Tamilnadu
HMPV மீதான கவன ஈர்ப்பு தீர்மானம் : “இது வீரியம் மிக்க வைரஸ் அல்ல” - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!
தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் கடந்த ஜன.06-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் இன்று நடைபெற்ற கூட்டத்தொடரில், தற்போது உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் HMPV என்கின்ற வைரஸ் தொற்று தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலுரை அளித்தார்.
அது பின்வருமாறு :
HMPV என்கின்ற Human Meta pneumovirus சீனாவில் வேகமாக பரவி வருகின்றது என்று சொல்லப்பட்டாலும் இது 50 ஆண்டுகளுக்கு முன்னாள் கண்டறியப்பட்ட வைரஸ் ஆகும். குறிப்பாக 2001 ஆம் ஆண்டிலேயே இந்த வைரஸ் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இந்த வைரஸ் பொறுத்தவரை குளிர்காலம் மற்றும் இளவேனில் காலங்களில் பரவக்கூடும் என்பது ஏற்கெனவே அறியப்பட்டிருக்கிறது.
இந்த நோய்க்கான அறிகுறிகள் சளி, காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்புகள் என்பதும், நமது மன்ற உறுப்பினர்கள் சொல்லியிருப்பதுபோல் அனைத்து ஊடகங்களிலும் இந்த செய்தி பரவி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு குணமாக 3 முதல் 6 நாட்கள் வரை ஆகும். இந்த வைரஸ் இணை நோயினால் உள்ளானவர்கள் பாதிக்கப்பட்டால் ஓரளவு தீவிரத்தன்மை அடைந்து நுரையீரல் பாதிக்கப்படும் அளவிற்கு பாதிப்பு ஏற்படுத்துமே தவிர பெரிய அளவில் இதனால் பதற்றப்பட வேண்டிய அவசியம் இல்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை கடந்த 2024ஆம் ஆண்டில் 714 பேருக்கு பரிசோதனை செய்ததில் பலருக்கு இந்த நோய் பாதிப்பு இருந்தது கடந்த ஆண்டிலேயே கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் சேலத்தில் ஒருவருக்கும், சென்னையில் ஒருவருக்கும் இந்த நோய் பாதிப்புகள் கண்டறியப்பட்டு அவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார்கள். அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். சுவாசநோய் தொற்றுகள் தானாகவே குணமடையும் என்கின்ற வகையில்தான் மருத்துவ வல்லுநர்கள் இதற்காக சிறப்பு சிகிச்சைகள் தேவை இல்லை என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த வைரஸ்க்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் Anti Viral Drugs மற்றும் இதற்கான தடுப்பூசிகள் இதுவரை அறிவிக்கப்படவில்லை. உலக சுகாதார அமைப்பைப் பொறுத்தவரை 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் தொடங்கிய காலக்கட்டத்தில் பல்வேறு வகைகளில் உருமாற்றம் பெற்று பீட்டா, டெல்டா பிளஸ், கம்மா, கப்பா, ஒமைக்ரான் என்று பல்வேறு விதமான உருமாற்றம் அடைந்து கோவிட் வைரஸ் வீரியம் பெற்றது. அனைத்து வைரஸ்களும் வீரியத்தன்மையுடன் கூடிய வைரஸ்களாகவே இருந்து வருகிறது.
WHO வின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்கள் இனி வரும் காலங்களில் உலகம் முழுவதும் வைரஸ் தொற்றுகளுடன் வாழ வேண்டும் என்கின்ற கருத்தினை சொல்லியிருந்தார்கள். அது நான் கூறிய கருத்தல்ல. HMPV வைரஸ் என்பது வீரியம் மிக்க வைரஸ் அல்ல. இதற்கென பிரத்யேக மருந்துகளும் இல்லை, பிரத்யேக சிகிச்சைகளும் இல்லை. இதற்கென அறிவுறுத்தல்கள் 3 முதல் 6 நாட்களிலேயே குணமாகி விடும். இதற்காக அனைத்து இடங்களிலும் சென்று பரிசோதனைகள் செய்து கொள்ளும் அவசியம் இல்லை. இதனால் நாம் பெரிய அளவில் பயப்பட தேவையில்லை. இதற்காக தனியாக பிரத்யேக படுக்கை வசதிகளும் தேவையில்லை.
2019 ஆம் ஆண்டு கோவிட் பெருந்தொற்று வந்தபோது WHO உலக சுகாதார நிறுவனம் ஒரு மருத்துவ அவசரநிலை பிரகடனம் செய்தார்கள். 2023 மே மாதம் அதனை விலக்கி கொண்டார்கள். அதன்பிறகு குரங்கம்மை தொற்று (Monkey Pox) வந்தபோது அவசரநிலை பிரகடனம் செய்தார்கள். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பன்னாட்டு விமான நிலையங்களிலும் குறிப்பாக சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற விமான நிலையங்களில் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு பரிசோதனைகள் உலக சுகாதார அமைப்பு மற்றும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவுறுத்தல்கள் பெற்று மேற்கொள்ளப்பட்டது.
தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை எந்தவிதமான மருத்துவ நெருக்கடிகள் ஏற்பட்டாலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கவனித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ய அறிவுறுத்தி வருகிறார்கள். ஆகையால் HMPV தொற்று குறித்து பெரிய அளவில் அச்சப்பட தேவையில்லை.
நேற்று முன்தினம் ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை செயலாளர் அவர்கள் தலைமையில் காணொளிக் கூட்டம் அனைத்து மாநிலங்களிலும் சேர்ந்த சுகாதாரத்துறை செயலாளர்களோடு நடத்தப்பட்டதில் அவரும் இதே கருத்தைச் சொல்லியிருக்கிறார். அவரும் இந்த வைரஸ் குறித்து கவலைப்பட தேவையில்லை. மக்களுக்கு எந்தவிதமான அறிவுறுத்தல்களும் அறிவிக்க வேண்டாம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இருந்தாலும் பொது சுகாதாரத்துறையின் நடவடிக்கை என்பது சளி, இருமல், காய்ச்சல் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது முக கவசம் அணிந்து செல்வது வழக்கம், கைகளை சுத்தம் செய்து கொள்வது போன்ற அறிவுறுத்தல்கள் சொல்லப்பட்டிருக்கிறது. இதுவே போதும் என்று நினைக்கிறேன். இதுகுறித்து பதற்றப்பட வேண்டாம் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து உரையாற்றினார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!