Tamilnadu

கடும் பனிப்பொழிவில் கலந்த காற்று மாசு... சென்னை மக்களுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை!

சென்னையில் தற்போது பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 24-ம் தேதி காற்றின் தரக்குறியீடு 39-ஆகவும் காற்றின் தரம் நல்ல நிலையில் இருந்தது. மேலும் காற்றில் கார்பன் டையாக்சைடு மற்றும் PM 10 நுண் துகள்கள் மட்டும் கண்டறியப்பட்டிருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல் வெளியிட்டு இருந்தது.

இதனிடையே தலைநகர் சென்னையில் கடந்த 10 நாட்களாக நிலவும் கடும் பனிப்பொழிவுடன் காற்று மாசும் தொடர்ந்து கலந்து வருகிறது. இதன் காரணமாக காற்றின் தரக்குறியீடு மோசம் அடைந்து வருகிறது. சென்னையில் நேற்றைய தினம் காற்றின் தர குறியீடு 114 ஆக பதிவாகியுள்ள நிலையில், மிதமான பாதிப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காற்றின் PM 2.5 நுண் துகள்கள் பெருமளவியில் இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.

தற்போது தலைநகர் சென்னையில் அதிகபட்சமாக மணலியில் காற்றின் தரக் குறியீடு 197 ஆகவும், அரும்பாக்கத்தில் 158 ஆகவும், பெருங்குடியில் 157 ஆகவும், வேளச்சேரியில் 144 ஆகவும் காற்றின் தரக்குறியீடு 100 கடந்து மோசம் அடைந்துள்ளது. ஆலந்தூர் பகுதியில் மட்டும் காற்றின் தரம் 55 ஆக பதிவாகியுள்ளது .

காற்றின் தரம் 100 முதல் 200 க்குள் இருக்கும்போது சிலருக்கு சுவாசிப்பதில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள், ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதய நோயாளிகள் உள்ளிட்டோர் இதனால் பாதிப்படைய வாய்ப்பு இருப்பதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Also Read: பல்கலைக்கழகங்களில் SC, ST மாணவர்கள் மீது சாதி பாகுபாடு : UGC-யிடம் அறிக்கை கேட்ட உச்சநீதிமன்றம் !