Tamilnadu
திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு... முதலமைச்சர் பங்கேற்பு : எங்கு? எப்போது? - விவரம்!
ஜனவரி 18 - ஆம் தேதி சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெற இருக்கும் திமுக சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு குறித்து செய்தியாளர்கள் சந்திப்பு அந்த மாநாட்டு திடலில் இன்று (ஜன.16) நடைபெற்றது.
அப்போது திமுக சட்டத்துறை செயலாளரும் எம்.பி.-யுமான பேசியது வருமாறு :
தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு வருகின்ற 18.01.2025 சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 7.00 மணி வரை ஒரு நாள் மாநாடாக சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ் மைதானத்தில் தந்தை பெரியார் முற்றத்தில், பேரறிஞர் அண்ணா திடலில், டாக்டர் கலைஞர் அரங்கத்தில் மிக பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இம்மாநாட்டு வளாகத்தில் முன்னாள் ஒன்றிய அமைச்சர், கழகத்தின் மூத்த முன்னோடி நினைவில் வாழும் N.V.N.சோமு அவர்களின் பெயரில் கொடி மேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடி மேடையில் நிறுவப்பட்டுள்ள 50 அடி உயர கொடி கம்பத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி அவர்கள் காலை 8.00 மணியளவில் இருவர்ணக் கொடியை உயர்த்தி வைக்கிறார்.
இம்மாநாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த வழக்கறிஞர்களான நினைவில் வாழும் தி.மு.க. முன்னாள் பொருளாளர் S.J.சாதிக் பாட்ஷா, P.T.R.பழனிவேல் ராஜன், A.L.சுப்ரமணியம், அ.அ.ஜின்னா ஆகியோர் பெயரில் தோரண வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. காலை 8.15 மணியளவில் கழக பொதுச் செயலாளர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்கள் மாநாட்டை துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியின் துவக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர், இனமான காவலர் பேராசிரியர் ஆகியோரின் திருவுருவப்பட திறப்பு நிகழ்வு நடைபெறுகிறது. தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை சட்டத்துறைத் தலைவர் இரா. விடுதலை அவர்களும், பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவப்படத்தை நானும் (என். ஆர். இளங்கோ), முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் படத்தினை சட்டத்துறை இணை செயலாளர் K.M. தண்டபாணி அவர்களும், டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவப் படத்தினை சட்டத்துறை இணைச் செயலாளர் பி.ஆர்.அருள்மொழி அவர்களும் இனமான காவலர் பேராசிரியர் அவர்களின் திருவுருவப் படத்தினை சட்டத்துறை இணைச் செயலாளர் என். மணிராஜ் அவர்களும் திறந்து வைக்கிறோம். தி.மு.க. அமைப்புச் செயலாளர் R.S.பாரதி அவர்கள் மாநாட்டு துவக்க உரையாற்றுகிறார்.
அதன்பின் மாநாட்டில் முதல் அமர்வாக ``ஒரு நாடு ஒரு தேர்தல்” என்கிற தலைப்பில் நடைபெறும் ஆங்கில கலந்துரையாடல் நிகழ்வில் மூத்த வழக்கறிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் கபில்சிபில் அவர்களும், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி அவர்களும், மூத்த பத்திரிகையாளர் இந்து என். ராம் ஆகியோர்கள் பல்வேறு கருத்துகளை முன்வைத்து விவாதிக்கின்றார்கள்.
இரண்டாவது அமர்வில் `திராவிடவியல்’ என்ற புதுமையான தலைப்பில் திராவிட இயக்கம் தமிழ்மண்ணிற்கு ஆற்றிய அரும்பணிகள் குறித்த கருத்தரங்கு நடைபெறுகிறது. இக்கருத்தரங்கில் கழகத் துணை பொதுச் செயலாளர் ஆ.இராசா,M.P., திட்டக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன், வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ஆ.கருணானந்தன், திராவிடர் கழக துணை பொதுச் செயலாளர் செ. மதிவதனி, ஊடகவியலாளர் மில்ட்டன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரையாற்றுகின்றார்கள்.
அதன்பின்னர் நடைபெறும் 3-வது அமர்வில் “இந்திய மக்களாகிய நாம்” என்ற தலைப்பில் சிறப்பு கருத்துரை நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிகழ்வில் கழக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி N.சிவா.,M.P. அவர்களும், திராவிடர் கழக பிரச்சாரக் குழு செயலாளர் அ.அருள்மொழி, வரலாற்று ஆய்வாளர் சூர்யா சேவியர், திராவிட இயக்க ஆய்வாளர் தமிழ் காமராசன், ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி ஆகியோர் பங்கேற்று உரையாற்றுகிறார்கள்.
நிகழ்ச்சியின் நிறைவு அமர்வாக நடைபெறும் அரசியல் அரங்கில் தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் நிறைவுரையாற்றுகிறார். மேலும் இவ்வரங்கில் கழகப்பொதுச் செயலாளர் துரைமுருகன், கழகப் பொருளாளர் T.R.பாலு,M.P., முதன்மைச் செயலாளர் K.N.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, அந்தியூர் ப.செல்வராஜ், கனிமொழி கருணாநிதி M.P., ஆகியோர்கள் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள் .
தி.மு.க வரலாற்றில் முத்தாய்ப்பாய் இடம்பெறக் கூடிய அளவில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் தமிழ்நாடு மற்றும் புதுவை ஆகிய மாநிலங்களில் இருந்து சுமார் 10,000 வழக்கறிஞர்கள் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர். இம்மாநாட்டில் கழகத் தலைவர் அவர்கள் தி.மு.க. வழக்கறிஞர் அணியில் உறுப்பினராக புதுப்பித்த வழக்கறிஞர்களுக்கும், புதிதாக இணைந்த இளம் வழக்கறிஞர்களுக்கும், நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய வழக்கறிஞர்களுக்கான அடையாள அட்டையை வழங்கும் நிகழ்வை தொடங்கி வைக்கிறார்.
மேலும் இம்மாநாட்டில் ஜனநாயக நாடான மாத சார்பற்ற இந்தியாவை கேலிக்கூத்தாக்கும் வகையில் ஒன்றிய அரசால் சர்வாதிகாரத்துடன் கொண்டுவரப்பட்ட ஒரு நாடு ஒரு தேர்தல் என்ற சட்டத்தைக் கண்டித்தும், மேலும் பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.
இந்த மாநாட்டில் குறைந்தது பத்தாயிரத்திற்கும் அதிகமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கிறோம். பத்திரிகை சுதந்திரத்தையும் தனிமனித உரிமைகளையும் இந்த திமுக அரசு காப்பாற்றுவது போல் வேறு எந்த அரசும் காப்பாற்றுவது இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தை கொண்டாடுவதே அம்பேத்கரை கொண்டாடுவதற்கு சமமானதாக இருக்கும்." என்றார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!