Tamilnadu

RSS -BJP அரசின் சதி திட்டத்தை முறியடிப்போம் : திமுக மாணவர் அணி கூட்டத்தில் 5 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

திமுக மாணவர் அணியின் மாவட்ட, மாநில அமைப்பாளர்கள் கூட்டம், வருகிற பிப். 21 வெள்ளிக்கிழமை, சென்னை “அண்ணா அறிவாலயத்தில்”, செயலாளர் சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ தலைமையில் நடைற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட, மாநகர, மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்கள் அனைவரும் கலந்துக் கொண்டனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

தீர்மானம் - 1

கழகத் தலைவர் - தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்த நாள் - ‘இளைஞர் எழுச்சி நாளை’ “தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக” கழக மாணவர் அணியினர் எழுச்சியுடன் கொண்டாடுவோம்!

இளைய தலைமுறையினரால் அன்புடன் “அப்பா” என்று அழைக்கப்படும் உன்னதத் தலைவர், இளமைக் காலம் தொட்டு, இன்று வரையிலும் ஓயாத உழைப்பால், உறுதிமிக்கக் கொள்கைப் பிடிப்பால், கடைக்கோடி தொண்டனைப் போல் கழகக் கொடியை தன்னுடைய 15 வயதில் கையிலேந்தி, பிரச்சார நாடகங்களை நடத்தி, இளைஞர்களை ஒன்றிணைத்து, நெருக்கடிக் காலக் கொடுமைகளை (மிசா) சந்தித்து, தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்பதைப் போல், “வீழ்வது நாமாக இருப்பினும்; வாழ்வது தமிழாக இருக்கட்டும்!” என்ற முழக்கத்திற்குரிய உன்னதத் தொண்டனாய், தனது தியாகத்தால் அரசியல் வாழ்வைச் செதுக்கி, 50 ஆண்டுக் கால அரசியல் வாழ்வில் தோல்விகளைக் கண்டு துவளாமல், வெற்றிகளைக் கண்டு இறுமாப்புக் கொள்ளாமல், அனைவரையும் அன்பால் கட்டி அரவணைத்து, தான் கழகத் தலைவராய் பொறுப்பேற்ற நாள் முதல் கண்ட தேர்தல்களெல்லாம் வெற்றி முகமாய்க் கழகத்தைக் கொண்டு சென்று நம்மைத் தலைநிமிர வைத்திருக்கும் தன்னிகரில்லா தலைவர்; தமிழ்நாட்டு மக்களின் பேராதரவு பெற்று, ஆட்சி அமைத்த நாள் முதல் தமிழர்கள், தமிழ் மொழி, தமிழ்நாடு ஆகியவற்றின் நலனிற்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஓய்வறியமால் உழைத்துக் கொண்டிருக்கும் உன்னத முதல்வர்;

நம்முடைய கழகத் தலைவர்-தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 72-வது பிறந்த நாள் (01-03-2025) விழாவினை “இளைஞர் எழுச்சி நாள்” – தமிழ்நாடு ஏற்றம் பெற்ற நாளாக கொண்டாடிடும் வகையில், கழக மாணவர் அணி சார்பில் கழக இருவண்ண கொடியேற்றி, எளியோர்களுக்குப் பசியாற்றும் முகாம்கள், வேட்டி, சேலை வழங்குதல், மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கல்வித்தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவி செய்தல், விளையாட்டுப் போட்டிகள் நடத்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு முகாம்களை நடத்துதல், விளையாட்டுத் துறையில் சாதிக்க நினைக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்துதல், அரசியல் அறிவுத் தேடலுக்கான கருத்தரங்குகள், கவியரங்கம், பட்டிமன்றங்கள் நடத்துதல், மருத்துவ முகாம்களை நடத்துதல், இரத்ததான முகாம்களை நடத்துதல், மரக்கன்றுகளை நடுதல், மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல் முதியோர் இல்லம் – கருணை இல்லம் – பார்வையற்றோர் பள்ளி – மாற்றுத்திறனாளிகள் தங்கும் இல்லம், மனநலம் குன்றியோர் தங்கும் விடுதி, தொழுநோயாளிகள் இல்லம் ஆகியவற்றில் தங்கியுள்ள ஆதரவற்றோர்களுக்கு அறுசுவை உணவு வழங்குவது, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிப்பது உள்ளிட்ட மக்கள் நலத்திட்ட உதவிகளை கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநில, மாநகர, நகர, ஒன்றிய, பகுதி, பேரூர் அமைப்பாளர் மற்றும் துணை அமைப்பாளர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் நடத்திட வேண்டும் என்றும்;

