Tamilnadu

சென்னை விமான நிலையம் : ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள் தாமதம்... பயணிகள் அவதி !

சென்னை விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், டெல்லி, மும்பை ஆகிய இடங்களுக்கு செல்லும் 3 ஏர் இந்தியா பயணிகள் விமானங்கள், 3 மணி நேரம் வரை தாமதம் ஆகியுள்ளது. இதனால் பயணிகள் பெரும் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சென்னையில் இருந்து நள்ளிரவு 12.30 மணிக்கு, சிங்கப்பூர் செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், இன்று 3 மணி நேரம் தாமதமாக, அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து, 164 பயணிகளுடன் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றது.

அதைப்போல் இன்று காலை 8 மணிக்கு, சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய ஏர் இந்தியா பயணிகள் விமானம், 3 மணி நேரம் தாமதமாக காலை 11 மணிக்கு, புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காலை 11.30 மணிக்கு, சென்னையில் இருந்து மும்பை செல்ல வேண்டிய, ஏர் இந்தியா பயணிகள் விமானம், 2 மணி நேரம் தாமதமாக, இன்று பகல் 1.30 மணிக்கு சென்னையிலிருந்து மும்பைக்கு புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதைப்போல் சிங்கப்பூர், டெல்லி, மும்பை விமானங்கள் 3 மணி நேரம் வரை, திடீர் தாமதம் காரணமாக, இந்த விமானங்களில் பயணம் செய்ய முன்பதிவு செய்து இருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், நிர்வாக காரணங்களால், விமானங்களை தாமதமாக இயக்குகிறது என்று தெரிவித்தனர்.