Tamilnadu
”மெட்ரோ ரயில் பணிகளை ஆய்வு செய்த முலமைச்சர் மு.க.ஸ்டாலின்” : பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (13.2.2025) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இரண்டாம் கட்டப் பணியின் கீழ், கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரையிலான பணியில், 300 மீட்டர் அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் சவாலான வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசால் 2007-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டு, அப்போதைய துணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 2009-ஆம் ஆண்டு ஜுன் மாதம் பணிகள் தொடங்கப்பட்ட 54.1 கி.மீ நீளத்திலான சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம்–I இன் இரண்டு வழித்தடங்களில் முழுமையாக பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தின் கீழ் நாளொன்றிற்கு சராசரியாக 3.1 இலட்சத்திற்கும் மேல் பயணம் செய்து வருகின்றார்கள்.
அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலைய பகுதியில் சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெளிவரும் பணியினை பார்வையிட்டு ஆய்வு செய்தல் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்-II-இன் கட்டுமானப் பணிகள், 3 வழித்தடங்களில், 118.9 கி.மீ நீளத்தில் 128 ரயில் நிலையங்களுடன் 63,246 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
இப்பணிக்காக 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கட்டம்-II-இல் மொத்தம் 42.6 கி.மீ நீளத்திலான சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. வழித்தடம் 3-இல் மட்டும் 26.7 கி.மீ நீளத்தில் மாதவரம் – கெல்லீஸ் மற்றும் கெல்லீஸ் –தரமணி ஆகிய இரண்டு பகுதிகளாக சுரங்கம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் இரண்டாவது பகுதியான கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான சுரங்க வழித்தடப் பகுதியில் கிரீன்வேஸ் மெட்ரோ நிலையம் முதல் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் வரை வருகிறது.
பல்வேறு விதமான மண் தன்மைகள், கடினமான பாறைகள், அதிநீரோட்ட பகுதிகள் மற்றும் நகர்புறத்திற்கென இடர்பாடுகள் ஆகிய சிக்கலான சவால்களை வெற்றிகரமாக சந்தித்து, அடையாறு என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் ஜுன் 2023-இல் சுரங்கம் தோண்டும் பணிகளை கிரீன்வேஸ் சாலை மெட்ரோ நிலையத்திலிருந்து தொடங்கி, அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையத்திற்கு அருகில், அடையாறு ஆற்றின் கீழ் சுமார் 40 முதல் 50 அடி ஆழத்தில் 300 மீட்டர் நீளத்திற்கு அடையாறு ஆற்றிற்கு கீழ் செல்லும் வழித்தடப் பகுதி உட்பட மொத்தம் 1.218 கி.மீ தூரத்தை கடந்து அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. செப்டம்பர் 2024-இல் காவேரி என்று பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், டவுன்லைன் சுரங்கம் தோண்டும் பணியினை முடித்துள்ளது.
சுரங்கம் தோண்டும் இயந்திரம் அடையாறு சந்திப்பு மெட்ரோ நிலையம் அருகில் வெளிவந்தது. இந்த முக்கியமான பணியினை முதலமைச்சர் அவர்கள் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தையும் உரிய காலத்தில் முடித்திட வேண்டும் என்று அலுவலர்களுக்கு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டார்.
Also Read
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!
-
டெஸ்ட் போட்டியில் வரலாறு படைத்த வங்கதேசம்.. ஸ்டார்க்கின் அதிரடி.. Come Back கொடுத்த ஆஸ்திரேலியா!