Tamilnadu

”கோவையில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை” : 26 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் மு.பெ.சாமிநாதன்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு:-

1. தவத்திரு குன்றக்குடி அடிகளார் நூற்றாண்டு விழா சிவகங்கை மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

2. இசை முரசு நாகூர் இ.எம். அனிபா நூற்றாண்டு விழா நாகப்பட்டினம் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

3. புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் நினைவாக விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பத்தில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அரங்கம் அமைக்கப்படும்.

4. வேலூர் அண்ணா கலையரங்கம் குளிரூட்டப்பட்ட அதிநவீன அரங்கமாக புனரமைக்கப்படும்.

5. குமரிக் கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் நூற்றாண்டினையொட்டி அன்னாருக்கு நாகர்கோவில் நகரில் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

6. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் “முத்தமிழறிஞர் கலைஞர் திரைக் கருவூலம்” அமைக்கப்படும்.

7. இதழியல் மற்றும் ஊடகவியல் கல்வி நிறுவனம் (Institute of Journalism and Media Studies) சென்னையில் இக்கல்வியாண்டு முதல் தொடங்கப்படும்.

8. மாநிலம் முழுவதும் உள்ள நினைவகங்களில் கண்காணிப்புக் கேமிராக்கள் (CCTV) பொருத்தப்பட்டு. மாவட்ட மற்றும் மாநில அளவில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்படும்

9. சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்திலுள்ள சுதந்திரப் போராட்ட தியாகிகள் மண்டபம் மற்றும் தமிழ்மொழித் தியாகிகள் மண்டபங்கள் புனரமைக்கப்பட்டு அம்மண்டபங்களிலுள்ள புகைப் படங்கள் எண்மியமாக்கப்படும்.

10. அரசின் திட்டங்கள், சாதனைகள் பொதுமக்களுக்குச் சென்றடையும் வகையில் 10 மாவட்டங்களில் மின்சுவர்கள் (Digital Wall) அமைக்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சியுள்ள 28 மாவட்டங்களிலும் மின்சுவர்கள் (Digital Wall) அமைக்கப்படும்.

11. தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தினை உலகத்தரத்திற்கு இணையாக உயர்த்திட முதற்கட்டமாக அதிநவீன கருவிகள் மற்றும் உபகரணங்கள் கொள்முதல் செய்யப்படும்.

12. அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் அமைந்துள்ள செய்தியாளர் அறைகளில் நவீன கட்டமைப்புடன் கூடிய கணினி மற்றும் அதிவேக இணையத்தள வசதிகள் ஏற்படுத்தப்படும்.

13. கோவையில் உள்ள செம்மொழிப் பூங்காவில் தமிழ்த்தாய் திருவுருவச்சிலை நிறுவப்படும்.

14. தமிழறிஞர்கள், எல்லைக் காவலர்கள், அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு தற்போது திங்கள்தோறும் வழங்கப்படும் உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படும்.

15. அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் வாயிலாக பயனாளிகளின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக உயர்த்தப்படும்.

16. தமிழ் வளர்ச்சிக் கழகம் தொய்வின்றி செயற்பட வைப்புத் தொகை வழங்கப்படும்.

17. தமிழறிஞர்கள் பதின்மரின் நூல்கள் நாட்டுடைமை செய்யப்படும்.

18. சென்னை மாவட்டம், மதுரவாயல் வட்டம், துண்டலத்தில் அமைந்துள்ள திரு.வி.க. நூலகம் புதுப்பிக்கப்படும்.

19. புதுதில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக பன்னோக்குக் கலையரங்கு அருகில் அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்படும்.

20. மொழிபெயர்ப்பாளர் க.ரா. ஜமதக்னி அவர்களுக்கு இராணிப்பேட்டை மாவட்டத்தில் நினைவுத்தூண் நிறுவப்படும்.

21. சங்க காலப் புலவர் குறமகள் இளவெயினிக்கு மதுரையில் திருவுருவச் சிலை நிறுவப்படும்.

22. கவிக்கோ அப்துல் ரகுமான் பிறந்த நாளான நவம்பர் 9-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

23. அறிவியல் தமிழறிஞர் மணவை முஸ்தபா அவர்களின் பிறந்த நாளான ஜூன் 15-ஆம் நாளினை தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் மாவட்ட அளவில் அரசு விழாவாகக் கொண்டாடப்படும்.

24. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'அறிஞர்களின் அவையம்' என்ற பெயரில் துறை சார்ந்த வல்லுநர்களின் கலந்தாய்வுக் கூட்டம் திங்கள்தோறும் நடத்தப்படும்.

25. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 'தொல்காப்பியர் சுழலரங்கம்: மாநிலம் தழுவிய வெள்ளி வட்டம்' சிறப்புப்பொழிவு நடத்தப்படும்.

26. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்ட வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு திங்கள்தோறும் கல்வி உதவித் தொகையும் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு உணவு வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Also Read: வக்ஃப் சட்டத்தில் ஏன் பிற மதத்தினரை சேர்க்க வேண்டும்? : ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி!