Tamilnadu

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி காலமானார். இதைத்தொடர்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவைச் செயலகம் அறிவித்தது.

அதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 5 ஆம் தேதியும், வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8 ஆம் தேதியும் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. மேலும் இதற்காக தேர்தல் பிரச்சாரம் பிப்ரவரி 3-ம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டது.

பின்னர் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை திமுக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதோடு, தி.மு.க சார்பில் அக்கட்சியின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என தி.மு.க தலைமை கழகம் அறிவித்தது.

எதிர்க்கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்த நிலையில், சில சிறிய கட்சிகள் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். தி.மு.க வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் தொகுதி முழுக்க அனைத்து மக்களையும் சந்தித்து வாக்கு சேகரித்தார்.

இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஈரோடு கிழக்கு தொகுதியில் உள்ள 2 லட்சத்து 26 ஆயிரத்து 537 வாக்காளர்கள் வாக்களிக்க ஏதுவாக 237 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.மேலும் மத்திய தொழில்பாதுகாப்பு படையினர், காவலதுறையினர் உள்பட 2675 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் தனது வாக்கை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினார். இன்று மாலை 6:00 மணிக்குள் வாக்குச்சாவடிக்குள் வரும் அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

Also Read: TR பாலுவுக்கு எதிராக அவதூறு செய்தி... ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க ஜூனியர் விகடனுக்கு நீதிமன்றம் உத்தரவு!