Tamilnadu

“அடிப்படை அறிவு கூட இல்லையா?” - கோவை வெப்பம் குறித்து அண்ணாமலை பேச்சுக்கு பூவுலகு சுந்தரராஜன் பதிலடி !

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் பாஜக தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு அங்கே தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த சூழலில் நேற்று செய்தியாளரை சந்தித்த அண்ணாமலை, "கோவையில் வெப்பம் அதிகரிப்பு காரணம் திராவிட அரசுகள்தான்" என்று கூறினார்.

இவரது பேச்சு வழக்கம்போல் நெட்டிசன்கள் மத்தியில் ஒரு கண்டெண்டாக மாறியுள்ள நிலையில், பலரும் இவரது பேச்சுக்கு பல வித கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், தனது சமூக வலைதள பக்கத்தில் அண்ணாமலைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவு பின்வருமாறு :

“ ‘கோவையின் வெப்பத்தை 1.5-2 டிகிரி அதிகரித்ததுதான் திராவிட கட்சிகளின் சேவை’ என்று கூறியிருக்கிறார் பாஜக தலைவர் அண்ணாமலை

முதல் கேள்வி, ஒரு கட்சியால் ஒரு நகரத்தின் வெப்பத்தை 2 டிகிரி அதிகரிக்க முடியுமா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லையா உங்களுக்கு? உங்களுக்கு கொஞ்சமாவது அறிவியல் அறிவு இருந்தால், காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் (IPCC) அறிக்கையை படித்துப்பாருங்கள், உலக சராசரி வெப்பநிலை 1.45 டிகிரி அதிகரித்துவிட்டதாக அறிவித்துவிட்டது.

அதுசரி, உங்களுக்கு எப்படி தெரியும், உங்க தலைவர்தான், “We have only changed, climate has not changed” என்று சொன்னவராச்சே. உங்களுக்கு எப்படி காலநிலை மாற்றம் பற்றியெல்லாம் தெரியும்? ஆத்மநிர்பர் பாரத் என்கிற பெயரில், மத்திய இந்தியாவில் உள்ள 1.75 லட்சம் ஹெக்டர் காடுகளை பெரு நிறுவனங்களுக்கு தாரைவார்தவர்களுக்கு வெப்ப உயர்வை பற்றியெல்லாம் கவலை எதற்கு ?” என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த சில நாட்களாக இந்தியா மட்டுமின்றி தமிழ்நாடு என பல இடங்களில் வெப்பம் அதிகரித்தே காணப்படுகிறது. காலநிலை மாற்றத்தால் பல்வேறு இடங்களில் 100 டிகிரி வரை வெப்பம் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில் வெப்பம் அதிகரிப்பு திமுக காரணம் என்று அண்ணாமலை பேசியுள்ளது அடிப்படை அறிவு இல்லாத பேச்சு என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read: அதிமுக MLA வெற்றிக்கு எதிரான வழக்கு : மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த நீதிமன்றம் உத்தரவு !