Tamilnadu
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் யாரால்? : சர்ச்சை கருத்துகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த முரசொலி!
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் யாரால்? - 1
அத்திக்கடவு - அவிநாசி திட்டத்துக்கும் அண்ணாமலைக்கும் என்ன சம்பந்தம்? காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதை என்பார்கள்!
அப்படிக்கூட அல்ல, பனம்பழம் விழப்போவது தெரிந்து உட்கார்ந்து, பனம் பழத்தோடு சேர்ந்து விழுந்த கதை அவருடையது!
அண்ணாமலை போராட்டம் அறிவித்தாராம். அதனால்தான், அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் தொடங்கினார்களாம். அத்திக்கடவு - அவிநாசி திட்டம் என்பது சாலைகளில் நிழற்குடை அமைப்பதைப் போல ஒரு நாள் இரவில் செய்துவிடும் திட்டமல்ல. இவர் போராட்டம் அறிவித்ததும் திறந்து விடுவதற்கு.
அண்ணாமலை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருக்கிறார் போலும்! ஆகஸ்ட் 17 அன்று அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள். தொடங்கி வைத்துவிட்டதால் தனது போராட்டம் ரத்து என்று அறிவித்துள்ளார் அண்ணாமலை.
"22.7.2024 ஆம் தேதி அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் அவர்களைச் சந்தித்தபோது, 'அத்திக்கடவு -- அவிநாசி திட்டம் முடிவுற்று விட்டது. உபரி நீர் வரத் தொடங்கியதும் திறந்துவிடலாம். அநேகமாக ஆகஸ்ட் 15 க்குப் பிறகு தொடக்கி வைத்துவிடலாம்' என்று சொன்னார்கள். திட்டத்தை தொடங்கப் போகிறார்கள் என்பதை தெரிந்து வைத்துக் கொண்டு போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை" என்று உடைத்துவிட்டார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
ஒரு மாதத்துக்கு முன் தேதி திட்டமிடப்பட்டு விழா ஏற்பாடுகள் நடந்து வருவதை தெரிந்து கொண்டு போராட்டம் அறிவித்தார் அண்ணாமலை. இவர் இப்படி என்றால், பழனிசாமி என்ன சொல்கிறார் என்றால், 'இரண்டரை ஆண்டு காலம் தாமதமாக இத்திட்டத்தை திறந்துள்ளார்கள்' என்கிறார். இந்த தாமதம் எதனால் வந்தது? பழனிசாமி, இதற்கான நிதியை மொத்தமாக ஒதுக்கினாரா? என்றால் இல்லை!
90 விழுக்காடு பணிகளை அ.தி.மு.க. ஆட்சியில் முடித்து விட்டதாக பழனிசாமி பொய் சொல்லி இருக்கிறார். தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 67 விழுக்காடு பணிகள்தான் முடிவுற்றுள்ளது என்று இத்திட்டப் பொறியாளர் சிவலிங்கம் பேட்டி தந்துள்ளார். (2021 பிப்ரவரி 3) 50 விழுக்காடு பணிகள் முடிவுற்றதாக டிசம்பர் 2020 அன்று அறிவித்துள்ளார்கள். பச்சைப் பொய் பழனிசாமியின் குணம் தோற்ற பிறகும் மாறவில்லை.
திட்டத்துக்குத் தேவையான நிதியை முழுமையாக ஒதுக்கியும், நிலம் கையகப்படுத்துவதில் இருந்த பிரச்சினையை தீர்த்தும் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றிக் காட்டியதுதான் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சாதனை ஆகும்.
கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டத்து மக்களின் பல்லாண்டு கனவுத் திட்டம் இது. ஈரோடு,கோவை திருப்பூர் மாவட்டத்தில் வறட்சி மிகுந்த பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளில் தண்ணீர் நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டமாக இது அமைந்துள்ளது.
மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப் பெருக்கின் போது ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்குக் கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு - அவினாசி திட்டம் உருவாக்கப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்த போது 1957-ம் ஆண்டு முதன் முதலில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். ஆனால் தலைவர் கலைஞர், முதலமைச்சராக வந்த பிறகுதான் அதற்கு கொள்கை வடிவம் கொடுத்தார்.
1972ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்களால் கொள்கை ரீதியாக ஏற்கப்பட்ட திட்டம்தான் அத்திக்கடவு - அவிநாசி திட்டம். அதற்கு முன்பு எல்லாம் இதற்கு 'பவானி திட்டம்' என்றுதான் பெயர். அதனை அத்திக்கடவு - அவிநாசி திட்டமாக பெயர் சூட்டியவரே கலைஞர்தான். அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி அதற்கு எதுவும் செய்யவில்லை.
1990ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதனை செயல்படுத்தும் முயற்சி எடுத்தபோது, ஆட்சி கலைக்கப்பட்டது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சியும் அத்திக்கடவு - அவிநாசித் திட்டத்திற்காக எதுவுமே செய்யவில்லை.
1996ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த தலைவர் கலைஞர் அவர்கள் இத்திட்டத்தின் முதல்கட்டமாக கோவைக்குக் குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினார்கள். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு அடுத்தகட்ட பணிகளைச் செய்யவில்லை.
2006ஆம் ஆண்டு அத்திக்கடவு பேஸ் 2 திட்டத்தை முதலமைச்சர் கலைஞர் அவர்கள் செயல்படுத்தினார். சரவணம்பட்டி அருகில் பிரதான சென்ட்ரல் வாட்டர் டேங்க் கட்டப்பட்டது. கோவை முழுவதும் குழாய்கள் பதிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் ஒப்புதலுக்கு கடிதம் அனுப்பப்பட்டது. உலக வங்கி, நபார்டு வங்கி,
ஜப்பான் வங்கி ஆகியவை கடன் தர முன்வந்தன. ஆட்சி மாறியது. அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி எதுவும் செய்யவில்லை. அத்திக்கடவு குடிநீர் வழங்கலையே முடக்கி விட்டார்கள்.
2012ஆம் ஆண்டு ஒன்றிய அரசிடம் இருந்து கடிதம் வந்தது. ஆனாலும் அ.தி.மு.க. அரசு எந்த முயற்சியும் செய்யவில்லை. திட்டத்திற்கான நிலத்தை கையகப்படுத்த எந்த முயற்சியும் செய்யவில்லை.
தொடரும்...
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!