Tamilnadu

போதைப் பொருள் விவகாரம் : “இதற்கு பெயர்தான் மோடி ஃபார்முலாவா?” - அமைச்சர் ரகுபதி கண்டனம் !

புதுக்கோட்டை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று (05-03-2024) நாகர்கோவில் மாவட்டத் தி.மு.க. அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது போதை பொருள் குறித்து தமிழ்நாடு அரசு மீது பாஜக போலியான குற்றச்சாட்டுகளை பாஜக தெரிவித்ததற்கு பதிலடி கொடுத்தார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு :

“போதைப்பொருட்களைத் தடுப்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் 10.08.2022 அன்று மாநில அளவிலான காவல்துறை அதிகாரிகள், மாவட்ட அதிகாரிகள் கூட்டத்தைக் கூட்டி போதைப்பொருளே தமிழ்நாட்டில் இருக்கக்கூடாது என்பதற்கான நடவடிக்கையை எடுத்தார். கஞ்சா பயிரிடப்படாத பூமியாக உள்ளது தமிழ்நாடு.

பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுப் போதைப்பொருள் தடுப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. போதைப்பொருள் நடமாட்டம் இருந்தால் உடனடியாகத் தடுக்கப்பட்டு, காரணமானவர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது.

கடந்த அ.தி.மு.க ஆட்சிக்காலத்தில் அமைச்சரே குட்கா வியாபாரத்தில் உடந்தையாக இருந்தார் எனக் குற்றம்சாட்டப்பட்டது. அமைச்சராக இருந்தவர் மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி தந்துள்ளார். அப்படிப்பட்ட ஆட்சி அப்போது நடைபெற்றது. தமிழ்நாட்டில் கஞ்சா கடத்தல், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டவர்கள் 14 பேருக்குச் சிவப்புக் கம்பளம் விரித்துத் தங்கள் கட்சியில் சேர்த்துள்ளது பா.ஜ.க. அகில இந்தியளவிலேயே பா.ஜ.க.வில்தான் இதுபோன்ற தொழில்களில் ஈடுபடுபவர்கள் உறுப்பினர்களாக அதிகம் இருக்கிறார்கள்.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் குஜராத். இன்றைக்கு போதைப்பொருள் நடமாட்டம் என்பது அதிகமாக இருப்பது அவரது குஜராத்தில்தான். இப்படி எல்லாவற்றிற்கும் உடந்தையாக இருந்துவிட்டு, மற்றவர்கள் மீது பழிபோடுவதற்கு பெயர்தான் மோடி பார்முலாவா? என கேட்க விரும்புகிறோம். ஆந்திரா, தெலங்கானா, ஒடிஷா, வட கிழக்கு மாநிலங்களில் போதைப்பொருள் பயிரிடப்படுவதாகத் தகவல் உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் அல்ல, தமிழ்நாட்டு மக்கள் மீது தேர்தலுக்காகப் பழி போடுவதை பொறுத்துக்கொள்ளமாட்டார்கள்.

விமான நிலையம், துறைமுகங்களையெல்லாம் தனியாருக்குத் தாரைவார்த்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க அரசு. தனியாருக்குத் தாரைவார்த்தால் கட்டுப்பாடு தனியாரிடத்தில்தான் இருக்கும், அதற்குத்தான் தனியார் மயத்தை எதிர்க்கிறோம். தனியாரிடமிருந்து வாங்கியது அன்றைய ஒன்றிய அரசு, தனியாருக்கு இன்றைய ஒன்றிய அரசு கொடுப்பதற்குப் பெயர் மோடி பார்முலாவா? மோடியிசமா?

2019-இல் 11,418 கிலோ, 2020-இல் 15,144 கிலோ, 2021-இல் 20,431 கிலோ, 2022-இல் 28,381 கிலோ, 2023-இல் 23,364 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 2022-இல் 2,016 வழக்குகள் போடப்பட்டதில் 1,916 வழக்குகள் அதாவது 80% வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளனர். 418 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர். 2023-இல் 3,567 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதில் 2,988 வழக்குகளில் தண்டனை பெற்றுத்தரப்பட்டுள்ளது, 579 வழக்குகளில் விடுதலையாகியுள்ளனர்.

தமிழ்நாட்டு அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் தண்டனை பெற்றுத்தருவதில் தயக்கம் காட்டுவது கிடையாது. வருங்கால சந்ததியினரைப் பாழாக்கிவிடும் என்பதால் போதைப்பொருட்களைத் தடுப்பதற்கு முழுக் கவனம், முழு சக்தியையும் செலுத்தி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர்.

Also Read: SBI-வங்கியா? அல்லது பா.ஜ.க-வின் கிளையா? : இச்செயலை முதலில் தண்டிக்கப்போவது நீதிமன்றமா? மக்கள் மன்றமா?