Tamilnadu

முதலமைச்சர் பேச்சை கேட்டு உத்வேகம்: மாநில அரசுக்கு கல்வி நிதி வழங்கிய கடலூர் சிறுமி.. குவியும் பாராட்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திராவிட மாடல் ஆட்சியில் 4 ஆண்டுகளாக நிறைவேற்றி வரும் பல்வேறு புரட்சிகரமான திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை அந்தந்த மாவட்டங்களுக்கு நேரடியாகச் சென்று கள ஆய்வு செய்து வருகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, கடலூர் மாவட்டத்தில் கடந்த பிப்.21, 22 ஆகிய இரண்டு நாள்களும் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அதோடு கடலூர் மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் கழக நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். அப்போது மேடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசு கல்வி நிதி மறுத்த விவகாரம் குறித்து ஆவேசமாக பேசினார்.

அதோடு மும்மொழி கொள்கை, குலக்கல்வி உள்ளிட்டவையை புகுத்தும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கு பள்ளிக்கல்வி நிதியான ரூ.2 ஆயிரம் கோடி தருவோம் என்று ஒன்றிய அமைச்சர் பேசியதற்கும், மேலும் தமிழ்நாடு இழக்கப்போவது ரூ.2 ஆயிரம் கோடி அல்ல , ரூ.5 ஆயிரம் கோடி என்றும் ஒன்றிய அமைச்சர் பேசியதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்தார்.

அதாவது, ரூ.5 ஆயிரம் கோடி அல்ல, ரூ.10 ஆயிரம் கோடி கொடுத்தாலும், தமிழ்நாட்டை 2000 ஆண்டுகளுக்கு பின்னோக்கி இழுத்து செல்லும் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த தேசிய கல்விக் கொள்கையில் கையெழுத்திட மாட்டேன் என்று திட்டவட்டமாக தெரிவித்து பதிலடி கொடுத்தார்.

இந்த சூழலில் இதனை கேட்ட சிறுமி, தற்போது தனது சேமிப்பில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை கல்வி நிதிக்காக தனது பங்களிப்பாக அளித்துள்ள நெகிழ்ச்சி நிகழ்வு நடந்துள்ளது. கடலூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர்களான பாலசுப்பிரமணியன், சாந்தி ஆகியர்களின் பேத்தியும் மருத்துவர்கள் கலைக்கோவன், கிருஷ்ண பிரியா ஆகியோர்களின் மகளுமான நன்முகை (வயது 4) என்ற LKG படிக்கும் சிறுமி, தன் பங்களிப்பாக தனது சேமிப்பில் இருந்து ரூ.10 ஆயிரம் பணத்தை மாநில கல்வி நிதிக்காக முதலமைச்சர் சிறப்புத் திட்டத்தில் வழங்கியுள்ளார்.

சிறுமியின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், அமைச்சர் அன்பில் மகேஸ், "அன்பு குழந்தை நன்முகையின் குரல் தமிழ்நாட்டின் மனசாட்சியை எதிரொலித்துள்ளது. இந்தக் குரல் ஒன்றியத்தில் அமர்ந்திருப்பவர்களுக்கு சென்றடைய வேண்டும். 'தமிழே அரண்' எனும் உரத்த குரல் கேட்குதா?" என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.

Also Read: “இது நம்முடைய குடும்பம்...” - திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!