Tamilnadu
“கல்வி ஒன்றே அழியாத சொத்து என்பதற்கு உதாரணம்...” - ஸ்ரீபதிக்கு அமைச்சர் உதயநிதி வாழ்த்து!
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அருகே புலியூர் கிராமத்தை சேர்ந்த ஸ்ரீபதி என்ற பெண், தனது 23-வது வயதில் சிவில் நீதிபதியாக சாதனை படைத்துள்ளார். சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணமான நிலையில், தனது படிப்பை முடித்த கையோடு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவில் நீதிபதிக்கான போட்டி தேர்வுக்கு பயின்று வந்துள்ளார்.
தேர்வு நடைபெறும் அன்று பிரசவ தேதி இருந்ததால், அதற்கு 2 நாட்களுக்கு முன்னர் குழந்தை பெற்று கொண்ட இவர், குழந்தை பிறந்து 2 நாட்களில் மலைக்கிராமத்தில் இருந்து சென்னை வரை காரில் பயணம் செய்து தேர்வு எழுதினார். அவரது விடாமுயற்சியின் பலனாக தற்போது தேர்வில் தேர்ச்சி பெற்று நீதிபதியாக சாதனை படைத்துள்ளார்.
தமிழ் வழி கல்வி கற்று இளம் வயதில் சிவில் நீதிபதியான ஸ்ரீபதிக்கு தற்போது வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீபதிக்கு வாழ்த்து தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தற்போது அமைச்சர் உதயநிதியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு பின்வருமாறு :
“தமிழ்வழி கல்வி கற்று, அயராத உழைப்பினாலும் - கடும் முயற்சியாலும் உரிமையியல் நீதிபதிக்கான போட்டித் தேர்வில் வெற்றி பெற்றுள்ள திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை - புலியூர் கிராமத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின பெண்ணான சகோதரி ஸ்ரீபதிக்கு வாழ்த்துகள்.
தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை என்ற நம் திராவிட மாடல் அரசின் அரசாணையின் மூலமாக சகோதரி ஸ்ரீபதி உரிமையியல் நீதிபதியாகத் தேர்வாகியுள்ளார் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம். குறிப்பாக, குழந்தைப் பேறுக்குப் பின் அடுத்த இரண்டே தினங்களில் தேர்வு என்ற கடினமான சூழலிலும், உயிரைப் பணயம் வைத்து தேர்வுக்காக நெடுந்தூரம் பயணித்த அவரது லட்சிய உறுதி பாராட்டுக்குரியது.
கல்வி ஒன்றே அழியாத சொத்து என்கிற வகையில் மற்றோருக்கு உதாரணமாக திகழ்ந்துள்ள சகோதரி ஸ்ரீபதியின் கனவுகள் வெல்லட்டும் !” என்று குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Also Read
-
பேருந்து கட்டணம் இல்லை : மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு புதிய அறிவிப்பு வெளியிட்ட துணை முதலமைச்சர்!
-
“சென்னையில் 50 ஆண்டுகளாக இருந்த பட்டா பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது!”: துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”பா.ஜ.கவிற்கு வாக்களிக்காவிட்டால் வெளியே நடமாட முடியாது : பீகார் மக்களை மிரட்டிய ஒன்றிய அமைச்சர்!
-
”மக்கள் ஆதரவு இல்லாததால் வாக்குகளை திருடி வெற்றி பெற பார்க்கும் பாஜக” : ராகுல் காந்தி குற்றச்சாட்டு!
-
அ.தி.மு.கவில் இருந்து விலகிய பால் மனோஜ் பாண்டியன் : முதலமைச்சர் முன்னிலையில் தி.மு.கவில் இணைந்தார்!