Tamilnadu
”ஆளுநரின் செயல் திட்டமிட்ட சதியாகும்” : வைகோ கடும் கண்டனம்!
ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும்
சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும் என ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் வருமாறு:-
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி அவர்கள் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கியபோது தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை முழுமையாக வாசிக்காமல் அதில் இடம்பெற்றிருந்த தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் உள்ளிட்ட பெயர்களை தவிர்த்தார்.
மேலும் திராவிட மாடல் ஆட்சி, சமூக நீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், மதநல்லிணக்கம், பெண்ணுரிமை ஆகிய கொள்கைகள் இன்றைய அரசின் அடித்தளமாக அமைந்துள்ளன என்ற பத்தியை உரையில் இருந்து நீக்கிவிட்டு படித்தார். சட்டப்பேரவையில் நாட்டுப்பண் இசைக்கும்போதே அநாகரிகமாக அவையில் இருந்து எழுந்து வெளியேறினார்.
அதைப்போலவே இந்த ஆண்டு இன்றையக் கூட்டத்தொடர் இன்று தொடங்கியபோதும், சட்டப் பேரவையின் மரபுக்கு எதிராக தேசியக் கீதத்தை தொடக்கத்திலேயே இசைக்க வேண்டும் என்ற காரணம் கூறி ஆளுநர் உரையை வாசிக்காமல் முழுமையாக புறக்கணித்து வெளியேறியது கடும் கண்டனத்திற்கு உரியதாகும். சட்டப்பேரவை நிகழ்வு தொடங்கும்போது தமிழ்த்தாய் வாழ்த்தும், நிறைவடையும்போது நாட்டுப்பண் இசைக்கப்படுவதும்தான் தமிழக சட்டப்பேரவையின் நீண்டகால மரபு ஆகும். ஆனால் ஆளுநர் அதனை மாற்றக்கோரியது திட்டமிட்ட சதியாகும்.
பின்னர் ஆளுநர் உரையை சட்டப்பேரவைத் தலைவர் வாசித்து அவைக்குறிப்பேட்டில் இடம்பெற செய்திருப்பது வரவேற்கத்தக்கதாகும். ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக அரசியல் சட்ட நெறிமுறைகளை மீறி தொடர்ந்து செயல்பட்டு வருவது ஏற்றுக்கொள்ளதக்கதல்ல.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
வாகை சூடிய வடக்கு மண்டல சந்திப்பு; கலைஞைரின் கொள்கைப் பேரன் என்பதை செயலால் நிரூபித்து வரும் உதயநிதி!
-
“கலைஞரின் வழக்கத்தை நானும் தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறேன்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
“நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு பெரிய ‘Sports Star’-ஆக நிச்சயம் வருவீர்கள்!” : துணை முதலமைச்சர் உதயநிதி பேச்சு!
-
‘தலைவர்’ இல்லாமல் இயங்கும் தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! : திருச்சி சிவா எம்.பி கண்டனம்!
-
“மெட்ரோ திட்டத்தில் தமிழ்நாட்டிற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசு!”: திமுக எம்.பி கிரிராஜன் கண்டனம்!