Tamilnadu

ஃபெஞ்சல் புயல், கனமழை : பொதுமக்கள் சேவைக்காக வழக்கம்போல இயங்கும் மாநகர அரசுப் பேருந்துகள் !

ஃபெஞ்சல் புயல் காரணமாக இரவு முழுவதும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் இரவு முழுவதும் கனமழை பெய்து வருகிறது. புயல் காரணமாக தரைக்காற்று மணிக்கு 70 கிலோமீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வரை வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் கல்லூரி மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அலுவலகம் சென்று பணிபுரியக்கூடிய பொதுமக்கள் இன்று தங்கள் இல்லத்திலேயே பணிபுரிய வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

எனினும் அலுவலகம் மற்றும் இதர இடங்களுக்கு செல்லக்கூடிய பொது மக்களின் வசதி கருதி சென்னை மாநகரப் போக்குவரத்து கழகம் சார்பில் வழக்கம்போல் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று அதிகாலை முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாக இயக்கப்படும் பேருந்துகள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது.

மேலும் பிற்பகல் புயல் கரையை கடக்கும் போது அதிகனமழையுடன் 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், கிழக்கு கடற்கரைச் சாலை மற்றும் ஓ.எம்.ஆர். சாலையில் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படும் என சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: இராஜாஜிக்கு பிறகு மீண்டும் குலத்தொழில் திட்டத்தை கொண்டுவரும் பாஜக - முரசொலி விமர்சனம் !