Tamilnadu
தி.மு.க முன்னாள் அமைச்சர் க. சுந்தரம் மறைவு : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகழஞ்சலி!
தி.மு.க முன்னாள் அமைச்சரும், கட்சியின் ஆதிதிராவிட நலக் குழுவின் தலைவருமான க.சுந்தரம் உடல்நலக் குறைவு காரணமாக இன்று பிற்பகல் காலமானார். சென்னை மீஞ்சூரில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்த 76 வயதான க.சுந்தரம் உயிரிழந்தது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வின் பட்டியலினத் தலைவர்களில் முக்கியமானவரான க.சுந்தரம், இரண்டு முறை திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.
1989 தி.மு.க ஆட்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராகவும், 1996 - 2001 தி.மு.க ஆட்சியில் பால்வளத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். மேலும், தி.மு.க.வில் முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளில் ஒன்றான துணை பொதுச் செயலாளராகவும் அவர் இருந்துள்ளார்.
2022ஆம் ஆண்டு தி.மு.க அணிகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்ட நிலையில், க.சுந்தரத்திற்கு ஆதிதிராவிட நலக் குழு தலைவர் பதவி வழங்கப்பட்டது. கட்சியில் கடுமையாக உழைத்த சுந்தரத்தை பாராட்டும் வகையில் கடந்த ஆண்டு நடந்த தி.மு.க முப்பெரும் விழாவில் பேரறிஞர் அண்ணா விருதினை அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கி கவுரவித்தார்.
இது குறித்து இரங்கல் செய்தி வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “முத்தமிழறிஞர் கலைஞர் அமைச்சரவையில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சராகவும், பால்வளத்துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றியவர், தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் க. சுந்தரம். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“என்னை நீங்கள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் சந்திக்கலாம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
50 ஆரம்ப சுகாதார நிலையங்களில் டயாலிசிஸ் சிகிச்சை வசதி அமைக்கப்படும் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
ஜிம்னாஸ்டிக்ஸ் உள்ளிட்ட 20 விளையாட்டுகளுக்கு பயிற்சியாளர்கள் : பணி நியமன ஆணைகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
“வேளாண்மையில் ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“முதலீடுகள் வேலைவாய்ப்புகளாக மாறுவது தமிழ்நாட்டில்தான்” : பேரவையில் பெருமையுடன் சொன்ன அமைச்சர் TRB ராஜா!