மேலும், தமிழ் மாணவர் மன்றம் அமைப்பை உருவாக்கியுள்ள கல்வி நிலையங்களில், ஏழை, எளிய மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைகள் வழங்குதல், கலை, இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்துதல், விளையாட்டு போட்டிகள் நடத்துதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் நடத்துவதென இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 2

மீண்டும் மொழிப்போருக்கு நிர்பந்திக்கும் பாசிச பாஜக அரசு. தாய்த் தமிழைக் காக்க தமிழினமே களம் புகுவாய்!

பாஜக ஆட்சியில் அமர்ந்த 2014 ஆம் ஆண்டு முதல் ‘இந்தி-இந்து-இந்துஸ்தான்’ என்ற ஆர்.எஸ்.எஸ் -ன் செயல் திட்டத்தை நிறைவேற்றும் விதமாக, அரசமைப்பு அறத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. குறிப்பாக ஒன்றிய பா.ஜ.க. அரசின் “தேசிய கல்விக் கொள்கை” தமிழர்களின் தனித்துவமான மொழி - கலாச்சாரம் - பண்பாடு - நாகரிகம் ஆகியவற்றை சிதைக்கும் ஒரு மறைமுக செயல் திட்டம்; மும்மொழித் திட்டத்தின் வழியே இந்தியை தமிழ்நாட்டில் திணித்து மீண்டும் குலக்கல்வித் திட்டத்தை செயல்படுத்த முனையும் சூழ்ச்சி; அரசமைப்பு சட்டம் வலியுறுத்தும் கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கும் பாசிச பாஜக அரசின் எதேச்சதிகாரப் போக்கு; சுயமரியாதை பெற்ற மக்களை மறுபடியும் அடிமைகளாக்கும் நயவஞ்சகத் திட்டம்!

ஒன்றிய அரசின் திட்டங்களுக்கு இந்தி பெயரை வைப்பது; இந்திய ஒன்றியத்தில் இருக்கும் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகளுக்கு மிகக்குறைவாக நிதி ஒதுக்கிவிட்டு சமஸ்கிருதம் மற்றும் இந்திக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்குவது; ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் நிறுவனங்கள், துறைகள், அமைச்சகங்கள், வங்கிகள், தபால் நிலையங்கள், இரயில்வே உள்ளிட்ட அனைத்து மட்டங்களிலும் பாசிச பாஜக அரசு இந்தியை புகுத்திக்கொண்டே இருக்கிறது. பாஜகவின் இந்த தொடர் நடவடிக்கைகளுக்கு எதிராக திராவிட முன்னேற்றக் கழகம் சட்ட ரீதியாகவும் மக்கள் மன்றத்திலும் தொடர்ச்சியாக போராடி வருகிறது. மேலும் 18.10.2022 அன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் பா.ஜ.க. வின் வெவ்வேறு வடிவங்களிலான இந்தி திணிப்பு நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்தித் திணிப்பு தமிழ்நாட்டிற்கு ஒன்றும் புதிதல்ல. தமிழ்நாட்டில் இந்தியை திணிக்க முயன்ற போது தந்தை பெரியார் அவர்கள் “இந்தி வந்துவிட்டது! இனி என்ன ஒருகை பார்க்க வேண்டியதுதான்!” என்று முழங்கினார். பேரறிஞர் அண்ணா அவர்கள் “உள்ள உயிர் ஒன்றுதான்: அது போகப் போவதும் ஒரு முறைதான். இருமி, ஈளைக் கட்டிச் சாவதைவிட இந்தியை எதிர்த்து அந்த உயிர்போகிறது என்றால் அதிலே நான் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று முழங்கி மாபெரும் கிளர்ச்சிக்கு வித்திட்டார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது மாணவப் பருவத்தில் கையில் தமிழ்க் கொடி ஏந்தி, மாணவர்களை திரட்டி திருவாரூர் வீதியிலே ஊர்வலம் சென்று “வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம்! வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திரும்பிடுவோம்!” என்று முழங்கினார். பிறகு திமுக ஆட்சி அமைந்ததும் இருமொழிக் கொள்கையை பேரறிஞர் அண்ணா அவர்கள் சட்டமாக்கினார்.

“இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மூம்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய கல்விக்கான நிதி ரூ. 2152 கோடி தர முடியும்” என பா.ஜ.க.வின் ஒன்றிய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் வழியில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்...” என்று போர் முழக்கமிட்டு அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து எழுச்சிமிகு போராட்டத்தை தொடங்கி இருக்கிறார்.

இளந்தலைவர், துணை முதலமைச்சர் அவர்கள், “தமிழ்நாடு அரசையும் தமிழ்நாட்டு மக்களையும் நீங்கள் ஒரு போதும் மிரட்டி பணிய வைக்க முடியாது. எங்களுக்கு அரசியல் இரண்டாவதுதான். எங்களுக்கு முதன்மையானது மொழியுணர்வும் இன உணர்வும்தான். மொழி உரிமை, கல்வி உரிமை எவ்வளவு முக்கியம் என்பதை மக்களிடம் கொண்டு செல்வோம்” என முழங்கியிருக்கிறார்.

இப்படி தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் கல்விக் கட்டமைப்பை சீர்குலைக்கும் நோக்கத்துடன் தமிழர்களை இரண்டாந்தர குடிமக்களாக ஆக்கும், தமிழ்நாட்டு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக் குறியாக்கும், அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும் தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிராக கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு, இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, கழக மாணவர் அணி சார்பாக தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

நீட் தேர்வு, க்யூட் தேர்வு, தேசியக் கல்விக் கொள்கை, யு.ஜி.சி. 2025 வரைவு விதிமுறைகள் மூலம் தொடர்ச்சியாக தமிழ்நாட்டின் மாநில உரிமைகளை சிதைக்கும் விதமாகவும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் விதமாகவும் செயல்பட்டு வரும் ஒன்றிய பா.ஜ.க. அரசு தற்போது நம் உயிரிலும் உணர்விலும் கலந்துள்ள தாய்த் தமிழை அழித்து இந்தியை திணிக்கும் மும்மொழிக் கொள்கையை கட்டாயமாக்கும் வஞ்சக செயல் திட்டத்திற்கு தி.மு.க. மாணவர் அணி கடும் கண்டனங்களையும், எச்சரிக்கையையும் தெரிவித்துக் கொள்வதுடன், அதனை எதிர்த்து வீழ்த்த அனைத்துவிதமான போராட்டத்தையும் மேற்கொள்ள கழக மாணவர் அணி தயாராக உள்ளது என்பதை இக்கூட்டம் பதிவு செய்கிறது.

தீர்மானம் - 3

மதத்தின் பெயரால் பிற்போக்குச் சிந்தனையை தமிழ்நாட்டில் விதைக்கத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. அரசின் சதி திட்டத்தை முறியடிக்க பகுத்தறிவுப் பிரச்சாரம் மேற்கொள்வோம்!

இந்தியா முழுவதிலும் மதவெறி அரசியலை முன்னிறுத்தி மக்களை பிளவுபடுத்தி, மக்களின் ஒற்றுமையை சிதைத்து வரும் பா.ஜ.க. தற்போது எதிர்கால தலைமுறையான பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் மதவாத பிற்போக்கு சிந்தனையை விதைக்கத் தொடங்கி இருக்கிறது. ஆர்.எஸ்.எஸ் -ன் இந்துத்துவ மதவெறி செயல்திட்டத்தை அரசியலில் புகுத்திய பாஜக, தற்போது அவர்களின் செயல்திட்டத்தை மாணவர்களிடம் பரப்பி அவர்களின் அறிவியல், பகுத்தறிவுச் சிந்தனையை மழுங்கடிக்கும் வேலையை தொடங்கியிருக்கிறது. சுயமரியாதையையும், பகுத்தறிவையும் ஊட்டி தமிழர் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் திராவிட இயக்க மண்ணில், மூடநம்பிக்கையையும், மதவாத பிற்போக்கு சிந்தனையையும், இந்துத்துவத்தையும் புகுத்தும் ஆர்.எஸ்.எஸ்.-ன் செயல்திட்டத்தை முறியடிக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும்.

