
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜன.28 அன்று சென்னை, நந்தம்பாக்கம்வர்த்தக மையத்தில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டச் செயலாக்கத் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்புத் திட்டம் (TNWESafe) சார்பில் நடைபெற்ற இரண்டு நாள் "உலக மகளிர் உச்சி மாநாடு - 2026" ன் நிறைவு விழாவில் ஆற்றிய உரை:-
இன்றைக்கு இந்த She Leads மாநாட்டினுடைய நிறைவு பகுதிக்கு வந்திருக்கின்றோம். இந்த 2 நாள் மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு தலைவர்கள் பேசியிருக்கின்றார்கள். தொழில் முனைவோர்கள் (Entrepreneurs) பேசியிருக்கின்றார்கள். அவர்களுடைய கருத்துகளை எல்லாம் இங்கே பரிமாறியிருக்கிறார்கள். நிறைய MoUsம் இங்கே Sign ஆகியிருக்கிறது.
இங்கே எனக்கு முன்பு மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த இரண்டு சகோதரிகள் பேசினார்கள். ஈரோடு மாவட்டம், ரங்கம்பாளையம்,
பிரம்ம கமலம் மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த சகோதரி சுதா பெரியசாமி, மகளிர் திட்டம் மூலமாக ஆடை விற்பனை செய்வது தொடர்பாக நிறைய Courses படித்து இருக்கிறார்கள். அதனால் இன்றைக்கு அரசினுடைய உதவியினால் ஜெர்மனி வரை சென்று Garments Expo-வில் கலந்து கொண்டு, தமிழ்நாட்டிற்கு மகளிருக்கு மிகப்பெரிய ஒரு பெருமை சேர்த்துள்ளார்கள். சகோதரி சுதா, இன்றைக்கு வருடத்திற்கு 20 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டிக் கொண்டுள்ளார்கள். அவர்களுக்கு நாம் அனைவரின் சார்பாக நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
அதே மாதிரி, நீலகிரி ஸ்டார் மகளிர் குழுவைச் சேர்ந்த சகோதரி சவுமியா அவர்கள் இங்கே அவர்களுடைய வெற்றிக் கதையை (Success Story-ஐ) நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். 52 லட்சம் ரூபாய் வங்கிக்கடன் பெற்று தன்னுடைய தொழிலை ஆரம்பித்து, இன்றைக்கு Tissue Paper Sales Business-ல் இப்போது ஆண்டுக்கு 25 லட்சம் வரை வருமானத்தை ஈட்டி வருகிறார்கள். அவர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
இங்கு வந்திருக்கக்கூடிய உங்களிடமிருந்து நாளைக்கு நிறைய சுதாக்களையும், சவுமியாக்களையும் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு உருவாக்கப்படுகின்ற திட்டம்தான் இந்த Tamil Nadu We Safe திட்டமாகும்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்கள் என்றால், எப்போதுமே எல்லா விசயத்திலும் மிகவும் முற்போக்கான மாநிலமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மகளிர் முன்னேற்றத்தில் மிக, மிக முற்போக்கான ஒரு மாநிலம் நம்முடைய தமிழ்நாடு.
இதே தமிழ்நாட்டில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்ற காலம் இருந்தது. 100 வருடத்திற்கு முன்பு பெண்களுக்கு வீட்டை விட்டு வெளியே வருவதற்கு சுதந்திரம் கிடையாது. ஆனால், இன்றைக்கு இந்தியாவிலேயே தொழிற்சாலைகளில் வேலைபார்க்கின்ற பெண்களில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டினுடைய பெண்கள்.
ஆண், பெண் என்ற ஏற்றத் தாழ்வை திராவிட மாடல் ஆட்சி இன்றைக்கு உடைத்துள்ளது. இன்றைக்கு பெண்கள் பல துறைகளில் வேகவேகமாக முன்னேறி வருகிறார்கள். ஆண்களையும் முந்திச் செல்கிறார்கள்.
முன் நாட்களில் ஒரு அலுவலகத்திற்கு சென்றால், ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள் மிகவும் குறைவாக இருப்பார்கள். ஆனால் இப்போது பார்த்தீர்கள் என்றால் ஆண் ஊழியர்களுக்கு சமமாக பெண் ஊழியர்கள் இருக்கின்றார்கள். இன்னும் சொல்லப்போனால் சில அலுவலகத்தில் ஆண் ஊழியர்களைவிட பெண் ஊழியர்கள்தான் அதிகமாகவே இருக்கின்றார்கள். இதற்கு பெயர்தான் மாற்றம். இதற்கு பெயர்தான் முன்னேற்றம்.
இந்த மாற்றத்தை, இந்த முன்னேற்றத்தை உருவாக்கியது திராவிட தலைவர்கள், நம்முடைய திராவிட இயக்கம், திராவிட மாடல் அரசு. இந்த மாற்றத்திற்கு முதலில் அடித்தளமிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். அதை செயல்படுத்தி காட்டியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள். அதை தொடர்ந்து செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
உதாரணத்திற்கு இந்தியாவிலேயே நாம் நிறைய பெண் காவலர்களைப் பார்க்கின்றோம். ஆனால் உங்களில் எத்தனைபேருக்கு தெரியும் இந்தியாவிலேயே முதன்முதலாக காவலர்களில், பெண் காவலர்கள் இருக்க வேண்டும் என்று அறிமுகப்படுத்தியது நம்முடைய தமிழ்நாடு, அறிமுகப்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
அதே மாதிரி ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கு வேலை கிடைக்க வேண்டும். குறிப்பாக பள்ளிக்கூட ஆசிரியர் பணிகளில்,
பெண்களை அதிகம் பணி நியமனம் செய்தவர் டாக்டர் கலைஞர் அவர்கள். அதிலும், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முழுவதுமாகவே பெண்கள்தான் இருக்க வேண்டும் என்ற சட்டத்தை கொண்டு வந்து அதை செயல்படுத்தியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு கிராமப்புற பொருளாதாரத்துடைய முதுகெலும்பாக இருக்கக்கூடிய மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கியவரும் டாக்டர் கலைஞர் அவர்கள்தான். பெண் சிசுக் கொலை என்ற கொடுமை இன்றைக்கு சுத்தமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் அதிகமாக இருந்தது. ஆண் குழந்தைகளை விட, பெண் குழந்தைகளை மகிழ்ச்சியாக கொண்டாடுகின்ற சமூகமாக நம்முடைய தமிழ்ச் சமூகம் இன்றைக்கு மாறி இருக்கிறது.
