Tamilnadu

பெரியாரை எதிர்ப்பவர்கள் இதைச் செய்ய தயாரா? : ஊடகவியலாளர் செந்தில் வேல் கேள்வி!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் பா.ஜ.கவை சேர்ந்த தலைவர்கள் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் உண்மைக்கு மாராண தகவல்களை இவர்கள் மக்கள் மத்தியில் ஊடுறுவ பார்க்கிறார்கள்.

இந்நிலையில் பெரியாரை எதிர்ப்பவர்கள் இதைச் செய்ய தயாரா? என ஊடகவியலாளர் செந்தில் வேல் 10 கேள்விகளை எழுப்பியுள்ளார். அதன் விவரம் வருமாறு:-

1. பெரியார் ஆங்கிலம் படிக்கச் சொன்னார் என்போர் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலம் தெரியாதவர்களாய் வளர்க்கத் தயாரா?

2. பெரியார் கருப்பையை அகற்றச் சொன்னார் என்போர் அக்காலம் போல 10 பிள்ளைகள் பெறத் தயாரா?

3.பெரியாரின் பெண்ணுரிமையால் கட்டுப்பாடு போச்சு என்போர் தங்கள் பெண் பிள்ளைகளின் கல்வியை நிறுத்தத் தயாரா?

4. பெரியார் பண்பாட்டை சீரழித்து விட்டார் என்போர் அக்காலத்தைப் போல் தங்கள் பெண் குழந்தைகள் சிறுமியாய் இருக்கும்போதே திருமணம் செய்து வைக்கத் தயாரா?

5.பெரியார் கற்பு குறித்து விமர்சித்து விட்டார் என்போர் தங்கள் வீடுகளில் இளம் வயது கைம்பெண்களுக்கு மறுமணம் செய்யாமல் வெள்ளைச் சேலையுடன் வைக்கத் தயாரா?

6.பெரியார் சாதி ஒழிப்பை பேசிவிட்டார் என்போர் தங்களுக்கு மேலான சாதிகளாக நினைப்போரிடம் அடங்கி ஒடுங்கி போகத் தயாரா?

7.பெரியார் மனுநீதிக்கு எதிராக பேசிவிட்டார் என்போர் மனுநீதிப்படி கோவிலுக்குள்ளேயே போகாமல் தீண்டாமையுடன் வாழத் தயாரா?.

8.பெரியார் சாஸ்திரங்களை எதிர்த்தார் என்போர் கணவன் இறந்த பின் உடன்கட்டை ஏறத் தயாரா?

9.பெரியாரை தமிழரே இல்லை என்போர் அவரின் எழுத்துச் சீர்திருத்தத்தை புறக்கணித்து பழைய காலத் தமிழில் எழுதத் தயாரா?

10. பெரியாரை பணத்தாசைக்காரர் என்போர், பெரியாரைப் போல் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் அறக்கட்டளையாக மாற்றி கல்வி, மருத்துவ சேவை கொடுக்கத் தயாரா?.

Also Read: திருச்செந்தூர் To இராமேஸ்வரம்.. தமிழ்நாடு அரசு சார்பில் 3 நாட்கள் ஆன்மிக சுற்றுலா - விவரம்!