Tamilnadu
தஞ்சாவூர் மாவட்டத்தில் புதிய வருவாய் வட்டம் உருவாக்கம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு !
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டத்தை புதிதாக உருவாக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதனை அரசு பரிசீலித்த நிலையில், கடந்த சட்டமன்ற தொடரில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து திருவோணம் வருவாய் வட்டத்தை புதிதாக உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியான தமிழ்நாடு அரசின் அறிக்கையில், "தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022 - 2023ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் போது மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், “தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களைச் சீரமைத்து புதிய திருவோணம் வருவாய் வட்டம் உருவாக்கப்படும்” என்னும் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
ஒரத்தநாடு வட்டத்திலுள்ள திருவோணம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், அத்தியாவசியச் சேவைகளான சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, வாரிசுச் சான்று, பட்டா மாற்றம் உள்ளிட்ட பல்வேறு சான்றுகளையும், வருவாய்த் துறையின் பிற சேவைகளையும் பெறுவதற்காக ஏறத்தாழ 34 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரத்தநாடு வட்டத்தின் தலைமையிடத்திற்கு மிகுந்த சிரமத்துடன் வந்து செல்ல வேண்டியுள்ளது.
இதனால் அப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்குப் பொருளாதாரச் செலவுகள் அதிகமாகின்றன. அத்துடன் இந்தச் சேவைகளைப் பெறுவதற்காக அவர்கள் நாள் முழுவதும் செலவிட்டு அலையவும் வேண்டியுள்ளது.ஒவ்வொரு நாளும் பொது மக்களின் துயர்துடைப்பதில் மிகுந்த அக்கறை செலுத்தி வருகின்ற தமிழ்நாடு முதலமைச்சர் திருவோணம் பகுதி மக்களின் சிரமங்கள் தம்முடைய கவனத்திற்கு வந்ததைத் தொடர்ந்து அவற்றை உடனடியாகக் களைவதற்கு முடிவு செய்தார்கள்.
அந்த முடிவைச் செயல்படுத்தும் விதமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய இரண்டு வருவாய் வட்டங்களையும் சீரமைத்து, காவாளப்பட்டி, சில்லத்தூர், திருநெல்லூர், வெங்கரை ஆகிய 4 குறு வட்டங்களையும், 45 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி திருவோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய திருவோணம் வருவாய் வட்டத்தினை உருவாக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். இதற்குரிய அரசாணை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையினால் வெளியிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!