Tamilnadu

”பயங்கரவாத தீவிரவாத அமைப்புகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!

தமிழ்நாடு சட்டமன்றத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

பேரவைத் தலைவர் அவர்களே, ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற, பயங்கரவாத தாக்குதலுக்குக் கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் இப்பேரவையின் வாயிலாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் நேற்றைய தினம் பயங்கரவாதிகள் மிகக் கொடூரமான ஒரு தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள். இதில் இதுவரை 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்ட தகவல் நமக்கெல்லாம் கடும் அதிர்ச்சியையும் துயரத்தையும் அளித்துள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தலமான பெஹல்காமிற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மட்டுமல்ல; உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றார்கள்.

நேற்றையதினம் அங்கு பைசாரன் என்ற மலைப்பகுதியில் இருந்து திடீரென நுழைந்த தீவிரவாதிகள் சுற்றுலாப் பயணிகள் மீது இரக்கமற்ற வகையில் கொடூரமான தாக்குதலை நடத்தி இருக்கிறார்கள்.

அப்பாவி மக்கள் மீது நடத்தப்படும் இதுபோன்ற பயங்கரவாத தாக்குதல் கடுமையாக கண்டிக்கத்தக்கதாகும். சமீபத்திய ஆண்டுகளில் பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்று அம்மாநில முதலமைச்சர் மாண்புமிகு உமர் அப்துல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. அங்கு எத்தகைய மோசமான, கொடூரமான, பயங்கரமான சூழல் நிலவுகிறது என்பதற்கு இது எடுத்துக்காட்டு ஆகும். பயங்கரவாத – தீவிரவாத அமைப்புகள் எத்தகைய எண்ணம் கொண்டவையாக இருந்தாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

காஷ்மீரில் நடந்துள்ள இந்தத் தாக்குதல் நம் அனைவரது மனச்சாட்சியையும் உலுக்குவதாக அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு குல்காமில் அமர்நாத் பயணம் சென்ற மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டார்கள். 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப். வீரர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். இதன் தொடர்ச்சியாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மனிதாபிமானமற்ற வகையில் அப்பாவி மக்களின் மீதான இது போன்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு இந்திய மண்ணில் குறிப்பாக, நமது இந்திய ஜனநாயகத்தில் அறவே இடமில்லை. இதனைக் கண்டிப்பதோடு நமது கடமை முடிந்துவிடவில்லை. இது போன்ற செயல்கள் நடப்பதை அறவே தடுத்தாக வேண்டும். பேரவைத் தலைவர் அவர்களே, கொடூரமாகக் கொல்லப்பட்ட அப்பாவி மக்களுக்கு அஞ்சலி செலுத்தும்விதமாக அனைவரும் எழுந்து இரண்டு நிமிட அமைதி அஞ்சலியைச் செலுத்த தங்களது மேலான அனுமதியைக் கோருகிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் பேசினார்.

பின்னர், முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, உறுப்பினர்கள் அனைவரும் இரண்டு நிமிடம் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர். பின்னர் அனைத்துக் கட்சியின் சார்பில் உறுப்பினர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலையும், கண்டனங்களையும் தெரிவித்து உரையாற்றினர்.

பிறகு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேரவைத் தலைவர் அவர்களே, காஷ்மீரில் நடைபெற்ற துயர சம்பவம் குறித்து இந்த அவையில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சித் தலைவர்களும், உறுப்பினர்களும் தங்களுடைய வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்திருக்கிறார்கள். நமது நாட்டையே பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கக்கூடிய இந்தக் கொடூரமான சம்பவத்திலே பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நமது அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு, இதுபோன்ற நிகழ்வுகள் எதிர்காலத்தில் நிகழாமல் தடுத்திட ஒன்றிய அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்திட வேண்டுமென்று இந்த அவையின் மூலமாக நான் கேட்டுக் கொள்கிறேன்.

அத்தகைய அனைத்து நடவடிக்கைகளை எடுக்கிற நேரத்தில் தமிழ்நாடும், தமிழ் மக்களும் என்றும் துணை நிற்பார்கள் என்று உறுதியை உங்கள் அனைவரின் சார்பிலும் நான் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்தார்.

Also Read: காஷ்மீர் தாக்குதல் - பலி எண்ணிக்கை 29 ஆக உயர்வு : பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது!