Tamilnadu

தாமதமாகும் விமானங்கள்... தகவல் அளிக்காததால் சிரமத்தில் பயணிகள்... சென்னை விமான நிலையத்தில் அவலம் !

டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில தினங்களாக கடுமையான குளிர், பனிமூட்டம் காரணமாக, வட மாநிலங்களில் இருந்து வரும் விமானங்கள் தாமதமாக சென்னைக்கு வந்து சேர்கின்றன. அதுமட்டுமின்றி சென்னையில் இருந்து புறப்படும் விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக கிளம்புகின்றன.

இன்று சென்னையில் இருந்து கொல்கத்தா செல்ல வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் சுமார் 5 மணி நேரமும், புனே செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சுமார் 3 மணி நேரமும், அதேபோல் பல்வேறு இடங்களுக்கு செல்ல வேண்டிய சுமார் 20 -க்கும் மேற்பட்ட விமானங்கள் ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

இதனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக சென்னையில் இருந்து விமானங்களில் புறப்பட்டு, விமான நிலையத்திலிருந்து மாற்று விமானங்களில், டிரான்சிட் பயணிகளாக செல்லக்கூடிய ஏராளமான பயணிகள், இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னையில் இருந்து டெல்லி செல்ல வேண்டிய விமானம் தாமதமாக சொல்வதால், டெல்லி விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு டிரான்சட் பயணிகளாக செல்வதற்காக, டிக்கெட்டுகள் முன்பதிவு செய்த பயணிகள், அங்கு தங்களுடைய விமானங்களை பிடிக்க முடியாததால், அவதிக்குள்ளாகி வருகின்றனர். அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட்டு,2 அல்லது 3 விமானங்கள் மாறி, வெளிநாடுகளுக்கு செல்வதற்கு டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து பயணிக்கும் டிரான்சிட் பயணிகள் சிலர், குறிப்பிட்ட விமானங்களை பிடிக்க முடியாமல், வெளிநாடுகளில் ஒன்றிரண்டு நாட்கள் தங்கி, தவிக்கும் நிலையும் ஏற்படுகிறது.

இதைப்போல் விமானங்கள் தாமதங்கள் குறித்து பயணிக்க இருக்கும் பயணிகளுக்கு, முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும் என்பது, விமான போக்குவரத்து சட்ட விதிகளில் உள்ளது. ஆனால் சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு விமானங்கள் தாமதம் குறித்து தகவல் தெரிவிப்பது கிடையாது. எனவே முன்பதிவு செய்த பயணிகள், முன்னதாகவே சென்னை விமான நிலையத்திற்கு வந்து, காத்திருக்கின்றனர். அதுவும் சென்னை விமான நிலையத்தில், விமானங்கள் புறப்பாடு வருகை குறித்து அறிவிக்கும் டிஸ்ப்ளே போர்டில், விமானம் குறித்த நேரம் என்று போடப்பட்டிருக்கிறது. ஆனால் விமான கவுண்டரில் கேட்டால், அந்த விமானம் தாமதம் என்று கூறுகின்றனர். இதைப்போல் முரண்பட்ட தகவல்களால், பயணிகள் அலக்கலிக்கப்படும் அவல நிலை, சென்னை விமான நிலையத்தில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

இதனால் விமான நிறுவனங்கள் விமானங்கள் தாமதங்கள் குறித்து விமான போக்குவரத்து சட்ட விதிகளின்படி, டிக்கெட் முன்பதிவு செய்து இருந்த பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்க வேண்டும். அதோடு சென்னை விமான நிலையத்தில் விமானங்கள் வருகை புறப்பாடு அறிவிப்பு டிஸ்பிளே போர்டுகளில், தவறான அறிவிப்புகளை செய்து, பயணிகளை அலக்கலிக்காமல், விமானங்கள் தாமதங்கள் அல்லது ரத்து குறித்து, முறையாக முன்னதாகவே அறிவிக்க வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் : திமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவு - CPIM மாநில செயலாளர் அறிவிப்பு !