Tamilnadu
சர்க்கரைத்துறைக்கான 15 புதிய அறிவிப்புகள் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் வெளியீடு!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று வேளாண்மை – உழவர் நலத்துறை - சர்க்கரைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் சர்க்கரைத்துறைக்கான புதிய அறிவிப்புகளை சுற்றுலாத்துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் அறிவித்தார்.
அதன் விவரம் வருமாறு:-
1.கரும்பு பிரிதிறனை 90 சதவீதத்திற்கு அதிகரித்திடவும், கரும்புச் சக்கையில் ஏற்படும் சர்க்கரை இழப்பைக் குறைத்து சர்க்கரைக் கட்டுமானத்தை அதிகரிக்கவும், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்துள்ள இயந்திரத்திற்குப் பதிலாக நவீன கரும்பு பிரி திறன் இயந்திரம் மற்றும் மின்மோட்டார்கள் (Swing Type Fibrizor with Motors) ஐந்து கோடியே 70 இலட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.
2.கரும்பு உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும், இயந்திர அறுவடையை ஊக்குவிக்கவும் அகலப்பார் முறையில் உயர் விளைச்சல் மற்றும் உயர் சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட கரும்பு இரகங்களை நடவு செய்யும், கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் பதிவு செய்த விவசாயிகளுக்கு பருசீவல் நாற்றுக்கள், அகலப்பார் நடவு, ஒருபரு விதைக்கரணைகளுக்கு 50 சதவிகித மானியம் வழங்கிட இரண்டு கோடியே 66 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
3.கரும்பு அரவைத் திறனை அதிகரிக்கவும், ஆலை நேர இழப்பைக் குறைத்து ஆலையின் செயல்திறனை மேம்படுத்திடவும் வேலூர் மற்றும் பெரம்பலூர் சர்க்கரை ஆலைகளுக்கு இரண்டு கோள்கல பல்சக்கரப் பெட்டிகள் (Planetary gear box) இரண்டு கோடியே 60 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.
4.ஆலையின் செயல் திறன் மற்றும் சர்க்கரைத் தரத்தினை உயர்த்திட கள்ளக்குறிச்சி - 1 கள்ளக்குறிச்சி -2 சர்க்கரை ஆலைகளில் தலா 2 படிகலன் பகுதிகள் இரண்டு கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் தானியங்கி மயமாக்கப்படும் (Pan automation)
5.சர்க்கரையின் தரம் மற்றும் நிறத்தினை உயர்த்தும் வகையில் வேலூர், சுப்பிரமணிய சிவா, திருப்பத்தூர், மதுராந்தகம், கள்ளக்குறிச்சி -2, எம்.ஆர்.கே. கூட்டுறவு மற்றும் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலைகளில் ஏழு புதிய கரும்பு சாறு சூடேற்றிகள் (Juice heater) இரண்டு கோடியே 35 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.
6.சீரான தொடர் கரும்பு அரவை நடைபெறவும், நேர இழப்பைக் குறைக்கவும், பெரம்பலூர் சர்க்கரை ஆலையிலுள்ள 18 மெகாவாட் இணை மின் உற்பத்தி நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட புதிய மின்னணு கட்டுப்பாட்டு அமைப்பு (Digital Control System) ஒரு கோடியே 90 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.
7.கரும்பு அரவைத் திறனை அதிகரிக்கவும், ஆலை நேர இழப்பைக் குறைத்து ஆலையின் செயல்திறனை மேம்படுத்திடவும் வேலூர் மற்றும் எம்.ஆர்.கே. கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு மின் மோட்டாரைக் கட்டுப்படுத்தும் 550 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு மின்னியல் உபகரணங்கள் (VFD Drive- power and control modules) ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாய் நிதியில் கொள்முதல் செய்யப்படும்.
8.அரவைத் திறன் மற்றும் சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்தும் பொருட்டு செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பழுதடைந்துள்ள மோட்டாருக்குப் பதிலாக அதிகத் திறன் கொண்ட புதிய 1,120 கிலோ வாட் மின் மோட்டார் (Motor) ஒன்று ஒரு கோடியே 25 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
9.சர்க்கரை ஆலைகளின் அரவைத் திறனை உயர்த்த செங்கல்ராயன், செய்யாறு, கள்ளக்குறிச்சி-1, சுப்பிரமணியசிவா மற்றும் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் 6 எண்கள் தொடர் சுழற்சல்லடை (Continuous Centrifugal Machine) ஒரு கோடியே 2 இலட்சம் ரூபாய் நிதியில் அமைக்கப்படும்.
10.கரும்பு அரவை பாதிப்பு மற்றும் சர்க்கரைக் கட்டுமான இழப்பினைத் தவிர்க்கும் பொருட்டு கள்ளக்குறிச்சி-2, கள்ளக்குறிச்சி-1, மதுராந்தகம் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின், கரும்பு அரவைப் பகுதி மோட்டாரினைக் கட்டுப்படுத்த மூன்று புதிய உபகரணங்கள் (Mill DC Drive Unit) 90 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
11.சர்க்கரைக் கட்டுமானத்தை அதிகரிக்கவும், ஆலையின் செயல்திறனை மேம்படுத்தவும், வேலூர் மற்றும் எம்.ஆர்.கே கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் உள்ள சுண்டுகலன்களின் (Evaporator) இரண்டு கலண்டிரியாக்கள் (calendrias) 90 இலட்சம் ரூபாய் மாநில நிதியில் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்படும்.
12.சர்க்கரைக் கட்டுமானத்தை உயர்த்த 14 கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளுக்கு மொத்தம் 20 வெப்ப பரிமாற்ற அலகுகள் (Transient heaters) 50 இலட்சம் ரூபாய் நிதியில் நிறுவப்படும்.
13.சர்க்கரை ஆலைப் பகுதிக்கேற்ற, உயர் விளைச்சல் மற்றும் அதிக சர்க்கரைக் கட்டுமானம் கொண்ட புதிய கரும்பு இரகங்களைத் தேர்வு செய்திட, கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் மற்றும் முன்னோடி கரும்பு விவசாயிகளின் வயல்களில், தற்போது ஆய்வில் உள்ள கரும்பு இரகங்களை கொண்டு பரிசோதனை வயல்கள் அமைத்திட 28 இலட்சம் ரூபாய் மாநில நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
14.புதியதாக வெளியிடப்பட்ட கரும்பு இரகங்களைப் பிரபலப்படுத்தவும் குறுகிய காலத்தில் விதை உற்பத்தியைப் பெருக்கிடவும் புதிய கரும்பு இரகங்களைக் கொண்டு “மாதிரி வயல்கள்” அமைத்திட 24 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
15.கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகளின் செயல்திறனை மேம்படுத்திடவும், தமிழ்நாட்டில் குறைந்து வரும் கரும்பு சாகுபடிப் பரப்பை அதிகரித்திடவும், உரிய ஆய்வுகள் மேற்கொள்ள வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும்.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!