Tamilnadu

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு : தமிழ்நாட்டுக்கு ரூ. 944.80 கோடியை ஒதுக்கீடு செய்து ஒன்றிய அரசு உத்தரவு !

தமிழ்நாட்டில் கடந்த நவ.30 முதல் வீசத் தொடங்கிய ஃபெஞ்சல் புயலின் காரணமாக தமிழ்நாட்டின் வடமாவட்டங்களில் கடுமையான மழைப்பொழிவு ஏற்பட்டது. குறிப்பாக, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இதன் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழையின் அளவு வழக்கத்தைவிட மிக அதிகமாக இருந்தது.

இதுவரை இல்லாத அளவுக்கு வட மாவட்டங்களில் கடும் மழை ஏற்பட்டு வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசு மேற்கொண்டதால் பெருமளவு சேதத்தில் இருந்து மாவட்டங்கள் தப்பித்தது. எனினும் வடமாவட்டங்களில் பெரும்பகுதி விளைநிலங்களை வெள்ளத்தில் மூழ்கடித்துள்ளது.

மேலும் பெரும்பாலான பகுதிகளில் சாலைகள், பாலங்கள், மின் கம்பங்கள், மின்மாற்றிகள், பொதுக் கட்டடங்கள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகளும் மற்றும் பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் இந்த புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு தமிழாண்டு அரசு சார்பில் இழப்பீடும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு இந்த புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ.2000 கோடி ஒதுக்கீடு செய்யவேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில், ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்காக தமிழ்நாடு அரசுக்கு ரூ. ரூ.944.80 கோடியை ஒன்றிய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து (SDRF) ஒன்றிய அரசின் பங்காக 944.80 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க ஒன்றிய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசின் தொடர் முயற்சி காரணமாக ஒன்றிய அரசு ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு நிவாரணம் அளித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.

Also Read: ”தமிழ்நாட்டிற்கு ரூ.2000 கோடி உடனே வழங்க வேண்டும்” : மாநிலங்களவையில் திருச்சி சிவா MP வலியுறுத்தல்!