முன்னாடியெல்லாம் ஒரு பழமொழியே சொல்வார்கள், ஆசைக்கு ஒரு பெண், ஆஸ்திக்கு ஒரு ஆண் என்று சொல்வார்கள். அதாவது, செல்லமாக வளர்ப்பதற்கு பெண் குழந்தையும், தன்னுடைய சொத்துகளை எல்லாம் எழுதி வைப்பதற்கு ஆண் குழந்தை என்ற ஒரு பழமொழி இருந்தது. சொத்துக்காக ஒரு ஆண் குழந்தை, மகிழ்ச்சிக்காக ஒரு பெண் குழந்தை என்று ஒரு பழமொழி இருந்தது.
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்தான் கிட்டத்தட்ட 25 வருடத்திற்கு முன்பே இந்தியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டம் கொண்டுவந்தார். அது என்னவென்றால், குடும்பச் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு என்று சட்டம் கொண்டு வந்தார். இன்றைக்கு, அந்த பழமொழி, பழைய மொழியாகி தமிழ்நாட்டில் காணாமல் போய்விட்டது.
இன்றைக்கு கலைஞர் அவர்கள் வழியில், இந்த காலத்திற்கு ஏற்றார் போல் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.

ஆட்சி பொறுப்பேற்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து பெண்களுக்கான விடியல் பயணம் திட்டம். இன்றைக்கு ஒவ்வொரு மகளிரும் அந்த திட்டத்தின் மூலமாக ஒவ்வொரு மாதமும் குறைந்தது 800 ரூபாயிலிருந்து 900 ரூபாய் வரை மாதம், மாதம் சேமித்துள்ளார்கள். இன்றைக்கு தமிழ்நாட்டிற்கு பிறகு பல மாநிலங்கள் இதை பார்த்து இந்த திட்டத்தை அவர்களும் செயல்படுத்தி இருக்கிறார்கள். இந்த விடியல் பயணத் திட்டம் வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
அதே மாதிரி பெண்கள் பள்ளியில் வந்து படித்தால் மட்டும் பத்தாது, உயர் கல்வி படிக்க வேண்டும் என்று நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிமுகப்படுத்திய திட்டம்தான் புதுமைப் பெண் திட்டம். அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் சேர்ந்தாலும், அவர்களுக்கு கல்வி ஊக்கத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் இந்த அரசே கொடுக்கிறது. மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுக்கிறார்.
அதே மாதிரி மகளிர் சுய உதவிக் குழுக்கள் பயனடைகின்ற வகையில் இந்தியாவிலே முதன் முறையாக ஒவ்வொரு குழுவில் இருக்கக்கூடிய சகோதரிகளுக்கும் அடையாள அட்டை கொடுக்கப்படுகிறது.
குடும்ப பொறுப்புகளை கவனித்து கொள்கின்ற பெண்களுக்கு, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை உருவாக்கினார் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் மூலம் இன்றைக்கு ஒவ்வொரு மாதமும் 1 கோடியே 30 இலட்சம் மகளிர் பயன்பெற்று வருகிறார்கள்.
அதே மாதிரி வயதான பெண்களுக்கு தாயுமானவர் திட்டம், ரேசன் பொருட்களை ரேசன் கடைக்கு வந்து வாங்கவேண்டாம். உங்கள் வீட்டுக்கே வந்து ரேசன் பொருட்களை கொடுக்கின்றோம் என்று தாயுமானவர் திட்டம், அன்புச்சோலை திட்டம், அன்புக்கரங்கள் திட்டம் என்று பல்வேறு திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பெண்களுக்கு என்றே உருவாக்கியிருக்கிறார்.
We are proud to say that Tamil Nadu has launched India's first free Human Papillomavirus (HPV) vaccination program for girls aged 9 to 14 years to prevent cervical cancer first time in our country.
இப்படி, குழந்தைகள் முதல் எல்லா வயதில் உள்ள மகளிர்க்கும் அரசு பல்வேறு திட்டங்களை அளித்து வருகிறது. தமிழ்நாட்டு மகளிருடைய வளர்ச்சியை, அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்வதற்கு இந்த Tamil Nadu We Safe திட்டம் நிச்சயம் துணை நிற்கும் என்று நாங்கள் நம்புகின்றோம்.
I thank the world bank for extending their support for implementing this scheme in our Tamil Nadu.
இந்த திட்டத்தின் செயல்பாட்டுக்காக உழைத்த சிறப்புத்திட்ட செயலாக்கத்துறையினுடைய அனைத்து அதிகாரிகள், அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த திட்டத்தால் பயன்பெற்றுள்ள அனைத்து மகளிருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கின்றேன்.
நம்முடைய திராவிட மாடல் அரசு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மகளிர் முன்னேற்றத்திற்காக என்றைக்கும் துணை நிற்பார். எனவே, மகளிர் நீங்கள் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு என்றைக்கும் துணை நிற்க வேண்டும்.
இவ்வாறு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.






