத்தோலிக்க திருச்சபையில் முற்போக்கான சீர்திருத்தங்களை செய்த போப் பிரான்சிஸின் மகத்தான பணிகளுக்கு மரியாதை செலுத்தும் விதமாக சமூக நீதிக்கான நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசு சார்பில் பிரதிநிதிகளை அனுப்பி வைத்திருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள்”மக்கள் தலைவர்களின் பணிகள் எப்போதும் முடிவடையாது. அது, தந்தை பெரியார், பேரறிஞர்அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், கழகத் தலைவர்- முதலமைச்சர் தளபதி போன்றஆளுமைகள் மூலம் தொடர்ந்துகொண்டேஇருக்கும்.

Also Read: "கோடை வெப்பத்தை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வார்டுகள்" - அமைச்சர் மா.சுப்பிரமணியன் !