Tamilnadu
“முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாதூரியத்தால் கிடைத்த தீர்ப்பு”: அமைச்சர் PTR.பழனிவேல் தியாகராஜன் !
'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழில், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், ஆளுநர் தொடர்பாக உச்சநீதிமன்றம் அக்கட்டுரையின் தமிழாக்கம் வருமாறு :-
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கூட்டாட்சியை வலுப்படுத்தி, ஒருங்கிணைந்த, முற்போக்கான எதிர்காலத்தை நோக்கி நம்மை வழிநடத்தும் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. 'தமிழ்நாடு மாநில அரசு Vs தமிழ்நாடு ஆளுநர்' வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியான ஏப்ரல் 8ம் தேதி இந்திய வரலாற்றில் ஓர் பொன்னான நாள்.
அண்மையில் வழங்கிய தீர்ப்பு தொடர்பாக தீட்டிய கட்டுரை "A victory for all citizens, states" எனும் தலைப்பில் சிறப்புற வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் கூட்டாட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்தும் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பாக இது அமைந்துள்ளது; அரசியலமைப்பில் உள்ளிணைக்கப்பட்டுள்ள 'மாநிலங்களால் ஆன ஒன்றியம்' எனும் அடிப்படைக் கோட்பாட்டை இத்தீர்ப்பு உறுதிப்படுத்துகிறது.
நம் அரசியலமைப்பை உருவாக்கிய தலைவர்கள், அதை ஒரு விதிமுறைகளைக் கொண்ட கையேடாக அல்லாமல், நம்மை நாமே நிர்வகித்துக்கொள்வ தற்கான ஒரு தார்மீக விழுமியங்களின் அறிக்கையாகவே அதை எழுதியுள்ளனர். இதற்குக் காலப்போக்கில் பல விளக்கங்களும் செயலாக்கங்களும் தேவைப்பட்டன.
கடந்த 75 ஆண்டுகளில் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 100க்கும் மேற்பட்ட திருத்தங்கள் மற்றும் பல மைல்கல்லாக விளங்கத்தக்க உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள் இதை உறுதிப்படுத்துகின்றன. 2014 முதல், ஒன்றிய அரசு அரசியலமைப்பில் உள்ள இடைவெளிகளைப் பயன்படுத்தி அதிகாரங்களை மையப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக, தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்.டி.ஏ) ஆளாத மாநிலங்களில், நியமன பதவி வகிக்கும் ஆளுநர்களைப் பயன்படுத்தி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளின் செயல்பாடுகளில் தொடர்ந்து தலையிட்டு வருகிறது. இத்தகைய செயல்கள், பல மாநிலங்களை தங்கள் ஆளுநர்களின் செயல்களுக்கு எதிராக நீதி கோரி, அல்லது குறைந்தபட்சம் நிவாரணம் தேடி, உச்ச நீதிமன்றத்தை அணுகத் தூண்டியுள்ளன.
குறிப்பாக, கேரள அரசு தங்கள் மாநில ஆளுநருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. சட்டமன்றக் கூட்டத்தொடரைக் கூட்டும் வழக்கமான அதிகாரத்தில் கூட ஆளுநர் தலையீடு செய்ததால், பஞ்சாப் அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் வெற்றியும் கண்டது.
தமிழ்நாடு ஆளுநர் பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்திருந்த 10 மசோதாக்கள் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கின் அடிப்படையில் வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, ஆளுநர்களால் மாநில சட்டமன்றங்களின் சட்டமியற்றும் அதிகாரம் தடைப்படுவதைப் பெருமளவு கட்டுப்படுத்துகிறது.
இதன் மூலம், கடந்த காலங்களில் நேர்மையற்ற முறையில் பயன்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் செயல்முறை இடைவெளியை நீக்குகிறது. இத்தகைய தீர்ப்புகள் அரசியலமைப்பின் புரிதல்களைச் செம்மைப்படுத்தி செயல்பாட்டு வழிகாட்டுதல்களை வழங்குகின்றன. ஒரு மட்டத்தில், இது 2023 நவம்பரில் 'பஞ்சாப் மாநிலம் Vs பஞ்சாப் ஆளுநரின் முதன்மை செயலாளர்' வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் விரிவாக்கமாகும்.
