Tamilnadu

”திராவிட Ideology-ஐ ஏற்றுக்கொண்டவர் அம்பேத்கர்” : ஆ.ராசா MP பேச்சு!

சென்னை பல்கலைக்கழகத்தில் டாக்டர் அம்பேத்கர் அறக்கட்டளை சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆ.ராசா எம்.பி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது ஆ.ராசா பேசுகையில், ”அண்ணல் அம்பேத்கரின் ஆளுமையை குறைப்பதற்காகவே அவரை சாதி வட்டத்திற்குள் அடைக்கப் பார்க்கிறார்கள். ஆனால் அரசியல், பொருளாதாரம், சமூக நீதி, அரசியலமைப்பு என அனைத்து பரிணாமங்களிலும் பரந்த அறிவை பெற்ற அம்பேத்கரை யாருடனும் ஒப்பிட முடியாது.

அரசியலமைப்புச் சட்டத்தை படிப்பதற்கு முன்பாக, அரசியலமைப்பு பேரவை கூட்டத் தொடரில் அம்பேத்கர் பேசியதை முதலில் படித்து தெரிந்து கொள்ள வேண்டும். சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் கொடி தான் இந்திய நாட்டின் தேசியக்கொடியாக இருக்க வேண்டும் என்று காந்தி வலியுறுத்தினார். இதை அம்பேத்கர் மறுத்தார். அவரது விளக்கம், "அதில் இருக்கக்கூடிய ராட்டை நிரந்தரமாக தொழில் புரட்சியாக இருக்காது, இன்று நாம் மாட்டு வண்டியில் செல்கிறோம். நாளை அவை முற்றிலுமாக ஒழிந்து போகலாம்.

ஆனால் நீங்கள் நிரந்தரமாக ராட்டையை தேசியக் கொடியில் வைத்தால் உலக நாடுகள் நம்மை பார்த்து சிரிப்பார்கள். நாட்டில் மதத்தால், இனத்தால், சாதியால், வர்ணாசிரமத்தால் பல்வேறு பகுதிகளாக பிரிந்து கிடந்த இந்த இந்திய நிலப்பரப்பை அசோகர் ஆட்சியில் புத்த மதம் முழுமையாக சமப்படுத்தியது. அவர் உருவாக்கிய அசோக சக்கரம், அது தினமும் மாறும் என்பதை நினைவூட்டும்" என்றார். அதனடிப்படையில் அசோகச் சக்கரம் இடம்பெற்றது.

அரசியலமைப்பு முகப்புரை எழுதும்போது சமூக நீதி, மதச்சார்பின்மை என்ற வார்த்தை இல்லை. சிலர் அரசியல் அமைப்பு கடவுளின் பெயரால் தொடங்க வேண்டும் என கூறினர். பரம் பொருளின் பெயரால் தொடங்க வேண்டும் என கூறினர். ஆனால் அம்பேத்கர் அதை மறுத்தார் மக்களின் பெயரால் தொடங்கப்பட வேண்டும், என்றார்.

எந்தச்சாதி கட்டமைப்புக்கும் உள்ளாகாமல் இதை தங்கள் மண் என்று சொல்லிக் கொள்பவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்த மொத்த நாடும் திராவிட நாடாக இருந்தது என அம்பேத்கர் குறிப்பிடுகிறார். ஆரியர்கள் வந்த பின்பாக கொஞ்சம் கொஞ்சமாக திராவிடர்கள் தெற்கு பகுதிக்கு தள்ளப்பட்டனர். இப்போதும் தெற்கு திராவிடமாக உள்ளது. இந்த நாட்டின் உண்மையான உரிமையாளர்கள் திராவிடர்கள் தான். இது பெரியார், அண்ணா, கலைஞர், மு.க.ஸ்டாலின் ஆகியோர் கூறியது அல்ல. அம்பேத்கரின் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது. திராவிட ஐடியாலஜி அம்பேத்கரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த நாடு பல்வேறு மொழிகளால் பல்வேறு கலாச்சாரங்களால் கொண்ட நாட்டில் மக்கள் எண்ணிக்கை அடிப்படையில் விகிதாச்சாரம் கொடுக்கக் கூடாது. ஒவ்வொரு மொழி மற்றும் கலாச்சாரத்திற்கும் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும் என்று சொன்னவர் அம்பேத்கர்.

தேசியக் கொடியிலிருந்து மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டது வரை ஒவ்வொரு பகுதிகளும் அம்பேத்கரின் பங்கு அளப்பரியது. தற்போதுள்ள பாஜக அரசுக்கு அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டுவரது மிகவும் எளிதாகிவிட்டது. மெஜாரிட்டியை வைத்துக்கொண்டு இஷ்டத்திற்கு மாற்றங்கள் செய்கின்றார்கள் இது ஜனநாயகம் அல்ல” என தெரிவித்துள்ளார்.

Also Read: பா.ஜ.க.வின் கண்ணாடிக் கோட்டையை உடைக்கும் தீர்ப்பு!