Tamilnadu

”2026 தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி கிடைக்கும்” : அமைச்சர் சேகர்பாபு பேட்டி!

இராமேஸ்வரம் - காசி ஆன்மிகப் பயணம் செல்லும் மூத்த குடிமக்களுக்கு அமைச்சர் சேகர்பாபு, பயண வழி பைகளை வழங்கி அவர்களை சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, ” திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு கோவில்களில் மூத்த குடிமக்கள் சிரமம் இல்லாம் செல்வதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. திருத்தணியில் மலைக்கு செல்லும் மூத்த குடிமக்களுக்காக லிப்ட் வசதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரோப் கார் வசதியும் உருவாக்கப்பட்டுள்ளது.

மூத்த குடிமக்கள் இராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு 420 பேர் ஆன்மிக பயணம் மேற்கொள்கிறார்கள். இன்று முதல்கட்டமாக 60 பேர் பயணம் செய்கிறார்கள். இந்த ஆன்மிக திட்டத்திற்காக ரூ.2 கோடியே 30 லட்சம் மானியம் வழங்கப்பட்டுள்ளது.

ஆறுபடை வீடுகளுக்கு ரூ.2 கோடியே 14 லட்சம் செலவில் 2022 பேர் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். இப்படி ஆன்மிக பயணங்களுக்கு இந்த அரசு கவனம் செலுத்தி வருகிறது.

மும்மொழி கொள்கையை தமிழ்நாடு ஏற்காது. எந்த எதிர்ப்புக்கும் எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடங்கமாட்டார். அரசியல் செய்ய எதுவும் இல்லாத நிலையில் கோயபல்ஸ் போன்று பேசியதையே திரும்ப திரும்ப பேசி திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகிறார் பா.ஜ.க தலைவர் அண்ணாமலை. 2026 தேர்தலில் பா.ஜ.கவுக்கு தமிழ்நாட்டு மக்கள் மரண அடி கொடுப்பார்கள்” என தெரிவித்துள்ளார்.

Also Read: “தனது கள்ளக்கூட்டணியை காப்பாற்ற இரட்டை வேடம் போடும் அதிமுக...” - அமைச்சர் ரகுபதி பதிலடி!