Tamilnadu

அரிசிக் கடத்தல்: ஒரே ஆண்டில் 11,571 நபர்கள் கைது - குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை அதிரடி!

அரிசிக் கடத்தல் உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மேல் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11,085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 11,571 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை பொது விநியோகத்திட்ட அரிசி கடத்தலை தடுக்க தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு எடுத்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக 01.01.2024 முதல் 31.12.2024 வரையிலான காலகட்டத்தில் பின்வரும் வழக்குகள் பதியப்பட்டு, அக்குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றின் விவரங்கள் பின்வருமாறு:

இக்காலகட்டத்தில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையில் மொத்தம் 11,085 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கூறிய வழக்குகளில் 33,980 குவிண்டால் பொது விநியோகத் திட்டஅரிசி மற்றும் 18,898 லிட்டர் பொதுவிநியோகத் திட்ட மண்ணெண்ணெய் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 1,984 சமையல் எரிவாயு உருளைகள் கைப்பற்றப்பட்டுள்ளது.

மேலும் கலப்படடீசல் 7,12,682 லிட்டர் கைப்பற்றுகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 84 இதர வழக்குகளில் இன்றியமையாப் பண்டங்கள் கோதுமை, து.பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை கைப்பற்றப்பட்டுள்ளது. மேற்கூறியவழக்குகளில் கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.9,24,88,667/- ஆகும். இக்குற்றங்களில் ஈடுபட்ட 11,571 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கடத்தனுக்கு பயன்படுத்தப்பட்ட 2,012 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 2,300 வாகனங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கல் பராமரிப்புச் சட்டத்தின்கீழ் 89 நபர்கள் தடுப்புக்காவல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க அண்டை மாநில கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வவோர் பாதுகாப்பு அலுவலர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் இணைந்து 41 ஒருகிணைப்பு கூட்டம் நடத்தி மாநில எல்லையில் அத்தியாவசியப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்படும் நபர்கள் மீதும் இன்றியமையாப் பண்டங்கள் சட்டம் 1955-ன்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு உரிய மேல்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது

மேலும், இன்றியமையாப் பண்டங்கள் கடத்தல் மற்றும் பதுக்கல் தொடர்பாக பொது மக்கள் புகார் அளிக்க 1800 599 5950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணும் வாட்ஸ் அப் எண் 96777 36557 தொடர்பு கொண்டு கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் தெரிவிக்கலாம் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.