அந்த தீர்ப்பில், ஒரு நாடாளுமன்ற ஜனநாயகத்தில், உண்மையான அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளிடமே உள்ளது என்றும், ஆளுநர் மசோதாக்களுக்குத் தனது ஒப்புதலைக் காலவரையின்றி நிறுத்தி வைக்கவோ அல்லது சட்டமியற்றும் செயல்முறையைத் தடுக்கவோ முடியாது என்றும் உறுதிப்படுத்தப்பட்டது.
ஆனால் மற்றொரு மட்டத்தில், இந்த மைல்கல்லான வழக்கின் பல அம்சங்கள் நமது விரிவான கவனத்திற்குரியவை. முதலாவதாக, இந்த 10 மசோதாக்கள் நிலுவையில் வைக்கப்பட்ட கால அளவே ஜனநாயகத்தின் மீதான கடுமையான தாக்குதலாகும். நிலுவையில் வைக்கப்பட்ட முதல் மசோதா 2020க்கு முந்தியது. அப்போதைய அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்டது, இது முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா நினைவாகத் தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகத்திற்கு அவரது பெயரைச் சூட்டும் மசோதாவாகும்.
இந்த அனைத்து மசோதாக்களும் பல்கலைக்கழகங்கள் தொடர்பானவை. மேலும் இப்பல்கலைக்கழகங்கள், கோவிட்-19 பேரிடரால் ஏற்கனவே கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் மீளுருவாக்க முயற்சிகளுக்குத் திடமான நிர்வாகமும் உடனடியாக வினையாற்றும் ஆளுமையுமே தேவை. ஆளுநரின் செயலற்ற தன்மையால் ஏற்பட்ட 'நிர்வாக உறை நிலை' அல்ல.
இரண்டாவதாக, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 10 மசோதாக்களையும் (முந்தைய அ.தி.மு.க. அரசால் முன்வைக்கப்பட்டவை உட்பட) எவ்வித மாற்றமும் இன்றி அப்படியே மீண்டும் நிறைவேற்றிய அரசியல் பெருந்தன்மை மற்றும் சாதுரியத்தை நாம் பாராட்ட வேண்டும்.
உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாக ஒரு விஷயத்தைக் கூறுகிறது: ஒரே மசோதாவை மீண்டும் சமர்ப்பிக்கும் போது ஆளுநரால் ஒப்புதலை வழங்காமல் மறுக்க முடியாது (இது அரசியலமைப்பு ரீதியாகத் தடைசெய்யப்பட்டுள்ளது). ஆனால் திருத்தப்பட்ட மசோதா நிராகரிக்கப்படலாம். இந்த விவகாரம், அரசியலைத் தாண்டியது. இது மாநில உரிமைகளுக்கும் கூட்டாட்சிக்கும் முக்கியமானது என்பதை எங்களது முதலமைச்சர் நன்கு உணர்ந்திருந்தார்.
அவரது இந்த கொள்கை வழுவாத அணுகுமுறை, 10 மசோதாக்களையும் ஒட்டுமொத்தமாக மீண்டும் நிறைவேற்றிச் சமர்ப்பிக்கச் செய்தது, இது எங்களது வழக்கை மேலும் வலுப்படுத்தியது. இறுதியில் கூட்டாட்சி முறைக்கு ஒரு தீர்க்கமான நீதித்தீர்ப்பைப் பெற்றுத் தந்ததுள்ளது. இந்த வரலாற்றுத் தீர்ப்பின் மூன்றாவது குறிப்பிடத்தக்க அம்சம், உச்ச நீதிமன்றம் அரசியலமைப்பின் பிரிவு 142-ன் அடிப்படையில் தனது அசாதாரண அதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியதாகும்.
சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப் பட்டு ஆளுநரின் மேசைக்கு வந்த நாளே இந்த மசோதாக்கள் ஒப்புதல் பெற்றதாகக் கருதப்பட வேண்டும் என அறிவித்து, நிர்வாகத் தடைகளிலிருந்து சட்டமியற்றும் செயல்முறைகளைப் பாதுகாக்க நீதிமன்றம் ஒரு தீர்க்கமான தலையீட்டை மேற்கொண்டுள்ளது.
சில கடுமையான கோட்பாட்டு வாதிகள் நீதிமன்றத்தின் இத்தகைய அரிய நேரடி நடவடிக்கைகளைக் குறித்து விமர்சனங்கள் தெரிவித்தாலும், ஆளுநர் அலுவலகம் வழக்கு விசாரணை முழுவதும் காட்டிய செயல்முறை முரண்பாடுகள், அவர்கள் மேற்கொண்ட தாமதப்படுத்தும் முயற்சிகளே, நீதிமன்றத்தின் இந்தத் தலையீட்டு நடவடிக்கைகளுக்குக் காரணம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
நீதிமன்றம் பல ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த மசோதாக்களை ஆய்வு செய்யத் தொடங்கியபோது, விசாரணையை பயனற்றதாக்குவதற்காக, ஆளுநர் அவசரமாக மசோதாக்களுக்கு "ஒப்புதல் மறுக்கப்பட்டது" எனக் குறிப்பிட்டு சட்டமன்றத்திற்குத் திருப்பி அனுப்பினார்.
மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றப் பட்ட பிறகு, அசல் ஆவணங்கள் ராஜ்பவனில் இருக்க, நகல்கள் மட்டுமே திருப்பி அனுப்பப்பட்டதால், சட்டமன்றம் அவற்றை மீண்டும் நிறைவேற்றியது செல்லாது என ஒரு அபத்தமான வாதத்தை முன்வைத்தார். பஞ்சாப் தொடுத்த வழக்கின் தீர்ப்பு, ஆளுநர்களுக்கு இத்தகைய மசோதாக்களைக் காலவரையின்றி நிறுத்தி வைக்கும் அதிகாரம் இல்லை எனத் தெளிவுபடுத்தியபோது, எங்கள் சட்டமன்றத்தால் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் திடீரென குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டன.
ஒவ்வொரு கட்டத்திலும், ஆளுநர் சட்டமன்றத்தின் நோக்கத்தையும், தனது செயல்களுக்கான நீதிமன்ற ஆய்வையும் முறியடிக்க முயன்றார். இறுதியாகத் தீர்ப்பின் 432வது பத்தியில் நீதிமன்றம் "ஆளுநரின் நடத்தை...நல்லெண்ணம் இல்லாததாக இருந்தது" என வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டியதாயிற்று.
இத்தீர்ப்பில், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அம்சம் என்னவென்றால், அரசியலமைப்பின் 200 மற்றும் 201வது பிரிவுகளின் கீழ் ஆளுநர் மற்றும் குடியரசுத் தலைவர் மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கைகளுக்குத் தெளிவான காலக்கெடுக்கள் விதிக்கப்பட்டிருப்பதாகும். இது முன்னெப்போதும் இல்லாத வகையில் அந்த பிரிவுகளில் ஒரு தெளிவை ஏற்படுத்துகிறது.
இந்தப் பிரிவின் வரிகள் வெறும் 10 வரிகளில் சுருக்கமாக இருந்தபோதிலும், இந்தியாவின் 75 ஆண்டு அரசியலமைப்பு வரலாற்றில் வெவ்வேறு விதமாகப் பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டு, அடிக்கடி தவறாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. 1950-ல் அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டதிலிருந்து முதல் முறையாக வரையறுக்கப்பட்ட இந்த காலக்கெடு நிர்ணயித்ததன் மூலமாக இந்தத் தீர்ப்பு நம் குடியரசின் மிகவும் முக்கியத்துவம் மிக்க தீர்ப்புகளான கேசவானந்த பாரதி (1973) மற்றும் எஸ்.ஆர்.பொம்மை (1994) வழக்குகளுக்கு இணையான முக்கியத்துவத்தைப் பெறுகிறது.
