Tamilnadu
சமூகநீதி என்னும் திறவுகோலால் புதிய பாதையைத் திறந்து இருக்கும் முதலமைச்சர் : ஆசிரியர் கி.வீரமணி பாராட்டு!
‘திராவிட மாடல்’ அரசாம் தி.மு.க ஆட்சியில் மாற்றுத் திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப் பேரவையில் தாக்கல் செய்த முதலமைச்சரை பாராட்டி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:-
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் வழங்கும் வகையிலான சட்டமுன்வடிவைத் தமிழ்நாடு சட்டப் பேரவையில் இன்று நம்முடைய முதலமைச்சர் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொண்டு வந்துள்ளார். இது சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான சாதனையாகும். அனைவருக்கும் அனைத்தும் என்பது தான் திராவிட மாடல்!
கடந்த மாதம் சென்னை கொளத்தூரில் பெரியார் சிறப்பு மருத்துவமனையைத் திறந்து வைத்து உரையாற்றியபோது, மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி மன்றங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள் "திராவிட மாடல் ஆட்சி தான் திருநர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் அப்படிப்பட்ட வாய்ப்புகளைத் திறந்து விடும் அரசாக இருக்கிறது என்பதன் அடையாளம் தான் மாற்றுத்திறனாளிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் வழங்கும் பிரதிநிதித்துவம். இதுதான் உண்மையான சமூக நீதி அரசு, பெரியார் அரசு" என்று தெரிவித்திருந்தார். சொன்னபடியே தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அதற்கான சட்ட முன் வடிவை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.
2018-ஆம் ஆண்டு (30.11.2018 அன்று), தோழர் தா.மீ.நா.தீபக் தலைமையிலான டிசம்பர் 3 இயக்கத்தின் சார்பில் அரசியல் பிரதிநிதித்துவ மாநாட்டை நம்முடைய தலைமையில் நடத்தினார்கள். அதில் மாற்றுத் திறனாளிகளுக்கு அரசியல் இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்னும் தீர்மானத்தை நிறைவேற்றி வலியுறுத்தினோம்.
சமூகநீதி என்பது சமூகத்தின் அனைத்துத் தரப்பினருக்குமான நீதியைப் பெறுவதாகும். உள்ளாட்சி மன்றங்களில் நியமன அடிப்படையில் மாற்றுத் திறனாளிகள் இருவரைக் கவுன்சிலர்களாக்க வகை செய்யும் இச் சட்டம் அரசியல் அதிகாரத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கும் பங்கு வழங்கும் மனிதநேயச் சட்டமாகும்.
கடையருக்கும் கடைத்தேற்றம் வழங்கும் சமூகநீதிப் பார்வை தான் திராவிடம்.சமூகநீதி என்னும் திறவுகோலால் புதிய பாதையைத் திறந்துவிட்டுள்ளார் நமது முதலமைச்சர். இது உலகுக்கே வழிகாட்டுவதாக அமையும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!