தந்தை பெரியார் அவர்கள் “பகுத்தறிவு என்பது ஆதாரத்தைக் கொண்டு தெளிவடைவது மூடநம்பிக்கை என்பது ஆராயாமல் ஏற்றுக்கொள்வது ஆகும். நமது இழிநிலை, முட்டாள்தனம் மாறவேண்டுமானால், நாம் ஒன்றும் கஷ்டப்பட வேண்டியதில்லை. பகுத்தறிவினைக் கொண்டு தாராளமாகப் பல தடவை நன்கு சிந்தித்தால் ஒவ்வொன்றும் தானாகவே நழுவி விடும்” என்று நமக்கு பகுத்தறிவு ஊட்டி நம்மை தலைநிமிர வைத்தார். பேரறிஞர் அண்ணா அவர்கள் “மதம் என்ற சொல்லின் பொருள் ‘வெறி’ என்பது தானே; வெறியற்ற மக்களுக்கு வெறியை உண்டாக்குவது முறையாகாதென்பதனை மதப்பற்றுடையார் மதியில் பதியுமாறு செய்தல் வேண்டும்” என்று மதவெறி ஆபத்தானது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என்று நமக்கு வழிகாட்டினார்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது எழுத்துக்களிலும் திரைப்படங்களிலும் பகுத்தறிவுக் கருத்துக்களை தொடர்ச்சியாக விதைத்து வந்தார். குறிப்பாக “அம்பாள் எந்தக் காலத்திலடா பேசினாள்” என்று தொடங்கி “கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்.. கோவில் கூடாது என்பதற்காக அல்ல; கோவில் கொடியவரின் கூடாரமாய் இருக்கக் கூடாது என்பதற்காக. பூசாரியைத் தாக்கினேன் அவன் பக்தன் என்பதற்காக அல்ல; பக்தி பகல் வேஷமாகிவிட்டதை கண்டிப்பதற்காக..” இப்படி எண்ணற்ற வசனங்களின் மூலம் பகுத்தறிவுச் சிந்தனையை விதைத்தார்.

கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “மாணவர்கள் பழமைவாத கருத்துகளை புறந்தள்ளி, பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும்” என்று முழங்கி மாணவர் சமுதாயத்திடம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும், பகுத்தறிவுச் சிந்தனையை வளர்க்கும் எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இளந்தலைவர் - துணை முதலமைச்சர் அவர்கள் “இன்றைய காலத்தில் பகுத்தறிவு மிக மிக முக்கியம். எது சரி எது தவறு, எது உண்மை எது பொய் என்று பகுத்தறிவுப் பூர்வமாக சிந்தித்து முடிவெடுக்க நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்” என்று கூறி இன்றைய இளைய சமுதாயத்திற்கு வழிகாட்டி வருகிறார்.

தென்னிந்தியா குறிப்பாக தமிழ்நாடு எப்போதும் பிற்போக்கு, மதவெறி சிந்தனைகளுக்கு எதிரானது. இதை சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள் தனது எழுத்துகளில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “வடக்குக்கும் தெற்குக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு உள்ளது. வடக்கு மிதவாத மனோபாவம் கொண்டது. தெற்கு முற்போக்கு எண்ணம் கொண்டது. வடக்கு மூட நம்பிக்கைகளில் மூழ்கிப் போயிருப்பது. தெற்கு பகுத்தறிவுப் பாசறையாக இருப்பது. தெற்கு கல்வித் துறையில் முந்தி நிற்பது. வடக்கு இத்துறையில் பிந்தியிருப்பது. தெற்கத்திய கலாச்சாரம் புதுமையானது. வடக்கத்திய கலாச்சாரம் பழமையானது.”

இப்படி பகுத்தறிவுப் பாசறையாகத் திகழும் தமிழ்நாட்டில் அறிவியலுக்கு எதிரான பாஜகவின் பிற்போக்குப் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் கழகத் தலைவர்-மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஒப்புதலோடு, இளந்தலைவர், மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, கழக மாணவர் அணி சார்பாக மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மை, பகுத்தறிவுச் சிந்தனைகளை வளர்க்கும் விதமாக அறிவியலாளர்கள், விஞ்ஞானிகள், பகுத்தறிவாளர்கள் பங்கேற்கும் “பகுத்தறிவுப் பிரச்சாரக் கருத்தரங்கம்” நடத்திடவும்,

தமிழ் மாணவர் மன்றம் (TSC) சார்பாக மூட நம்பிக்கை, பிற்போக்கு தனத்திற்கு எதிராக, மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கும் “பகுத்தறிவுப் பரப்புரை நாடகங்கள், குறு நாடாகங்கள், மெளன மொழி (Mime) நாடகப் போட்டிகளை” தமிழ்நாடு முழுவதும் பள்ளி கல்லூரி மாணவர்களிடம் நடத்திட மாணவர் அணியின் இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

தீர்மானம் - 4

ஒன்றிய கல்வி அமைச்சர் ஆணவப் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு, தமிழ்நாட்டின் கல்வி நிதியை வழங்கும் வரையில் தமிழ்நாடு முழுவதும் தொடர் மாணவர் போராட்டம்!

