Tamilnadu

”இரும்பு மனிதர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : சட்டப்பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு புகழாரம்!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறைக்கான மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் அமைச்சர் எ.வ.வேலு பேசியது வருமாறு:-

தமிழ்நாடு அரசின் திட்டங்களை ஒன்றிய அரசின் நிதி ஆயோக் உள்ளிட்ட அமைப்புகள் எல்லாம் பாராட்டுகின்றன. மேலும் “இந்தியா டுடே” போன்ற பத்திரிக்கைகள் பாராட்டுகின்றன. நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தம் ஆற்றல்கள் மூலம் இன்று இந்தியாவின் சிறந்த முதலமைச்சராக திகழ்கிறார்.

நமது முதலமைச்சர் எப்போது தூங்குகிறார், எப்போது விழிக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. என்னை கேட்டால், 24 மணி நேரமும் உழைத்துக் கொண்டிருக்கிற ஒப்பற்ற தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இருந்து வருகிறார்.

நெடுஞ்சாலைத்துறை பாதுகாப்பான சாலைகளை வழங்குவதோடு மட்டும் அல்லாமல், பசுமையான சாலைகளையும் அமைத்து வருகிறது. கடந்த 4 ஆண்டுகளில் கழக அரசால் 1,584 உயர்மட்ட பாலங்கள் கட்டப்பட்டுள்ளன. 4 ஆண்டுகளில் சுமார் 8 இலட்சத்து 72 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.

அதேபோல், 4 ஆண்டுகளில் ரூ.858 கோடி மதிப்பிலான 25 புதிய ரயில்வே மேம்பால பணிகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. “நம்மசாலை” செயலியின் மூலமாக 13,300 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. 22 மாவட்டங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

இந்தியாவிலேயே கடல் நடுவே கட்டப்பட்டுள்ள ஒரே “கண்ணாடி இழைப் பாலம்“ தமிழ்நாட்டில் மட்டும்தான் அமைக்கப்பட்டுள்ளது. இதுவரை 6.31 லட்சம் சுற்றுலா பயணிகள் வந்துள்ளனர். சமூகநீதிக்காகவும் போராடிய தியாகி இமானுவேல் சேகரனாருக்கு இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில், ரூ. 3 கோடி மதிப்பீட்டில், திருவுருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்பட்டு, விரைவில் முதலமைச்சர் திறந்து வைக்க உள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையுடன் சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட தளபதி பொல்லான் அவர்களுக்கு ரூ.4.90 கோடி மதிப்பீட்டில்,  திருவுருவச் சிலையுடன் அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அது விரைவில் திறக்கப்படும்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு இடத்திற்கான ஒப்பந்ததாரருக்கு ரூ.6 கோடி நிலுவையில் உள்ளது என முதலமைச்சரிடம் தெரிவித்த போது உடனடியாக ஒப்பந்ததாரர்களுக்கு கொடுங்கள் என முதலமைச்சர் எந்த பாரபட்சம் இன்றி தெரிவித்த ஒரே முதலமைச்சர் தமிழ்நாடு முதலமைச்சர்தான். தாய்மொழியையும், தமிழையும் காப்பாற்ற முதல் குரல் எழுப்பிய நமது முதலமைச்சரை நாம் இரும்பு மனிதர் என்று அழைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “நடந்தை வாழி காவேரி திட்டம் விரைவில் தொடங்கப்படும்!” : அமைச்சர் துரைமுருகன் தகவல்!