Tamilnadu

“செமி கண்டக்டர் தலைநகரமாக தமிழ்நாடு!” : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!

தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2025 - 26ஆம் நிதியாண்டிற்கான தொழில்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவர் பேசியது பின்வருமாறு,

தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்சூழல் மற்றும் தொழிலாளர்கள் மீது எங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. தொழில்துறை வளர்ச்சி தடை இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது.

அண்மையில், சாம்சங் நிறுவனம், தமிழ்நாட்டிலிருந்து பிற மாநிலத்திற்கு செல்ல உள்ளதாக பல புரளிகளை கிளப்பி வருகின்றனர். ஆனால், சாம்சங் நிறுவனம் தமிழ்நாட்டில் கூடுதலாக ரூ.1,000 முதலீடு செய்ய இருக்கிறது, வேலை வாய்ப்பும் அதிகரிக்க உள்ளது.

மேலும், மிக முக்கியமான முடிவு ஒன்றை எடுத்து இருக்கிறோம். இந்திய அளவில் செமி கண்டக்டர் துறையில் உற்பத்தி மற்றும் இறக்குமதி - ஏற்றுமதியில், தமிழ்நாடு தான் முன்னணியில் உள்ளது. எத்தனை தடைகள் வந்தாலும், தமிழ்நாட்டை செமி கண்டக்டரின் தலைநகரமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றுவார்.

செமி கண்டக்டர் டிசைனிங் தொடர்பாக, புதிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டுக்கு வர உள்ளன. மேலும் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் தொழில் வளர்ச்சி மேம்படுத்தி உள்ளோம். தோல் அல்லாத காலணி துறையில் தைவாண்ய நிறுவனம், ஜப்பானிய நிறுவனம், கொரியன் நிறுவனம் தமிழ்நாட்டுக்கு வரவுள்ளது

தமிழ்நாட்டில் 1973 - 2021 வரை 24 சிப்காட் மட்டுமே உருவாக்கப்பட்டது. ஆனால், திராவிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில், 9 புதிய மாவட்டங்களில் 30 சிப்காட் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 34 மாவட்டங்களில் சிப்காட் தொழில் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த திராவிட மாடலின் முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார்.

ஒரு பகுதிக்கு முதலீடு கொண்டு சேர்த்தால், அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும் என்ற அடிப்படையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார்.

பாதுகாப்பும், திறமையாளர்களும் நிறைந்த மாநிலமாக தமிழ்நாடு இருப்பதால்தான் தொழில் நிறுவனங்கள் இங்கு அதிக முதலீடு செய்கிறார்கள். தமிழ்நாட்டில் படித்தால் போதும் நிச்சயமாக வேலைவாய்ப்பு உண்டு என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. எந்தெந்த படிப்புகளுக்கு என்னென்ன வேலைவாய்ப்பு உள்ளதோ? அதற்கேற்ற முதலீட்டை திராவிட மாடல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வருவார்.

பொருளாதார வளர்ச்சியில், 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை நோக்கி தமிழ்நாடு சரியான வேகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது.

Also Read: 2025 - 26ஆம் நிதியாண்டில் ‘தொழில்துறை’க்கான அறிவிப்புகள்! : முழு விவரம் உள்ளே!