Tamilnadu
திருவள்ளுவர்-அண்ணா- காமராசர் உள்ளிட்ட 7 விருதுகளை அறிவித்தார் முதலமைச்சர்: விருது பெறுபவர்கள் யார்?
பன்னூறு ஆண்டுகளாக வற்றாத படைப்புகளைக் கொண்டு, சீரிளமையோடு இலங்கி வரும் தமிழுக்கும், தமிழ்மொழி, பண்பாட்டு வளர்ச்சிக்குத் தொண்டாற்றிடும் தமிழ்த்தாயின் திருத்தொண்டர்களுக்குத் தமிழால் விளங்கிடும் தமிழ்நாடு அரசு பல்வேறு விருதுகளையும் சிறப்புக்களையும் அளித்து, அவர்தம் தமிழ்த்தொண்டுக்குப் பெருமை சேர்த்து வருகிறது.
அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கு 1983ஆம் ஆண்டிலிருந்து திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை, பேச்சு போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவச் செல்வங்களுக்கு விழா எடுத்து ரூபாய் 3 லட்சம் பரிசு வழங்கியும் உலகத் திருக்குறள் மாநாடு மாநில அளவில் இரு முறை நடத்தி தமிழ்த் தொண்டாற்றி வரும் தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிகளுக்கு 2024ஆம் ஆண்டுக்கான அய்யன் திருவள்ளுவர் விருதினை வழங்குகிறது.
பேரறிஞர் அண்ணா அவர்களின் முதன்மைத் தொண்டர் என பாராட்டப்பட்டவரும் 18 வயது முதல் திராவிட இயக்கத்தில் ஈடுபட்டு பல்வேறு போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றவருமான பத்தமடை பரமசிவம் அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பேரறிஞர் அண்ணா விருதினை வழங்குகிறது.
தேசியத் தமிழ்க் கவிஞர் பேராயம், சிலப்புச் செல்வர் ம.பொ.சி அவர்களைக் கொண்டு இளங்கோ இலக்கிய மன்றம் ஆகிய அமைப்புகளைத் தொடங்கியவரும் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு. உ. பலராமன் அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பெருந்தலைவர் காமராசர் விருதினை வழங்குகிறது.
தமிழ்நாடு அரசின் முதன்மையான பல்கலைக்கழகங்கள் கேரள மாநில அரசின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பாடத்திட்டத்தில் இடம் பெறும் அளவிற்கு கவிதைகளைப் படைத்த கவிஞர் பழனி பாரதி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான மகாகவி பாரதியார் விருதினை வழங்குகிறது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் முத்தரசனாரின் "கற்கண்டு கவிதை கேட்டு கழிப்பேறுவகை கொண்டேன்" என்று பாராட்டைப் பெற்றவரும் தமது 92ஆவது அகவையிலும் தனித்தமிழ் வேட்கை அகலாமல் அருந்தமிழ்ப்பணியாற்றி வரும் எழுச்சிக் கவிஞர் ம. முத்தரசு அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான பாவேந்தர் பாரதிதாசன் விருதினை வழங்குகிறது.
பல்வேறு நாடுகளின் ஆவணக் காப்பகங்களில் தகவல்களைத் திரட்டி வரலாற்று நூல்களை எழுதியவரும் சோழமண்டல கடற்கரையை முழுமையாக ஆய்வு செய்தவருமான பேராசிரியர் எஸ். ஜெயசீல ஸ்டீபன் அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான தமிழ்த் தென்றல் திரு. வி. க. விருதினை வழங்குகிறது.
தமிழ் இலக்கணத்தை மாணவர்கள் எளிமையாக கற்கும் வகையில் பாடல்களாக யாத்தளித்த முனைவர் இரா. கருணாநிதி அவர்களுக்கு 2023ஆம் ஆண்டுக்கான முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதினை வழங்குகிறது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகையாக ரூபாய் இரண்டு இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரை வழங்கியும் பொன்னாடை அணிவித்தும் சிறப்பிக்கப்பெறுவார்கள். இவ்விருதுகள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் திருக்கரங்களால் வழங்கப்படவுள்ளன.
Also Read
-
551 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பாட்டா... 5,000 மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி முதலமைச்சர் அசத்தல்!
-
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க அதிரடி நடவடிக்கை - சிறப்பு முயற்சிகள் எடுத்த திராவிட மாடல் அரசு!
-
“நெல் சாகுபடியில் சாதனை... நெல் கொள்முதல் இலக்கினை உயர்த்த வேண்டும்” : பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!