Tamilnadu

ரூ.31 கோடியில் 5 தங்கத்தேர்கள்... பக்தர்கள் பயன்பாட்டிற்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு தகவல்!

சென்னை திருவல்லிக்கேணி, திருவட்டீஸ்வர சுவாமி திருக்கோயில் திருத்தேர் வெள்ளோட்டத்தில் கலந்து கொண்டு திருத்தேர் வெள்ளோட்டத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தொடங்கி வைத்தார். உடன் மாவட்ட செயலாளர் சிற்றரசு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரேணுகா தேவி மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பலர் இருந்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாவது, “திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு பல்வேறு வகையில் திருப்பணிகள் மேற்கொள்வது பழுதடைந்த திருதேர்களை சரி செய்வது போன்ற பணிகள் நடைபெற்று கொண்டு இருக்கிறது. புதிய தேர்களை கட்டுவது என்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு திருத்தேர்பவனிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ரூ.74.51கோடி மதிப்பீட்டில் 110 திருக்கோயில்களுக்கு 114 மரத்தேர்கள் செய்யும் பணிகள், ரூபாய் 16.20 கோடி மதிப்பீட்டில் 64 மரத்தேர் மராமத்து பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுக் கொண்டிருக்கிகிறது. 183 திருத்தேர் கோட்டைகள் அமைக்கப்படுகிறது. ரூ.31 கோடி மதிப்பீட்டில் 5 தங்கத் தேர்கள் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதில் பெரியபாளையம் கோவில் தங்கத்தேர் தற்பொழுது பக்தர்களின் நேர்த்திக்கடனுக்காக பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இன்னும் 4 தங்கத் தேர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் பக்தர்களின் பயன்பாட்டிற்கு வரும்.

இந்த கோயிலில் 40 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட மரத்தேர் சிதலமடைந்து உள்ளது. அதனைப் புனரமைத்து அம்மன் வீதி உலா வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும் புதிய தேர் வேண்டும் என்று மக்கள் கூறினர். அதற்காக ரூ. 76 லட்சம் மதிப்பில் புதிய தேர் அமைக்கும் பணி நடைபெற்று தற்போது திருத்தேர் பக்தர்களுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நவாப் தலைமையில் இருக்கக்கூடிய குடும்பத்திலிருந்து தினம்தோறும் கோவிலுக்கு பாலை கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஆண்டு நதி நிலை அறிக்கையில் 1000 ஆண்டு தொன்மையான கோயில்களை புணரமைப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ரூ.125 கோடி மானியம் வழங்கியுள்ளார்.” என்றார்.

Also Read: எழுத்தாளர் நாறும்பூநாதன் மறைவு : துணை முதலமைச்சர் இரங்கல்!