Tamilnadu
பிரதம மந்திரியின் பெருந்திட்டத்திற்கு ரூ.108.71 கோடி ஒதுக்கீடு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் குடியிருக்கும் தோடா, இருளர், பனியன், காட்டுநாயக்கன், கோட்டா மற்றும் குரும்பா ஆகிய ஆறு பழங்குடியினர்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு வருகிறது.
பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டிற்கான இலக்காக 4811 வீடுகளை ஒன்றிய அரசு நிர்ணயித்துள்ளது. அதே போல், 2024-25 ஆம் ஆண்டுக்கான இலக்கு 7,136 வீடுகள் ஆகும். ஆக மொத்தம் பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான மொத்த இலக்காக 11,947 வீடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்த இலக்கில் நாளதுவரை 6,559 வீடுகளுக்கு அனுமதி ஆணை வழங்கப்பட்டு பணிகள் முன்னேற்றத்தில் இருந்து வருகிறது. மீதமுள்ள வீடுகளும் தகுதியுள்ள பயனாளிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் ஒரு வீட்டிற்கான அலகுத்தொகை ரூ.2.00 இலட்சம் என ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்டு, அத்தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதற்காக நாளதுவரை ரூ.22.466 கோடி பெறப்பட்டுள்ளது. இதில், ஒன்றிய அரசின் பங்குத்தொகை ரூ.13.48 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை ரூ.8.98 கோடியாகும்.
இந்நிலையில், ஒன்றிய அரசால் நிர்ணயிக்கப்பட்ட அலகுத் தொகையான ரூ.2.00 இலட்சம் வீட்டின் கட்டுமானத்திற்கு போதுமானதாக இல்லாததால் பழங்குடியின மக்களின் பொருளாதார நிலையைக் கருத்தில்கொண்டு தமிழ்நாடு அரசு, அரசாணை (நிலை) எண்.36, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை (ம.அ.தி2(1)த் துறை, நாள்.01.03.2024-ன் மூலமாக வீட்டின் கட்டுமானத் தொகையினை சமவெளி பகுதியில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,07,000/- எனவும் மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்படும் ஒரு வீட்டிற்கு ரூ.5,73,000/- எனவும் (ஒன்றிய அரசின் அலகுத்தொகை ரூ.2.00 லட்சம் உட்பட) உயர்த்தி ஆணை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தமிழ்நாடு அரசு தற்போது ரூ.108.71 கோடியை மாநில அரசின் கூடுதல் நிதியாக விடுவித்து ஆணை வழங்கியுள்ளது. இத்தொகையிலிருந்து, வீட்டின் கட்டுமான நிலைக்கு ஏற்ப பயனாளிகளின் வங்கிகணக்கிற்கு நேரடியாக தொகை விடுவிக்கப்பட்டு வருகிறது.
இந்நிதி ஒதுக்கீடு “பண்டைய பழங்குடியின மக்களுக்கான பிரதம மந்திரியின் பெருந்திட்டத்தின்” கீழ் கட்டப்படும் வீடுகளை விரைந்து முடிக்க உதவிகரமாக இருக்கும். விரைவில் அனைத்து வீடுகளும் கட்டி முடிக்கப்பட்டு, மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தமிழ்நாடு அரசால் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
Also Read
-
கரூருக்கு முன்னர் நாமக்கல்லில் ஏற்பட்ட பெரிய அசம்பாவிதம்- கள அனுபவத்தை விவரிக்கும் பேரா.பெருமாள்முருகன்!
-
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக நாடகம்.. தடுத்து நிறுத்திய ஆசிரியர்கள்.. குவிந்த கண்டனம்.. கேரள அமைச்சர் அதிரடி!
-
முதுபெரும் எழுத்தாளர் கொ.மா.கோதண்டம் மறைவு... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!
-
பதைபதைக்க வைக்கும் வீடியோ.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு.. விஜய் பிரச்சார வாகன ஓட்டுநர் மீது பாய்ந்த வழக்கு!
-
வாகன ஓட்டிகள் கவனத்திற்கு... Fastag இல்லையென்றால் இருமடங்கு கட்டணம்.. வருகிறது புதிய நடைமுறை!