Tamilnadu

“கலைஞர் 25 ஆண்டுகாலம் பிரசவித்து பெற்ற பெரும் தவம் அய்யன் சிலை!” : குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்!

முக்கடல் சூழும் குமரி முனையில் அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழாவினை முன்னிட்டு, இரண்டாவது நாளாக அரசு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்நாளில் (டிசம்பர் 31), திருக்குறள் ஓலைச்சுவடிகள், புத்தகங்கள், மின்நூல்கள் மற்றும் திருவள்ளுவர் சிலை பற்றிய புகைப்படக் கண்காட்சியை திறந்து வைத்து, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச் சிலை வெள்ளி விழா சிறப்பு மலரை வெளியிட்டு, அய்யன் திருவள்ளுவர் திருவுருவச்சிலை வெள்ளி விழா வளைவிற்கு அடிக்கல் நாட்டி, திருக்குறள் சார்ந்த போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசுத் தொகை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

இந்நிகழ்வில் பேசிய குன்றக்குடி அடிகளார், “‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற உலகமெங்கும் வாழுகின்ற மானுடத்தின் மனித உரிமை பிரகடனத்தை, முதன் முதலில் தந்தவர் தமிழ் மாமுனிவர் திருவள்ளுவர் தான்!

அவருக்கு சிறப்பு செய்யும் வகையில், 1975-இல் முத்தமிழறிஞர் கலைஞர் என்ற தாய், திருவள்ளுவர் சிலைக்காக கருவுற்று, 25 ஆண்டுகாலம் பிரசவித்து பெற்ற தவம் தான், ஆழிப்பேரலை சூழ நடுவே இருக்கிற அய்யன் திருவள்ளுவர் சிலை.

சுனாமி, கொரோனா, வெள்ளம் என எத்தனை துன்பங்கள் வந்தாலும், அத்துன்பத்தை யார் இன்பமாக மாற்றி காட்டுகிறார்களோ, அவர்கள் தான் ‘அறிவின் அடையாளம்’ என்று திருவள்ளுவர் சொல்கிறார். அப்படியென்றால், அந்த அடையாளத்திற்கு முழுமையும் உரியவர் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

போரற்ற உலகம் வேண்டும் என்று ஆசைப்பட்டார் திருவள்ளுவர். போரற்ற உலகிற்காக வாழ்நாள் முழுவதும் அவர் வழிகாட்டினார். அந்த நிலையில், தற்போது ரஷ்யாவிற்கும், உக்ரைனிற்கும் போர் நடைபெற்று கொண்டிருக்கிறது. அதின் நடுவே ஒரு குழந்தை தடுமாறிக்கொண்டு வருகிறது. அந்த குழந்தையிடம் “Are you christian or Muslim,” “Are you Russian or Ukranian” என்று கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால், அந்த குழந்தை அக்கேள்விகளுக்கு பதிலளிக்காமல், சிறிது நேரம் கழித்து “I am hungry” (பசிக்கிறது) என சொன்னது. அது போன்ற பசியுள்ள குழந்தைகள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கொண்டு வந்த திட்டம் தான் ‘முதலமைச்சர் காலை சிற்றுண்டி திட்டம்.’

இரவு, பகலாக இமைப்பொழுதும் துஞ்சாது, எந்த பேரிடர் தமிழ்நாட்டை தாக்கினாலும், தமிழ்நாட்டு மக்களை ‘கண்ணை இமை காப்பது’ போல் காத்து வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்” என்றார்.

Also Read: ”ஈராயிரம் ஆண்டுகளாக திருத்தப்படாத ஒரே நூல் திருக்குறள்” : கவிப்பேரரசு வைரமுத்து பெருமிதம்!