தேசிய கல்விக் கொள்கையையும், மும்மொழிக் கொள்கையையும் ஏற்றுக் கொண்டால் தான், தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய கல்விக்கான நிதியை தருவோம் என பா.ஜ.க.வின் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆணவத்தோடு பேசியிருக்கிறார். கல்வி, மருத்துவம், சுகாதாரம், தொழில் வளர்ச்சி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் முன்னேறிய மாநிலமாக, தமிழ்நாடு விளங்குவதை பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, தன்னால் தமிழ்நாட்டில் காலூன்ற முடியவில்லையே என்ற வெறுப்புணர்வோடு தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

“கல்வி” தான் தமிழ்நாட்டின் இந்த உயரிய நிலைக்கு காரணம் என்பதை அறிந்து, அதனை சிதைக்க வேண்டுமென்ற உள்நோக்கத்தோடு பா.ஜ.க. அரசு கல்வித் துறைக்கு வழங்க வேண்டிய நிதியை தர மறுத்து, “இந்திய அரசியலமைப்பு சட்டப்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் தான் தமிழ்நாடு அரசிற்கு நிதி வழங்குவோம்” என பா.ஜ.க.வின் ஒன்றிய கல்வி அமைச்சர் திரு. தர்மேந்திர பிரதான் பேசியிருக்கிறார். அவர் குறிப்பிடுவது, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் வகுத்த அரசமைப்புச் சட்டத்தையா? அல்லது மனுதர்ம சட்டத்தையா? என்ற கேள்வி எழுகிறது. கூட்டாட்சி தத்துவத்தையும், தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வி உரிமையையும் சிதைக்கும் வகையில், சட்டத்திற்கு புறம்பாக ஒன்றிய கல்வி அமைச்சர் பேசியதற்கு தி.மு.க. மாணவர் அணி தனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

மேலும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டுமென்றும், அவர் பேசிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டுமென்றும், கல்வித்துறைக்கான நிதியை விடுவிக்கும் வரையில் கழக மாணவர் அணி சார்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கறது.

அதனைத்தொடர்ந்து, மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு – தமிழ்நாடு (FSO-TN) கூட்டமைப்பின் பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானத்தின்படி, மொழிப்போருக்கு வித்திடும் வகையில் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசை கண்டித்து, வரும் 25.02.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நடைபெறும் “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில்” தி.மு.க. மாணவர் அணி, மாணவர் சேனையுடன் பெருந்திரளாக கலந்துக் கொண்டு, ஆர்ப்பாட்டம் பெருவெற்றியடைய இக்கூட்டம் உறுதி ஏற்கிறது.

தீர்மானம் - 5

தமிழ்நாட்டின் "இரும்பின் தொன்மை" வரலாற்றை உலகிற்கு அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி!

தமிழ்நாட்டின் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்த இரும்பு தொல்பொருட்களை கதிரியக்க கால கணக்கெடுப்பு ஆய்வினை மேற்கொண்ட போது அவை கி.மு 3345 தொன்மையானது என்று தொல்லியல் துறை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. அதாவது சுமார் 5300 ஆண்டுகளுக்கு முன்பாகவே தமிழர்கள் இரும்பை பயன்படுத்தி உள்ளனர் என்று தமிழர்கள் பெருமை கொள்ளும் வரலாற்றுச் சிறப்பு மிக்க அறிவிப்பை கடந்த 23.01.2025 அன்று கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டு, “இந்தியாவில் இரும்பின் தொன்மை வரலாறு தமிழ் மண்ணிலிருந்து தான் எழுதப்படும்” என்று சூளுரைத்த திராவிட மாடல் அரசின் நாயகன், கழகத் தலைவர்- தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு இக்கூட்டம் மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.

Also Read: 40 ஆயிரம் கலைஞர்கள் பயனடையும் வகையில் 90 ஏக்கர் நிலம் குத்தகை! : துணை முதலமைச்சர் உதயநிதி பெருமிதம்!