Tamilnadu

கலைத் திருவிழா மூலம் 50 மாணவர்களுக்கு வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா - அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவிப்பு!

தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலைத் திருவிழா போட்டிகளில் மாநில அளவில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மாநில அளவில் வெற்றி பெற்ற 1400 மாணவர் மாணவியர்களுக்கு கலையரசி கலையரசன் விருது வழங்கப்பட்டது.

மேலும் விருதாளர்கள் அனைவருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தங்க பேனா பரிசாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு கலையரசன் மற்றும் கலையரசி விருதை வழங்கினர்.

இதைத்தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், “மனிதனை பன்படுத்தும் வல்லமை படைத்தது கலை. இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் அனைத்து மாணவர்களும் கல்வி கற்கும் நிலை ஏற்படுத்தப்பட்டது. மேலும் மாணவருக்கும் ஆசிரியருக்கு இடையே ஒரு பாலமாக இருப்பது கலை பண்பாட்டு திட்டம். பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட கலை திருவிழாவில் கடந்த ஆண்டு 27 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு 40 லட்சம் மாணவர்கள் இந்த கலை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

சாதி மதம் கடந்து சகோதர உணர்வுடன் இருக்க வேண்டும் என்று நாங்கள் இன்று உறுதி மொழி ஏற்றோம். அதன் ஒரு பகுதியாக கலைத்துறையில் அனைவரும் சகோதரத்துவ உணர்வுடன் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் இந்த கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த கலைத் திருவிழா மூலம் இந்த ஆண்டு 50 மாணவர்களை வெளிநாட்டிற்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்வோம். அவர்களை நானே அழைத்து செல்லவுள்ளேன்.

கல்வி மட்டுமின்றி தங்களின் கலைத்திறனை வெளிப்படுத்தும் நோக்கில் தமிழ்நாடு அரசு இதுபோன்ற சிறந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன் மூலம் எங்களின் கலைத்திறன் மேம்படுவதாகவும் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.” என்றார்.

Also Read: நாளை தொடங்கப்படுகிறது 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்டம் : திட்டத்தின் விவரம் என்ன ?