Tamilnadu

”பா.ஜ.க நிர்வாகிக்காக அப்பாவி விவசாயிகளை மிரட்டும் ED" : கொதித்தெழுந்த வைகோ!

சேலம் மாவட்டம் அப்பம்ம சமுத்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட காரமடை திட்டு பகுதியை சேர்ந்த விவசாயிகள் கண்ணையன் மற்றும் கிருஷ்ணன். இவர்களுக்கு அப்பகுதியில் சுமார் ஆறரை ஏக்கரில் விளைநிலம் அமைந்துள்ளது. இவர்களின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பா.ஜ.கவின் சேலம் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என்பவர் தொடர்ந்து பல்வேறு அச்சுறுத்தல்களையும் கொலை மிரட்டல்களையும் விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்திலும் நீதிமன்றத்திலும் வழக்குகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் விவசாயிகளுக்கு சில மாதங்களுக்கு முன்பு அமலாக்கத்துறையில் இருந்து சம்மன் ஒன்று வந்தது. விவசாயிகள் இருவரின் சாதி பெயரை குறிப்பிட்டு அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனில் சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் விசாரணை செய்ய வேண்டும் என்றும் நேரில் ஆஜராகவில்லை என்றால், சட்டவிரோத பணம் பரிமாற்றம் சட்டத்தின் கீழ் இருவருக்கும் சொந்தமான ஆறரை ஏக்கர் நிலத்தை ஜப்தி செய்வோம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து சம்பந்தப்பட்ட விவசாயிகள் இருவரும் வழக்கறிஞர் பிரவீனா என்பவரின் உதவியுடன், சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர். படிக்கத்தெரியாத, வயதான விவசாயிகளுக்கு உதவியாகச்சென்ற வக்கறிஞர் பிரவீனாவை அமலாக்கத்துறை அலுவலகத்திற்குள் அனுமதிக்காமல், அப்பாவி விவசாயிகள் இருவரையும் உள்ளே அழைத்துச்சென்று விசாரணை என்ற பெயரில் மிரட்டல் விடுத்துள்ளனர். உணவிற்கே வழியில்லாத தங்களுக்கு சொத்து அதிக அளவில் இருப்பதாகவும், பணம் வைத்துள்ளதாகவும் கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தியது வேடிக்கையாக இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

எதிர்க்கட்சிகளை மிரட்டுவதற்கு அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி வரும் பாஜக, தற்போது தங்களது கட்சி நிர்வாகிகளுக்கு எதிராக செயல்படும் ஏழை எளிய மக்களையும் மிரட்டத் தொடங்கிவிட்டதாக அரசியல் தலைவர்களும், சமூக ஆர்வலர்ளும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அமலாக்கத்துறை தற்போது, பாஜகவின் அடியாட்களாகவே மாறிவிட்டதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது.

இந்நிலையில், விவசாயிகளை மிரட்டும் வகையில் செயல்படுகிறது அமலாக்கத்துறை என வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, "ஒன்றிய பா.ஜ.க அரசு ஜனநாயக விரோதமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் நாட்டின் பன்முகத் தன்மையைச் சிதைத்துவிட்டது. அரசியல் சட்டம் 370வது பிரிவை அடியோடு அகற்றி காஷ்மீர் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கை துரோகத்தை ஒன்றிய அரசு செய்துள்ளது.

எதிர்க்கட்சிகளை அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகளைப் பயன்படுத்தி ஒன்றிய அரசு மிரட்டி வருகிறது. தற்போது பா.ஜ.க நிர்வாகிக்காக அமலாக்கத்துறை செயல்படுவது என்பது சேலத்தில் அப்பாவி விவசாயிகளைச் சம்மன் அனுப்பியது மூலம் தெரியவந்துள்ளது. ஒன்றிய அரசின் கைக்கூலியான அமலாக்கத்துறை விவசாயிகளை மிரட்டும் வகையில் செயல்படுவது விவசாயிகளுக்குச் செய்யும் துரோகமாகும்" என தெரிவித்துள்ளார்.

Also Read: அப்பாவி விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை : போலிஸ் விசாரணை - சேலத்தில் நடந்தது என்ன?