Tamilnadu

“அந்தத் தியாகி யார்?” : சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்றுசட்டமன்றப் பேரவையில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டு வந்த “அந்தத் தியாகி யார்?” பதாகை குறித்து அளித்த விளக்கம் வருமாறு:-

இங்கு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் உள்ளிட்ட அவரது கட்சியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு பிரச்சினையைக் கிளப்பி, அதற்குப்பிறகு விவாதங்கள் நடைபெற்று, அவை முன்னவர் அவர்கள் அதற்கு உரிய விளக்கங்களைத் தந்து, நீங்களும் ஒரு முடிவெடுத்து, அதிலே திருப்தி அடையாத சூழ்நிலையில் அவர்கள் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் நான் ஒன்றைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அவர்களது கையிலே ஒரு பதாகையைப் பிடித்துக் கொண்டு அதை இங்கே காண்பித்தார்கள். அதிலே வாசகம் ஒன்று எழுதப்பட்டிருந்தது. அதாவது, “அந்தத் தியாகி யார்?”, “அந்தத் தியாகி யார்?”, “அந்தத் தியாகி யார்?” என்று எழுதப்பட்டிருக்கிறது. Badge-ம் அணிந்திருந்தார்கள்.

மறைந்த எம்.ஜி.ஆர். அவர்களால் உருவாக்கப்பட்டு, மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க.-வை, அவர்களுக்குப் பிறகு பொறுப்பேற்ற, இப்பொழுது எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடிய அவர்கள், தாங்கள் சிக்கியிருக்கக்கூடிய பல்வேறு வழக்குகளிலிருந்து, பல்வேறு பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக்கொள்வதற்காக இன்றைக்கு அடகு வைத்து, யாருடைய காலிலே போய் விழுந்தார்கள் என்பது தெரியும்.

இன்றைக்கு அப்படி இவர்கள் விழுந்ததைப் பார்த்து நொந்துபோய் noodles ஆக மாறியிருக்கக்கூடிய அ.தி.மு.க. தொண்டர்கள்தான் இன்றைக்குத் தியாகிகளாக இருக்கிறார்கள்.

அன்றைக்கு முதலமைச்சர் பதவியை வாங்குவதற்காக யாருடைய காலிலே இவர் விழுந்தார் என்பது தெரியும்; பிறகு அந்த அம்மையாரையே ஏமாற்றிவிட்டுப் போனார். ஏமாற்றமடைந்த அவர்தான் இன்றைக்குத் தியாகியாக இருக்கிறார். ஆகவே, அந்தத் தியாகி யார்? என்ற வாசகத்தை இங்கே எழுதி எடுத்து வந்ததற்காகத்தான் இந்த விளக்கத்தை நான் தந்திருக்கின்றேனேதவிர, வேறல்ல என்பதை இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: மீனவர்கள் நம் சொந்தங்கள் என்பதை ஒன்றிய பா.ஜ.க அரசு உணரவேண்டும்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!