Tamilnadu

சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு நேர்ந்த சோகம் : கொட்டும் மழையில் இறக்கிவிடப்பட்ட பயணிகள் !

நேற்று இரவு கோவையிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் வந்துள்ளது. இந்த விமானத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ள நிலையில், விமான நிலையம் பகுதியில் கனமழை பெய்து கொண்டிருந்துள்ளது.

இரவு 11.45 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து சேர வேண்டிய விமானம், 9 நிமிடங்கள் முன்னதாக 11.36 மணிக்கு, சென்னை உள்நாட்டு விமான நிலையம் வந்து தரை இறங்கியது. இந்த விமானத்துக்கு ஏரோபிரிஜ் ப்குதியில் பயணிகள் இறங்க இடம் ஒதுக்கீடு செய்யாமல், ஓபன் பே எனப்படும், திறந்த வெளி பகுதியில் விமானம் நிறுத்தப்பட்டு, பயணிகள் விமானத்தில் இருந்து கீழே இறக்கிவிடப்பட்டனர்.

அதிலும், லேடர் எனப்படும் சாதாரண படிக்கட்டு விமானத்தோடு இணைக்கப்பட்டு, பயணிகள் பாதுகாப்பு இல்லாமல், மழையில் நனைந்து கொண்டே கீழே இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.இதைப் போன்ற மழைக்காலங்களில் வழக்கமாக பயணிகளை ஏரோபிரிஜ் வழியாக விமானத்திலிருந்து கீழே இறக்க ஏற்பாடுகள் செய்வார்கள். இல்லையேல் மேல் கூறையுடன் கூடிய லேடர் படிக்கட்டுகளை, விமானத்துடன் இணைத்து பயணிகளை இறங்கச் செய்வார்கள்.

ஆனால் கொட்டும் மழையில் சாதாரண படிக்கட்டில் பயணிகள் இறக்கிவிடப்பட்டதால், வயதான பயணிகள் மிகவும் சிரமப்பட்டு கீழே இறங்கினார்கள். மழையில் நனைந்து கொண்டு, விமானத்திலிருந்து கீழே இறங்கும்போது, படிக்கட்டில் கால்கள் சறுக்கி விடுமோ? என்ற அச்சம் பயணிகளுக்கு ஏற்பட்டது.

இது குறித்து பாதிக்கப்பட்ட பயணிகள் சிலர், சென்னை விமான நிலையத்தில், அதிகாரிகளிடம் புகார் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு சில பயணிகள் இணையதளம் மூலம், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் மற்றும் டெல்லியில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, விமானங்களில் இருந்து பயணிகள் இறங்குவதற்கு லேடர்கள் பொருத்துவது, அந்தந்த விமான நிறுவனங்களின் பணியாகும். இதைப்போல் மழை பெய்து கொண்டு இருக்கும் போது, சாதாரண லேட்டர் பொறுத்தி பயணிகளை மழையில் நனைய விட்ட சம்பவம் குறித்து, விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு இனிமேல் இதைப்போல் நடக்காமல் இருக்க விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: இந்தியாவை ஒற்றைச் சர்வாதிகார, எதேச்சதிகார நாடாக மாற்றத் துடிப்பவர்கள்தான் பாஜகவினர் - முரசொலி விமர்சனம் !