Tamilnadu

ரூ.8 கோடியில் மாற்றுத்திறன் பெண்கள் காப்பகம் முதல் பல்நோக்கு கட்டடங்கள் வரை... துணை முதலமைச்சர் திறப்பு !

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மொத்தம் ரூ.8.53 கோடி மதிப்பில் முடிவுற்ற வீடற்ற மாற்றுத்திறன் பெண்களுக்கான காப்பகம், உடற்பயிற்சி கூடங்கள், பல்நோக்கு கட்டடங்கள், உள்விளையாட்டரங்கம், சிற்றுண்டியகம் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார். 

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (1.3.2025)  மொத்தம் ரூ.8.53 கோடி மதிப்பில் முடிவுற்ற வீடற்ற மாற்றுத்திறன் பெண்களுக்கான காப்பகம், உடற்பயிற்சி கூடங்கள், பல்நோக்கு கட்டடங்கள், உள்விளையாட்டரங்கம், சிற்றுண்டியகம் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகியவற்றை திறந்து வைத்தார்.  

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை மாநிலக் கல்லூரியில் ரூ.78.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சிற்றுண்டியக கட்டட வளாகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து சென்னை மாநிலக் கல்லூரியின் இயற்பியல் துறை பிரிவில், இக்கல்லூரியில் பயின்று நோபல் பரிசு வென்ற, பாரத ரத்னா விருது பெற்ற தமிழ்நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி. இராமன் அருங்காட்சியகத்தை திறந்து வைத்து அவர் பயன்படுத்திய நிறமாலை மானி (Spectro Photograph ) கருவியினை பார்வையிட்டார்.

மேலும் சென்னை மாநிலக் கல்லூரியில் பயின்று நோபல் பரிசு வென்ற, பத்ம விபூசன் விருது பெற்ற தமிழ்நாட்டின் இயற்பியல் விஞ்ஞானி டாக்டர்.சு.சந்திரசேகர் அருங்காட்சியத்தையும் திறந்து வைத்து, சர்.சி.வி. இராமன் அவர்கள் பயின்ற வகுப்பறையில், மாணவ, மாணவிகளுடன் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டதுடன், மாணவர்களுடன் கலந்துரையாடினார். 

பின்னர் சென்னை பெருநகர மாநகராட்சி, தேனாம்பேட்டை மண்டலம் டாக்டர் பெசன்ட் சாலையில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.25 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்குக் கட்டடம் மற்றும் நவீன உடற்பயிற்சிக் கூடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.

தேனாம்பேட்டை மண்டலம், பாலாஜி நகரில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பல்நோக்கு மையக் கட்டடம் மற்றும் நியாய விலைக்கடையை திறந்து வைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு, குடிமைப் பொருட்களையும், புதிய மின்னணு குடும்ப அட்டைகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.

நுங்கம்பாக்கம் காம்தார் நகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாலையில் ரூ.4.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட வீடற்ற மாற்றுத்திறன் பெண்களுக்கான காப்பகம் மற்றும் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்து, மாற்றுத்திறனாளிகளுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து நுங்கம்பாக்கம் விளையாட்டு மைதானத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இறகுபந்து உள் விளையாட்டு அரங்கத்தை திறந்து வைத்து, இறகுப்பந்து விளையாடினார்.

இந்நிகழ்ச்சிகளில் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி, உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் நா.எழிலன், துணை மேயர் மு.மகேஷ்குமார், நிலைக்குழுத் தலைவர் (பணிகள்) நே.சிற்றரசு, மாமன்ற ஆளும்கட்சி துணைத்தலைவர் ஏ.ஆர்.பி.எம்.காமராஜ், உயர் கல்வித் துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, இ.ஆ.ப., மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், இ.ஆ.ப.,  கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் க.நந்தகுமார், இ.ஆ.ப., கல்லூரி கல்வி ஆணையர் திருமதி எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., கூடுதல் பதிவாளர் சா.ப.அம்ரித்,இ.ஆ.ப., மத்திய வட்டார துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார்,இ.ஆ.ப., மாமன்ற உறுப்பினர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.