Tamilnadu

“இந்தி ஆதிக்கத்துக்கு எதிராக நின்றதால் 45 நாட்கள் சிறையில் இருந்தேன்..” -அமைச்சர் MP சாமிநாதன் பெருமிதம்!

தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் இன்று (01.03.2025) சென்னை, இராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைப் பல்கலைக்கழக அரங்கத்தில் தமிழ்ச்செம்மல் விருதாளர்களுக்கு ரூ.25,000/-க்கான காசோலை, பொன்னாடை மற்றும் தகுதியுரை ஆகியவற்றை வழங்கி சிறப்பித்தார்.

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் அவர்கள் ஆற்றிய விழாப்பேருரை:

முத்தமிழறிஞர் கலைஞர் அய்யா அவர்கள் தமிழ் வளர்ச்சித் துறையின் அமைச்சராகவும், முதலமைச்சராக இருந்து பல்வேறு முன்னெடுப்புகளை செய்திருக்கிறார். அவர் வழியில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி எங்களுக்கு தெரிவித்து செயல்படுத்தி வருகிறார். தமிழ் வளர்ச்சித் துறையின் பல்வேறு முன்னெடுப்புகளுக்கு நீங்கள் ஆலோசனைகள் வழங்கக் கூடியவர்களாக இருக்கிறீர்கள்.

தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம், உலகத் தமிழராய்ச்சி நிறுவனம், என பல்வேறு துணை அமைப்புகள் மூலமாக தமிழ் வளர்ச்சித் துறை சாதனைகள் புரிந்து வருகிறது மற்றும் விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டிற்கான விருது பெறுவதற்கு தகுதி உள்ளவர்கள் விரைவில் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள்.

விருது வழங்குவதற்கு முறையாக குழு அமைக்கப்பட்டு, அந்த குழுவின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறது. மேலும், அவர்களுடைய சாதனைகளையும், அனுபவத்தையும் முன் வைத்து விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் வழங்கப்படும் தமிழ் செம்மல் விருது ஒரு ஆண்டுக்கு ஒரு மாவட்டத்திற்கு ஒருவரை தேர்வு செய்து வழங்கி வருகிறோம், 

தமிழ்த் தாத்தா என்று அன்போடு அழைக்கப்படக்கூடிய உ.வே.சா அவர்களுடைய 171-ஆம் ஆண்டு பிறந்த நாளை கடந்த வாரம் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் என்று அரசாணையாக வழங்கப்பட்டு அரசு விழாவாக எடுக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, ஜனவரி 25-ஆம் நாளன்று தமிழுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கு வீர வணக்க நாள் இந்த ஆண்டு முதல் அரசு விழாவாக அரசாணை பிறப்பிக்கப்பட்டு, முதலமைச்சர் அவர்கள் நடராசன் தாளமுத்து அவர்களின் நினைவிடத்திற்கு நேரடியாக சென்று மலர் வளையம் வைத்து தியாகிகளுக்கு மரியாதை செய்தவர் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

உலக தாய்மொழி நாள் கடந்த நான்கைந்து நாட்களுக்கு முன்பாக செம்மொழி மாநாடு நடைபெற்ற கோவையில் எடுத்திருக்கின்றோம். இன்றைய காலக்கட்டத்தில் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திணிக்கக்கூடிய ஒரு காலக்கட்டமாக இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் மூன்றாவது மொழியை விரும்பிப் படிக்கக்கூடியவர்களை ஏற்றுக் கொள்வோம், அதேநேரத்தில் இந்தி திணிப்பு என்பதை எந்தக் காலக்கட்டத்திலும் எதிர்ப்போம் என்று உணர்வோடு வைத்திருக்கின்றார். 

முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாள் விழாவில் நீங்கள் விருதுகள் பெறுவது கூடுதல் சிறப்பு என்பதை நான் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்துவிட்டு, இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம் என்று அவரே கோஷமிட்டு அவர்களுடைய உணர்வுகளை வெளிப்படுத்தினார். கடந்த காலத்தில், நானும் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு இந்தி ஆதிக்கம் அன்றைக்கு செலுத்தப்பட்டபோது இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் நகலை எரித்தற்காக கைது செய்யப்பட்டு 45 நாட்கள் கோவை சிறையில் இருந்தவன் என்பதை இந்த நேரத்தில் பெருமையோடு நான் சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்’ என்றார். 

பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்கும் தொண்டாற்றி வரும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்கும், அமைப்பிற்கும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புகளையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை செய்து வருகிறது.

அவ்வகையில் தமிழ்நாட்டில் தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களுக்கு அவர்களின் தமிழ்த் தொண்டினைப் பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் 2015ஆம் ஆண்டு முதல் மாவட்டத்திற்கு ஒருவர் வீதம் தமிழ்ச்செம்மல் விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வரிசையில் 2023ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதாளர்கள் கீழ்க்கண்டவாறு தெரிவு செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் - புலவர் க. ஐயன்பெருமாள் (வயது – 86), இராணிப்பேட்டை மாவட்டம் - முனைவர் க. பன்னீர் செல்வம் (வயது – 68), இராமநாதபுரம் மாவட்டம் - நீ. சு. பெருமாள் (வயது – 57), ஈரோடு மாவட்டம் - து. சுப்ரமணியன் (வயது – 56), கடலூர் மாவட்டம் - சி. ஆறுமுகம் (வயது – 52), கரூர் மாவட்டம் - முனைவர் க. கோபாலகிருஷ்ணன் (வயது – 40), கள்ளக்குறிச்சி மாவட்டம் - ச. பிச்சப்பிள்ளை (வயது – 61), கன்னியாகுமரி மாவட்டம் - முனைவர் வ. இராயப்பன் (வயது – 79), காஞ்சிபுரம் மாவட்டம் - முனைவர் த. ராஜீவ்காந்தி (வயது – 81), கிருட்டினகிரி மாவட்டம் - முனைவர் அ. திலகவதி (வயது – 52), கோயம்புத்தூர் மாவட்டம் - சு. தர்மன் (வயது – 74), சிவகங்கை மாவட்டம் - முனைவர் உ. கருப்பத்தேவன் (வயது – 52), செங்கல்பட்டு மாவட்டம் - புலவர் வ. சிவசங்கரன் (வயது – 82), சென்னை மாவட்டம் - இரா. பன்னிருகை வடிவேலன் (வயது – 47), சேலம் மாவட்டம் சோ. வைரமணி (எ) கவிஞர் கோனூர் வைரமணி (வயது – 54), தஞ்சாவூர் மாவட்டம் மருத்துவர் ந. ஜுனியர் சுந்தரேஷ் (வயது – 52), தருமபுரி மாவட்டம் - மா. சென்றாயன் வயது – (73), திண்டுக்கல் மாவட்டம் - முனைவர் இர.கிருட்டிணமூர்த்தி (மறைவு, வயது – 90), திருச்சிராப்பள்ளி மாவட்டம் - இராச. இளங்கோவன் (வயது – 54), திருநெல்வேலி மாவட்டம் - அ. முருகன் (வயது – 64), திருப்பத்தூர் மாவட்டம் - புலவர் நா. வீரப்பன் (வயது – 85), திருப்பூர் மாவட்டம் - க.ப.கி. செல்வராஜ் (வயது – 66), திருவண்ணாமலை மாவட்டம் - முனைவர் ச. உமாதேவி (வயது – 41), திருவள்ளூர் மாவட்டம் - சு ஏழுமலை (வயது -47), திருவாரூர் மாவட்டம் - முனைவர் வி. இராமதாஸ் (வயது – 78), தூத்துக்குடி மாவட்டம் - நெய்தல் யூ. அண்டோ (வயது – 53), தென்காசி மாவட்டம் - செ. கண்ணன் (வயது – 51), தேனி மாவட்டம் – முனைவர் மு. செந்தில்குமார் (வயது – 48), நாகப்பட்டினம் மாவட்டம் - கவிஞர் நாகூர் மு. காதர் ஒலி (வயது – 67), நாமக்கல் மாவட்டம் - ப. கமலமணி (வயது – 75), நீலகிரி மாவட்டம் - புலவர் இர. நாகராஜ் (வயது – 37), புதுக்கோட்டை மாவட்டம் - இரா. இராமநாதன் (வயது – 58), பெரம்பலூர் மாவட்டம் - மு. சையத்அலி (வயது – 64), மதுரை மாவட்டம் - புலவர் இரா. செயபால் சண்முகம் (வயது – 78), மயிலாடுதுறை மாவட்டம் - க.இளங்கோவன் (எ) நன்னிலம் இளங்கோவன் (வயது – 69), விருதுநகர் மாவட்டம் – கா.காளியப்பன் (வயது – 75), விழுப்புரம் மாவட்டம் - இரா.முருகன் (வயது – 57), வேலூர் மாவட்டம் இரா. சீனிவாசன் (வயது – 65).

Also Read: கும்பகோணத்தில் ‘முதல்வர் மருந்தகம்’ இல்லையா? - உண்மையை விளக்கிய TN Fact Check !