Tamilnadu
எழுத்தாளர் பாமாவுக்கு ஔவையார் விருது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
பெண்களுக்காக கல்வி, மருத்துவம், மகளிர் முன்னேற்றம், மகளிர் உரிமை, மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், தமிழுக்கான சேவை, கலை, இலக்கியம், அறிவியல், பத்திரிகை மற்றும் நிருவாகம் ஆகிய பல்வேறு துறைகளில் முன்மாதிரியாக தொண்டாற்றிய பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மகளிர் தினத்தன்று சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 2012 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசால் “ஔவையார் விருது” வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருது பெறுவோருக்கு 1 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.
அவ்வகையில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசின் 2024-ஆம் ஆண்டிற்கான ஔவையார் விருதினை இலக்கியத்தின் மூலமாக தலித் மக்களின் குரலாக ஒலித்து, சமூக தொண்டாற்றி வரும், முன்னணி எழுத்தாளரான விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா அவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம் அதன் தகிக்கும் அனலோடு தமிழிலக்கிய படைப்புகளாகவும், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் தொகுப்புகளாகவும் எழுதியுள்ளார். இவரது நூல்களான கருக்கு, சங்கதி, வன்மம், மனுசி போன்ற நாவல்களும், கிசும்புக்காரன், கொண்டாட்டம், ஒரு தாத்தாவும் எருமையும் போன்ற சிறுகதை தொகுப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவர் எழுதிய “கருக்கு” என்ற புதினம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு, 2000-ஆம் ஆண்டின் 'கிராஸ் வேர்ட்புக்' விருதை பெற்றுள்ளது.
இதையடுத்து எழுத்தாளர் பாமாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள x சமூகவலைதள பதிவில் "சாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன்வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜ் அவர்கள் தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருதைப் பெறுகிறார்.
மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு எனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
’ஓரணியில் தமிழ்நாடு’ : மண், மொழி, மானம் காக்க களத்தில் இறங்கிய தி.மு.க!
-
நீர்நிலைகளை அறிய இணையதள சேவை.. தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! - விவரம் என்ன?
-
சென்னை, தரமணியில் தமிழ் அறிவு வளாகம் : அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.52 கோடி செலவில் 208 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் - திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அஜித் குமார் மரணம் விவகாரம்: “Sorry மா.. ஒரு 'அப்பாவாக.. ஒரே Phone Call!” - அமைச்சர் TRB ராஜா நெகிழ்ச்சி!