தேர்தல் பத்திரங்கள் வழக்கை விட இவ்வழக்கு, மிகவும் தாக்கம் செலுத்தக்கூடியதும், சட்டரீதியாக நேர்த்தியானதும் ஆகும். ஏனெனில், அத்தீர்ப்பு, தேர்தல் பத்திரங்களைச் சட்டவிரோதம் என்று அறிவித்த போதிலும், ஏற்கனவே வழங்கப்பட்ட ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பிலான, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணான, பத்திரங்களின் மோசமான விளைவுகளைச் சரி செய்யவில்லை, அதற்கான தண்டனைகளையும் வழங்க வில்லை.
இந்தத் தீர்ப்பு, மக்களின் விருப்பத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் செயல்பாட்டைக் கட்டுப்படுத்தும் எல்லையற்ற அதிகாரம் எந்த ஒரு தனிநபருக்கும் - தேர்ந்தெடுக்கப்பட்டவராக இருந்தாலும் சரி, தேர்ந்தெடுக்கப்படாதவராக இருந்தாலும் சரி - இருக்கக் கூடாது என்ற கொள்கையை உறுதிப்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு முழுமையான வீட்டோ அல்லது பாக்கெட் வீட்டோ (நடவடிக்கை எடுக்காமல் காலவரையின்றி தாமதப்படுத்தும்) அதிகாரங்கள் இல்லை என்றும், அவர்களின் நடவடிக்கைகள் நீதிமன்ற மறு ஆய்வுக்கு உட்பட்டவை என்றும் தெளிவாகக் கூறிய நீதிமன்றம், ஜனநாயகத்தின் அடிப்படைக் கோட்பாட்டை – சட்டத்திற்கு மேலே எந்த நபரும் இல்லை என்பதை - உறுதி செய்துள்ளது.
இந்தியக் குடியரசுத் தலைவர் (நியமன பதவியில் இருப்பவர்), நாம் சுதந்திரம் பெறப் போராடிய காலனித்துவ பிரிட்டானிய ராஜ்ஜியத்தின் மன்னருக்கு உள்ளதை விட அதிகமான அதிகாரமான குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட சட்டங்களுக்கு நிரந்தரமாக ஒப்புதல் மறுக்கும் ஒரு அதிகாரத்தை வைத்திருந்தால், அது நம் அரசியலமைப்பு தலைவர்களுக்கு ஒரு அவமானமாகும்.
உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அனைத்து மாநிலங்களுக்கும், அனைத்து குடிமக்களுக்கு மான வெற்றியாகும். இது கூட்டாட்சிக் கொள்கைக்கான வெற்றி; இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கான வெற்றி; கடந்த 10 ஆண்டுகளின் மோதல் மற்றும் மையப்படுத்தல் பாதையிலிருந்து விலகி, அனைத்து மாநிலங்களின் முன்னேற்றத் திற்கும் நம் நாட்டின் ஒற்றுமைக்கும் வழிவகுக்கும் ஒரு வாய்ப்பை இது நமக்கு வழங்குகிறது. எங்கள் முதலமைச்சரின் தொலைநோக்கும் சாதூரியமும் நம்மை இந்த முக்கியமான தருணத்திற்கு அழைத்து வந்துள்ளன.
இதை, பங்குச் சந்தைகள் சரிவது, உலக நாடுகள் தங்கள் பிராந்தியம் சார்ந்த சுய நலன்களுக்கு மட்டுமே மீண்டும் முக்கியத்துவம் அளிக்கப்படுவது, உலகளாவிய வர்த்தக முறைகள் உடைவது என உலகில் இப்போது நடக்கும் நிகழ்வு களின் பின்னணியில் நாம் சிந்திக்க வேண்டும். இது இந்தியா ஒளிர்வதற்கான ஒரு வாய்ப்பாகும். நம் நாடு தனது முழுத் திறனை அடைய வேண்டுமெனில், மாநிலங்களும் ஒன்றியமும் ஒருங்கிணைந்து, சகோதரத்துவத்துடன் செயல்பட வேண்டும். இவ்வாறு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராசன், அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!