Tamilnadu
அரவிந்த் கெஜ்ரிவால் கைது : பாசிச பாஜக அரசின் காட்டுமிராண்டி தாக்குதல் - CPI முத்தரசன் விமர்சனம் !
டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இதனிடையே நேற்று இரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "டெல்லி மாநில அரசின் முதலமைச்சர் அரவிந்த கெஜ்ரிவால் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது அமலாக்கத் துறை பலாத்கார நடவடிக்கை எடுக்க தடைவிதிக்க வேண்டும் என்ற முறையீட்டை டெல்லி உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ள நிலையில் அமலாக்கத்துறை ஒரு மாநில முதலமைச்சரை, எதிர்கட்சி கூட்டணியின் முக்கியத் தலைவரை கைது செய்திருப்பது ஏதேச்சதிகாரத்தின் எல்லை தாண்டி பாசிச காட்டுமிராண்டி வெறித்தன தாக்குதலின் வெளிப்பாடாகும்.
விருப்பு, வெறுப்புகள் இல்லாமல், நியாயமாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டிய தேர்தல் நடைமுறைக்கு பெரும் குந்தகம் ஏற்படுத்தும் அப்பட்டமான அச்சுறுத்தலாகும். பொதுமக்களிடம பீதி ஏற்படுத்தி தேர்தல் ஆதாயம் தேடும் மிக மலிவான செயலாகும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பழம் பெரும் அரசியல் கட்சியும், விடுதலைப் போராட்டத்தில் முன்னணி வகித்த பெருமை கொண்ட காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. டெல்லி மாநில அரசின் துணை முதலமைச்சர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைத்த பிறகும், தமிழ்நாட்டில் சட்டமன்ற உறுப்பினர் திரு.க.பொன்முடி அமைச்சராக பதவி பிரமாணம் செய்து வைக்க மாட்டேன் என ஆளுநர் அதிகார வெறியோடு ஆட்டம் போடுகிறார்.
கடந்த பத்தாண்டு கால வரலாற்றில் முதன் முறையாக எதிர்கட்சிகள் ஒன்றுபட்டு, “இண்டியா“ கூட்டணி உருவாக்கியுள்ளன. இந்த வலிமை வாய்ந்த கூட்டணியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாத, படுதோல்வி அடையும் என்பது உறுதியாகி வருவதை கண்டு ஆத்திரமடைந்த பாஜக எதிர் கட்சிகளை மிரட்டி. ஒடுக்கி, கூட்டணியை சிதறடிக்கும் வன்முறைக்கு அரசியலமைப்பு அதிகாரம் பெற்ற தற்சார்பு அமைப்புகளை ஆளும் கட்சியின் ஆயுதங்களாக கையில் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த பாசிச வகைப்பட்ட தாக்குதலை நாட்டு மக்கள் பேரெழுச்சி கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தற்போதுள்ள நிலையில் குடியரசுத் தலைவரும் மற்றும் உச்சநீதிமன்றமும் ஒன்றிய அரசின் அதிகார அத்துமீறல் நடவடிக்கைகளை சட்டரீதியாக தடுக்க முடியும் என்பதால் உடனடியாக குடியரசுத் தலைவரும், உச்ச நீதிமன்றமும் அமலாக்கத் துறையின் நடவடிக்கையில் தலையிட்டு தடுக்க வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் களத்தில் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் சம வாய்ப்பு கிடைப்பதையும், நியாயமான, சுதந்திரமான தேர்தல் நடைமுறைகள் அமைவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும், உடனடியாக அரவிந்த் கெஜ்ரிவால் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்பட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது" என்று கூறியுள்ளார்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!